நடப்பு 2024 ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் மிரட்டிவரும் விராட் கோலி இதுவரை 316 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவராக இருந்துவரும் நிலையிலும், அவருடைய ஸ்டிரைக் ரேட் போதுமானதாக இல்லை என விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
146.29 ஸ்ட்ரைக் ரேட்டில் 316 ரன்கள் விராட் கோலி அடித்திருக்கும்போதும், அவர் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறக்கூடாது என்றும், ஐபிஎல் தொடரில் பல இந்திய வீரர்கள் நல்ல ஸ்டிரைக்ரேட்டில் விளையாடுவோருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து கருத்துக்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன.
அப்படி டி20 உலகக் கோப்பை அணியில் முன்னாள் இந்திய கேப்டனான விராட் கோலி இடம் பெறக்கூடாது என்று கூறிவரும் பலரும், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங் போன்ற சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டுடன் உள்ளோரை அணிக்கு பரிந்துரைக்கின்றனர்.
இந்நிலையில் விராட் கோலி டி20 உலகக்கோப்பையில் இடம்பெறவேண்டுமா வேண்டாமா என்பது குறித்து பேசிய கோலியின் சக RCB அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல், “மெகா கோப்பைக்கான இந்திய அணியில் கோலி தேர்வு செய்யக்கூடாது” என்று லேசான தொனியில் கூறியிருக்கிறார். தான் விளையாடிய வீரர்களில் சிறந்த கிளட்ச் வீரர் விராட் கோலிதான் என்று கூறியுள்ள அவர், ஆஸ்திரேலியா அவருக்கு எதிராக விளையாடாமல் இருப்பதே சிறந்தது என்று கூறியுள்ளார்.
ESPN உடன் பேசிய மேக்ஸ்வெல், “நான் இதுவரை விளையாடிய எதிரணி வீரர்களில் சிறந்த கிளட்ச் வீரர் என்றால் அது விராட் கோலிதான். 2016 டி20 உலகக் கோப்பையின் போது மொஹாலியில் எங்களுக்கு எதிராக அவர் விளையாடிய இன்னிங்ஸ்தான் எனக்கு எதிராக அவர் விளையாடிய சிறந்த இன்னிங்ஸ். போட்டியில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய அவரது விழிப்புணர்வு அபாரமானது. இந்தியா அவரை டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாது என்று நம்புகிறேன், ஏனெனில் அவர் எதிராக வராமல் இருப்பதுதான் ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் நல்லது” என்று கூறினார்.
மேலும் இந்திய அணியில் பல வீரர்கள் சிறந்த வீரர்களாக இருக்கும்போது விராட் கோலியை சுற்றி இதுபோன்ற பேச்சுக்கள் வருவது இயல்புதான் என்று பேசிய அவர், “1.5 பில்லியன் மக்கள் இந்தியாவில் இருப்பதனால் இதுபோன்ற கேள்விகள் எழுவதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. இந்தியாவில் பாதி பேர் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்கள்தான் என்று நான் கருதுகிறேன் (சிரிக்கிறார்). இந்தியா ஒரு கடினமான அணி. 2024 ஐபிஎல் தொடரில் விளையாடும் இந்தியாவின் சிறந்த டி20 வீரர்களைப் பாருங்கள்... அவர்கள் தனித்துவமான வீரர்கள். அதனால் ஒவ்வொரு வீரரின் மீதும் ‘நாம் டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற வேண்டும்’ என்ற அழுத்தம் இருக்க வேண்டும்” என்று மேக்ஸ்வெல் மேலும் கூறினார்.