மைதானத்தில் களமிறங்கிவிட்டால் விராட் கோலியின் விக்கெட் மீதே எதிரணி பந்துவீச்சாளர்களின் கண் இருக்கும். ஆனால் விராட்டின் விக்கெட்டை வீழ்த்துவதென்பது அத்தனை சாதாரணமும் அல்ல. அவருடன் மல்லுக்கு நிற்க வேண்டும், சண்டை செய்ய வேண்டும். சில நேரங்களில் பந்துவீச்சாளர்களின் யுக்தி எடுபடலாம், பல நேரங்களில் எடுபடாமலும் போகலாம்.
ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை, இதுவரை 10 பந்துவீச்சாளர்களின் முதல் விக்கெட்டாக விராட் இருந்துள்ளார். நேற்றும் அதுவே நடந்தது. விக்கெட்டை வீழ்த்தியவர் பெயர் மணிமாறன் சித்தார்த். தமிழ்நாட்டு வீரர்!
விராட் கோலிக்கு இடதுகை Orthodox சுழற் பந்துவீச்சாளரின் பந்துவீச்சில் சிக்கல் உண்டு. இடது கை சுழற் வீச்சாளர்களுக்கு எதிரான அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் என்பது 88.42 மட்டுமே. கடந்த காலங்களில் கேசவ் மகாராஜ், ஷகிப் அல் ஹசன், துனித் வெல்லலகே போன்றோர் விராட் கோலிக்கு தொல்லை கொடுத்துள்ளனர். விராட்டின் இந்த பலவீனத்தை தனது பலமாக மாற்றினார் ராகுல்.
நேற்றையப் போட்டியில் ஆர்சிபி இன்னிங்ஸில், லக்னோ சார்பாக மணிமாறன் சித்தார்த் முதல் ஓவரை வீசினார். மணிமாறன் சித்தார்த், இடதுகை Orthodox சுழற்பந்துவீச்சாளர்தான். முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இரண்டாவது ஓவரை குருணால் பாண்டியா வீசினார். 10 ரன்கள் கொடுத்தார். மூன்றாவது ஓவர் மீண்டும் மணிமாறன் சித்தார்த். இந்த ஓவரில் கொஞ்சம் அதிகமாகவே, அதாவது 12 ரன்களைக் கொடுத்தார் மணிமாறன். நான்காவது ஓவரை நவீன் உல் ஹக் வீச, ஐந்தாவது ஓவருக்கு மீண்டும் வந்தார் மணிமாறன்.
முதல் பந்தை பவுண்டரி ஆக்கினார் விராட். ஏறத்தாழ 100 கிமீ வேகத்தில் வீசப்பட்ட பந்து. டீப் பாயிண்ட்டில் தனக்கே உரிய பாணியில் தட்டிவிட்டார் விராட். அடுத்த பந்துதான் அவரை வெளியேற்றியது. மெதுவாக வீசப்பட்ட பந்து. கோலி ஆட வேண்டும் என்பதற்கான தூண்டில். அதேபோல் கோலி ஆட, பந்து எட்ஜ் ஆனது. மேலே சென்ற பந்தை பேக்வார்டு பாயிண்டில் நின்றிருந்த படிக்கல் பத்திரமாக பிடித்தார். விராட் அவுட்.
எத்தனை இளைஞர்களது கனவு அது. தமிழ்நாட்டின் மணிமாறன் அதை சாத்தியப்படுத்தினார். 7 முதல்தர போட்டிகளில் இதுவரை 27 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் மணிமாறன். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 26 விக்கெட்களையும், டி20 கிரிக்கெட்டில் 19 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.