5 கோப்பைகளை வென்ற முதல் அணி, சிஎஸ்கே அணியால் பைனலில் வெல்லவே முடியாத ஒரே அணி, அதிரடி வீரர்களை கொண்ட ‘நங்கூரம் போன்ற’ ஒரு அணி... இப்படியெல்லாம் ஒரு காலத்தில் மற்ற ஐபிஎல் அணிகளுக்கெல்லாம் சிம்மசொப்பனமாக விளங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் 7 தோல்விகளை பெற்று படுமோசமான ஒருநிலையில் தத்தளித்து வருகிறது.
பும்ரா இல்லாத கடந்த சீசனில் கூட சிறப்பாக செயல்பட்ட அந்த அணி, நடப்பு ஐபிஎல்லில் பும்ரா, சூர்யகுமார் யாதவ் முதலிய ஸ்டார் வீரர்கள் அனைவரும் இருந்தும் கூட சொதப்பி வருகிறது. இதில் அதிசயம் என்னவென்றால் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முதல் வீரராக பும்ரா இருந்துவரும் நிலையில், அவருடைய மும்பை அணி மட்டும் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உறங்கிவருகிறது.
எங்களுக்கும் ஆர்சிபி அணிக்கும்-தான் போட்டியே என ஆடிவரும் மும்பை இந்தியன்ஸ் அணி, “முதல்ல யாரு வெளிய போறாங்கனு பாப்போமா” எனுமளவு படுமோசமான ஒரு ஆட்டத்தை ஆடிவருகிறது.
பரபரப்பான ஒரு மோதலில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சொந்த மண்ணில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, லக்னோ அணியின் தரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து மோசமான தொடக்கத்தை அமைத்தது.
ரோகித் 4 ரன்னிலும், சூர்யகுமார் 10 ரன்னிலும், திலக் வர்மா 7 ரன்னிலும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, 5வது வீரராக களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 0 ரன்னில் ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். 27 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை இந்தியன்ஸ் அணி நிலைகுலைய, 5வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த இஷான் கிஷன் மற்றும் வதேரா இருவரும் அணியை மீட்டுவர போரடினர்.
என்னதான் விக்கெட்டை பறிகொடுக்காமல் இந்த ஜோடி நிலைத்து ஆடினாலும், டைட்டாக பந்துவீசிய லக்னோ அணி ரன்களை விட்டுக்கொடுக்காமல் கட்டுப்படுத்தியது. 53 பந்துகளில் 53 ரன்கள் என அடித்த இந்த ஜோடியை, இஷான் கிஷனை வெளியேற்றி பிரித்துவைத்தார் ரவி பிஸ்னோய்.
மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய வதேரா 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விரட்டி ரன்களை எடுத்துவர, கடைசியாக வந்த டிம் டேவிட் 3 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்டு 35 ரன்கள் அடிக்க, 20 ஓவர் முடிவில் 144 ரன்களை மட்டுமே எடுத்தது மும்பை அணி.
145 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணிக்கு, தொடக்க வீரர் அர்ஷின் குல்கர்னியை 0 ரன்னில் வெளியேற்றிய துஷாரா அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் என்னதான் விரைவாகவே விக்கெட்டை இழந்தாலும், அடுத்து கைக்கோர்த்த கேஎல் ராகுல் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் இருவரும் நிலைத்து நின்று விளையாடினர்.
ஒருபுறம் 3 பவுண்டரிகள் 1 சிக்சர் என துவம்சம் செய்த கேஎல் ராகுல் 28 ரன்னில் வெளியேறிய, மறுமுனையில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என வெளுத்துவாங்கிய ஸ்டோய்னிஸ் அரைசதமடித்து தனியாளாக மும்பை அணியை தோல்விக்கு அழைத்துச்சென்றார். மும்பை அணிக்கு தண்ணிகாட்டிய ஸ்டோய்னிஸை 62 ரன்னில் நபி வெளியேற்ற, அடுத்துவந்த வீரர்களுக்கு எதிராக தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மும்பை அணி கம்பேக் கொடுத்தது.
நிலைத்து நின்று ஆடிய ஆயுஸ் பதோனி சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட்டானது, கேப்டன் கேஎல் ராகுலை அதிருப்தி அடைய வைத்தது. விக்கெட் கீப்பர் இஷான் பந்தை பிடித்து அடிக்கும் போது, ஆயுஸ் பதோனியின் பேட் க்றீஸுக்கு உள்ளே வந்த போதும் அவுட் கொடுக்கப்பட்டது. அது எப்படி அவுட் என்ற விரக்தியை கேஎல் ராகுல் வெளிப்படுத்தினார்.
இந்த அம்பயரின் முடிவும் மும்பை அணியை டிரோல் மெட்டீரியலாக மாற்றியது. இதே போலான ஒரு ரன் அவுட், பெண்கள் மும்பை அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு அவுட் இல்லை என கொடுக்கப்பட்டது. உங்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா “umpires indians" என ரசிகர்கள் ட்ரோல் செய்துவருகின்றனர். ஆனால் பதோனி பேட்டை தரையில் வைக்கவில்லை என்பதால் அவுட் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் என்னதான் இடையில் மும்பை அணி கட்டுப்படுத்தினாலும், குறைவான ஸ்கோர் என்பதால் அவர்களால் தோல்வியை தடுத்து நிறுத்த முடியவில்லை. முடிவில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற லக்னோ அணி, மும்பை அணியை ஹாட்ரிக் தோல்விக்கு அழைத்துச்சென்றது.
10 போட்டிகளில் விளையாடி 7-ல் தோல்வியடைந்திருக்கும் மும்பை அணி, 10வது இடத்துக்கு ஆர்சிபி அணியுடன் போட்டியிட்டு வருகிறது. அதேநேரத்தில் ஒரு அசத்தலான வெற்றியை பதிவுசெய்த லக்னோ அணி, சிஎஸ்கே அணியை பின்னுக்கு தள்ளி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.