2024 டி20 உலகக்கோப்பை தொடரானது லீக் போட்டிகளின் இறுதி சுற்றில் இருக்கிறது. விளையாடிய 20 அணிகளில் “இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், அமெரிக்கா’ முதலிய 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.
துரதிருஷ்டவசமாக “நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை” முதலிய சாம்பியன் அணிகள் படுதோல்வியை சந்தித்து உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.
இந்நிலையில், நியூசிலாந்து அணி தன்னுடைய 4வது மற்றும் கடைசி லீக் போட்டியில் பப்புவா நியூ கினி அணிக்கு எதிராக விளையாடிவருகிறது. நியூசிலாந்தின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடர்தான் தன்னுடைய கடைசி டி20 உலகக்கோப்பை என கூறியிருக்கும் நிலையில், வெற்றியுடன் வெளியேறும் முனைப்பில் நியூசிலாந்து களம்கண்டது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்ததால் கினி அணி முதலில் பேட்டிங் செய்தது. பவுலிங்கில் அசுர பலம் கொண்ட அணியான நியூசிலாந்து அணி விக்கெட் வேட்டை நடத்தி 78 ரன்னுக்கு கினி அணியை ஆல் அவுட் செய்தது.
டிரென்ட் போல்ட் தன்னுடைய கடைசி டி20 உலகக்கோப்பை போட்டியில் 4 ஓவரில் 14 ரன்களுடன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் லக்கி பெர்குசன் வீசிய 4 ஓவர்கள் தான் மொமண்ட் ஆஃப் தி மேட்ச்சாக அமைந்தது. நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன் வீசிய 4 ஓவரையும் ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் மெய்டன் ஓவராக வீசி வரலாற்று சாதனை படைத்தார். அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 0 எகானமி ஓவரை வீசி சாதனை படைத்துள்ளார் பெர்குசன்.
T20 WC -ல் மிகவும் சிக்கனமான 4-ஓவர்:
* 3/0 - லாக்கி பெர்குசன் (NZ) vs PNG, தாரூபா, 2024*
* 3/4 - டிம் சவுத்தி (NZ) vs UGA, தாரூபா, 2024
* 2/4 - ஃபிராங்க் நசுபுகா (UGA) vs PNG, கயானா, 2024
* 4/7 - Anrich Nortje (SA) vs SL, நியூயார்க், 2024
* 2/7 - ட்ரெண்ட் போல்ட் (NZ) vs UGA, தாரூபா, 2024
79 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 12.2 ஓவர்களில் 79 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் கான்வே 35, மிட்செல் 19, வில்லியம்சன் 18 ரன்கள் எடுத்தனர். நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய போதும் நியூசிலாந்து அணி அடுத்தடுத்த இரண்டு வெற்றிகளுடன் தொடரை முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறது.