2024 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் கம்பேக் கொடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவருகிறார். பண்ட் தலைமையில் டெல்லி அணி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் பந்துவீச்சில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியிருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் வெற்றிபெற்று மற்ற 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.
டெல்லி அணிக்காக முதலிரண்டு போட்டிகளில் விளையாடிய குல்தீப் யாதவ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்கவில்லை. சென்னை அணிக்கு எதிராக டெல்லி வெற்றிபெற்றாலும், கொல்கத்தா அணிக்கு எதிராக 272 ரன்களை விட்டுக்கொடுத்து மோசமான பந்துவீச்சை டெல்லி பதிவுசெய்தது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி ரசிகர்கள் குல்தீப் யாதவை நிச்சயம் எதிர்ப்பார்த்திருந்தார்கள்.
ஆனால் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டுள்ள குல்தீப் யாதவ், தொடர்ந்து விளையாடுவதற்கு மறுக்கப்பட்டு ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிறிக்இன்ஃபோ வெளியிட்டிருக்கும் தகவலின் படி, “இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக குல்தீப் யாதவ் ஓய்வில் இருந்துவருகிறார். ஆனால் அவர் திரும்பிவரும் செய்திகுறித்து இன்னும் டெல்லி கேபிடல்ஸ் அணி உறுதியாக தெரிவிக்கவில்லை. குல்தீப் விளையாடுவதற்கு சிரமப்படுவதால் தொடர்ந்து ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் தொடருக்கு முன் முடிவடைந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய குல்தீப் யாதவ், கடைசி போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் 19 விக்கெட்டுகளுடன் தொடரை முடித்தார். டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முன்னணி ஸ்பின்னராக பார்க்கப்படும் குல்தீப் யாதவை பிசிசிஐ தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
ஒருவேளை அவர் காயத்தில் இருந்து வெளிவராத பட்சத்தில், டி20 உலகக்கோப்பைக்காக பாதுகாக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சில போட்டிகளுக்கு பிறகு குல்தீப் திரும்பிவருவார் என்ற நம்பிக்கையுடன் டெல்லி அணி இருந்துவருகிறது.