4 DUCK OUT; 2 Catches Miss; என்னதான்யா நடக்குது??பைனலில் கெத்தாக KKR.. SRHக்கு மறக்கமுடியாத நாள்

Qualifier 1ல் கொல்கத்தா நைட் ரைடஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய நிலையில், கொல்கத்தா அணி வெற்றி பெற்று நேரடியாக பைனலுக்கு சென்றுள்ளது.
kkr vs srh
kkr vs srhpt web
Published on

KKR vs SRH

இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் அதிரடி என்றால் எந்த அணி ஞாபகத்திற்கு வரும் என்பது ரசிகர்களைப் பொருத்தது. ஆனால் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடரில் அதிரடி என்றால் கொல்கத்தா நைட் ரைடஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும்தான் ஞாபத்திற்கு வரும். ‘நாங்க ரெண்டு பேரு; எங்களுக்கு பயம்னா என்னன்னு தெரியாது’ என எதிரணிகளை சம்பவம் செய்துவிட்டு இரு அணிகளும் qualifier 1 போட்டியில் நேருக்கு நேர் மோதின.

அதிரடியாக வீழ்ந்த அதிரடி ஆட்டக்காரர்கள்

அஹமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடந்து களமிறங்கிய அந்த அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தனர் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள். அதிரடிக்கு பேர் போன ட்ராவிஸ் ஹெட்டிற்கு எதிராக தனது பந்துவீச்சை தொடங்கினார் ஸ்டார்க். ஆனால், இரண்டாவது பந்திலேயே ரன்கள் ஏதும் எடுக்காமல் போல்ட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார் ஹெட்.

ஏற்கெனவே பஞ்சாப்பிற்கு எதிரான கடந்த போட்டியிலும் முதல் பந்திலேயே போல்ட் ஆகி இருந்தார் ட்ராவிஸ் ஹெட். நடப்பு ஐபிஎல் தொடரில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக திணறியுள்ளார் ஹெட். இதுவரை 7 போட்டிகளில் 3ல் இடதுகை வேகப்பந்துவீச்சாளருக்கு எதிராக தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.

kkr vs srh
RCB vs RR Eliminator - இரு அணிகளுக்கும் நடந்த தலைகீழ் மாற்றங்கள்... என்னதான் ஆகப்போகிறது போட்டியில்?

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், ஹைதராபாத் ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்யும் அபிஷேக் சர்மா 4 ரன்களில் நடையைக் கட்டினார். தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது ஹைதராபாத் ரசிகர்களுக்கு.தற்போதைய ஐபிஎல் தொடரில் வேகப்பந்து வீச்சாளருக்கு எதிராக 14 போட்டிகளில் 10 முறை வீழ்ந்துள்ளார் அபிஷேக்.

இதன்பின் அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல கட்டமைத்தார் ராகுல் திரிபாதி. ஆனால் மறுமுனையில் விக்கெட் விழுந்துகொண்டே இருந்தது. வந்தார்கள் வீழ்ந்தார்கள் சென்றார்கள். நிதிஷ் ரெட்டி ஒரு பந்தில் வெளியேற அடுத்த பந்திலேயே ஷபாஷ் அகமதுவும் ரன்கள் ஏதும் எடுக்காமல் முதல்பந்திலேயே வெளியேறினார்.

இதன்பின்னர் நிலையாக ஆடிய ராகுல் திரிபாதியுடன், க்ளாசன் இணைந்தார். இருவரது அதிரடியில் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. எல்லாம் சரியாக சென்றுகொண்டிருந்தபோது, வருண் சக்கரவர்த்தி சுழலில் வீழ்ந்தார் ‘க்ளாசிக்’ க்ளாசன். எதிர்பார்த்த ஒன்றுதான்; ஏனெனில் தற்போதைய தொடரில் மட்டும் 13 போட்டிகளில் 6 முறை சுழலுக்கு எதிராக அவுட் ஆகியுள்ளார் க்ளாசன். 32 ரன்களை எடுத்த நிலையில் நடையைக் கட்டினார். ராகுல் திரிபாதி

kkr vs srh
“CSK இல்லைன்னா என்ன, தமிழர்கள் இருக்காங்க..” - Playoff-ன் 4 அணிகளிலும் தமிழக வீரர்கள்.. ஒரு பார்வை!

மனமுடைந்த ராகுல் திரிபாதி

இருந்தபோதும் ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு இல்லை என்றாலும் டீசண்டான இலக்கை எதிரணிக்கு நிர்ணயிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது. அதை தகர்த்தார் சொந்த அணியைச் சேர்ந்த அப்துல் சமத். சுனில் நரைன் வீசிய பந்தை, ஸ்ட்ரைக்கில் இருந்த சமத் backward பாயிண்டில் தட்ட, சரியாக அதைப் பிடித்த ரஸல் உடனடியாக ஸ்டம்பிற்கு எறிந்தார். முதலில் ‘கம் இன்’ என்ற குரல் கேட்டது; உடனடியாக ‘ஸ்டாப்’ என்ற குரலும் கேட்டது. ஆனால் அதற்குள்ளாக திரிபாதி பாதி கிணறை தாண்டி இருந்தார். சமத்தும் bowling end பக்கம் சென்றுவிட ரன் அவுட் ஆனார் திரிபாதி. மனிதர் உடைந்து போய்விட்டார். கண்ணீருடன் படிகட்டில் உட்கார்ந்து இருந்ததைப் பார்த்தால் யார் மனதும் கரைந்துவிடும்.

பின் வந்த வீரர்களில் கம்மின்ஸ் மட்டுமே 30 ரன்களை சேர்த்தார். சன்விர் சிங், புவனேஷ்வர் குமார் என இருவரும் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேற 19.3 ஓவர்களில் ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 159 ரன்களை மட்டுமே எடுத்தது.

மரண பயம் காட்டிய கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களில் அனைவரும் விக்கெட் வேட்டை ஆடி இருந்தனர். அதிகபட்சமாக ஸ்டார்க் 3 விக்கெட்களையும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர்.

kkr vs srh
“டெஸ்ட்டிலிருந்து விரைவாகவே ஓய்வை அறிவிக்க இதுதான் காரணம்” - 10 ஆண்டுகளுக்குப் பிறகு பேசிய தோனி!

160 எனும் எளிய இலக்கு

160 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா அணி. ஏதோ லீக் போட்டியில் விளையாடுவதைப் போல தொடக்கம் முதலே அதிரடி காட்டி ஆடினர் கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள். முதல் 3 ஓவர்களில் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. 3 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 44 ரன்களைக் குவித்தது கொல்கத்தா. 4 ஆவது ஓவருக்கு வந்த நடராஜன் அதிரடியாக ஆடிய குர்பாஸை வெளியில் அனுப்பினார். இதன் பின்பாவது ஆட்டம் ஹைதராபாத் பக்கம் சாயுமா என எதிர்பார்க்கப்பட்டது. 'வாய்ப்பே இல்ல ராஜா' என்றனர் ஹைதராபாத் வீரர்கள். இதில் ஆறுதலான விஷயம் கம்மின்ஸ் பந்தில் நரைன் வீழ்ந்தது மட்டும்தான்.

ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் எங்கு போட்டாலும் பந்து பவுண்டரிகளுக்கும் சிக்சர்களுக்கும்தான் பறந்தன. இதற்கு நடுவே ஸ்ரேயாஸ் ஐயர் கொடுத்த இரு கேட்ச்களை வேறு தவற விட்டனர். இதற்கு பின் அவர் ஆடிய ஆட்டத்தில் அஹமதாபாத்தின் அனல் பறந்தது. ஒருபுறம் வெங்கடேஷ் ஐயர் விட்டு விளாசி அரைசதம் கடக்க, ஸ்ரேயாஸ் ஐயரும் அரைசதம் அடித்து அடுத்த பந்திலேயே சிக்ஸ் அடித்து மேட்சை முடித்தார். இறுதியில் கொல்கத்தா அணி 13.4 ஓவர்களிலேயே 164 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4 ஆவது முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ளது கொல்கத்தா அணி.

kkr vs srh
எக்ஸ் தளம் மீது கோபமா.. இன்ஸ்டாவை அதிகம் விரும்புவது ஏன்? தோனி சொன்ன ருசிகர பதில்!

ஹைதராபாத்திற்கு இன்னொரு வாய்ப்பு

ஹைதராபாத் அணிக்கு இன்று எதுவுமே சரியாக அமையவில்லை. பவர்ப்ளேவிலேயே 45 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. அணியின் ஸ்கோரை சிறப்பாக கட்டமைத்து வந்த திரிபாதி அநியாயமாக ரன் அவுட் ஆனார். அணியில் நான்கு பேட்டர்கள் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறியுள்ளனர். பந்துவீச்சிலும் இதே நிலைதான் தொடர்ந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் கொடுத்த இரு கேட்ச்களை வேறு தவற விட்டனர். அவர் மேட்சையே முடித்துவிட்டார். இந்தியாவையே சைலண்ட் ஆக்கிய கம்மின்ஸின் காதுகள் அஹமதாபாத்தில் ரசிகர்களின் சத்தத்தில் கண்டிப்பாக வலித்திருக்கும்.

எப்படி இருந்தாலும் ஹைதராபாத்திற்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது. சிறப்பாக அதை பயன்படுத்துவார்கள் என நம்புவோம். பெங்களூருவிற்கும் ராஜஸ்தானிற்கும் போட்டி நடக்க உள்ளது. கொல்கத்தா ஹைதராபாத் போட்டியை விட ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்க்கும் ஒரு போட்டி என்றால் அது பெங்களூரு ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டிதான். என்ன ஆகிறதென பார்ப்போம்.

kkr vs srh
MI தோல்வி | ரோகித், ஹர்திக் உள்ளிட்ட வீரர்களுடன் ஆலோசனை.. உரிமையாளர் சொன்ன சீக்ரெட்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com