கிட்டதட்ட 6 ஆண்டுகளுக்கு முன், ஈடன் கார்டன் மைதானத்தில் ஒரு சம்பவம் நடந்தது. கொல்கத்தா ரசிகர்களைக் கேட்டால், அது சம்பவம் இல்லை. சரித்திரம் என்பார்கள். அதுவே, பெங்களூர் ரசிகர்களைக் கேட்டால், அது சரித்திரம் இல்லை. தரித்திரம் என்பார்கள். அதைப் பற்றி நினைத்துப் பார்க்க கூட விரும்பவில்லை என்பார்கள். ஆனால், உண்மையில் ஆர்.சி.பி அணி எப்போது விளையாடினாலும் அப்போது எல்லாம் அந்த மேட்ச் அவர்களது கண் முன்னால் வந்து போகும். ஒவ்வொரு முறையும் அணியின் ஸ்கோர் 49-ஐ தாண்டும்போது, பெங்களூரில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு கொஞ்சம் அதிகரித்திருக்கும். ஏனெனில், ஒட்டுமொத்த பெங்களூரும் அப்போது பெருமூச்சு விடும். இப்படி காலத்துக்கும் அழியாத காயத்தை ஏற்படுத்திய கொல்கத்தாவை, அதே ஈடன் கார்டன் மைதானத்தில் சந்தித்தது பெங்களூர். `பங்காளி நாங்க வெறியாகி அடிச்சு பார்த்தது இல்லையே. இன்னைக்கு பார்ப்பீங்க. அடிக்குற அடியில, சுக்கு சுக்கா உடையப்போகுது கொல்கத்தா டீம்' என ராயல் சேலஞ்சர்ஸ் ரசிகர்கள் உறுமிக்கொண்டு திரிந்தார்கள். கொல்கத்தா வழக்கம்போல் அமைதியாகவே காத்திருந்தது.
டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் டூப்ளெஸ்ஸி, கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். `ஓ, இந்த முறை அவிய்ங்களை 49-க்கு ஆல் அவுட் பண்ண போறாமா? சரிணே சரிணே' என ஆர்.சி.பியன்ஸ் ஆர்வ.சி.பியன்ஸாக மாறினார்கள். ஆப்கானிஸ்தான் அணியின் ஒப்பனிங் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸும், வெங்கடேஷ் ஐயரும் கொல்கத்தா அணியின் கணக்கை துவங்க களமிறங்கினர். சிராஜ், முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரில் ரஹ்மானுல்லாஹ் ஒரு பவுண்டரி அடித்தார். சிராஜ் ஒரு பவுண்டரி கொடுத்தார். அவர் வீசிய அகலப்பந்து பவுண்டரியில் போய் விழுந்தது.
2வது ஓவரை வீசவந்தார் வில்லி. குர்பாஸும், வெங்கடேஷும் வில்லி வீசிய பந்தை அடிக்க முடியாமல், நட்ட நடு கிரவுண்டில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருக்க, வெறும் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. மீண்டும் வந்தார் சிராஜ். இம்முறை குர்பாஸ் இரண்டு பவுண்டரிகள் அடித்தார். சிராஜ் ஒரு பவுண்டரிதான் கொடுத்தார். பைஸ் பட்டு பவுண்டரிக்குள் சென்று விழுந்தது.
4வது ஓவரை வீசவந்தார் வில்லி. ஓவரின் இரண்டாவது பந்தில் ஸ்டெம்ப் தெறித்தது. ஜருகண்டி ஜருகண்டி என வெங்கடேஷ் ஐயரை பெவிலியனுக்கு அணுப்பிவைத்தார் வில்லி. அடுத்து களமிறங்கினார் மந்தீப் சிங். மீண்டும் ஸ்டெம்ப் தெறித்தது. அந்த ஓவரை டபுள் விக்கெட் மெய்டனாக முடித்து கொல்கத்தா அணியின் வில்லனாக மாறினார் வில்லி. `இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமேய்' என நெட்டி முறித்தனர் பெங்களூர் ரசிகர்கள். சிராஜ் ஓவரில் சிராஜ்தான் பேட்ஸ்மேன்களை விட அதிக பவுண்டரிகள் அடிக்கிறார் என ஆத்திரமாகி, ஆகாஷ்தீப் பக்கம் திரும்பினார் டூப்ளெஸ்ஸி.
ஆகாஷ் வீசிய ஓவரின் 2வது பந்து, ஆகாஷத்தில் சிக்ஸருக்கு பறந்தது. ரஹ்மானுல்லாஹ் அட்டகாசமாக ஆடினார். இன்னும் கொடுமையாக இது நோ பால் வேறு. இந்த ஓவரில் ஒரு நோபால், ஒரு அகலப்பந்து, லெக் பைஸில் நான்கு ரன்கள் என வாரி வழங்கி, சிராஜுக்கு போட்டியாக மாறி நின்றார் ஆகாஷ். மீண்டும் பந்து வீச வந்தார் வில்லி. ஓவரின் 3வது பந்து, மிட்விக்கெட்டில் பவுண்டரிக்கு பறக்கவிட்டார் குர்பாஸ். பவர்ப்ளேயின் முடிவில், 47/2 என தவழ்ந்துகொண்டிருந்தது கொல்கத்தா. இன்னும் 2 ரன்னுக்குள்ள 8 விக்கெட்டையும் கழட்டினா நல்லாருக்கும் என கவலையுடன் காத்திருந்தார்கள் பெங்களூர் ரசிகர்கள். ஆமாம், ஆர்.சி.பியன்ஸ் என்பவர்கள் அசாத்தியங்கள் யதார்த்ததில் நடக்கும் என நம்புபவர்கள்.
7வது ஓவரை வீசவந்தார் ப்ரேஸ்வெல். முதல் பந்திலேயே முன்னாள் கேப்டன் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி கிளம்பினார் இந்நாள் கேப்டன் நிதீஷ் ரானா. ரிங்கு சிங் களமிறங்கினார். 1 விக்கெட்டையும் வீழ்த்தி, 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார் ப்ரேஸ்வெல். சபாஷ் அகமது வீசிய 8வது ஓவரில், ஒரு பவுண்டரியை பெருக்கிவிட்டார் குர்பாஸ். சபாஷ் குர்பாஸ் என கொல்கத்தா ரசிகர்கள் கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்தார்கள். ப்ரேஸ்வெல் வீசிய 9வது ஓவரில், இரண்டாவது பந்தை லாங் ஆனில் சிக்ஸர், ஐந்தாவது பந்தை மிட்-விக்கெட்டில் ஒரு ஃபோர் என துரத்திவிட்டார் குர்பாஸ். 10வது ஓவரை வீசவந்தார் கர்ண் சர்மா. அந்த ஓவரில், இன்னொரு சிக்ஸரை துடைத்தெறிந்தார் ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ். அந்த சிக்ஸருடன் தனது அரை சதத்தையும் நிறைவு செய்தார்.
11வது ஓவரை வீசவந்தார் ஹர்ஷல் படேல். அவரைப் பார்த்து ஆர்.சி.பி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்ததை கொல்கத்தா ரசிகர்கள் அதிகம் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஓவரின் கடைசிப்பந்தில் ஒரு பவுண்டரியை தட்டினார் ரிங்கு சிங். கர்ண் வீசிய 12வது ஓவரில் ரஹ்மனுல்லாஹ் காலி. ஆகாஷ் தீப்பிடம் கேட்ச் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார். 44 பந்துகளில் 57 ரன்கள் என பொறுப்பான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. கொல்கத்தா அணியின் கட்டப்பா ரஸல் களமிறங்கினார். முதல் பந்தே அவுட். கோலியிடம் கேட்ச் கொடுத்துவிட்டு கோவமாய் கிளம்பினார். ஆட்டம் பெங்களூர் கைக்கு வந்துவிட்டதென நினைத்து குஸ்காவை கேன்சல் செய்து பிரியாணி ஆர்டர் போட்டார்கள் பெங்களூர் ரசிகர்கள். ஹாட்ரிக் பந்தை சந்தித்தார் தாகூர். இன்சைட் எட்ஜாகி பவுண்டரிக்கு விரைந்தது.
ஆகாஷ் தீப் போட்ட 13வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். கடைசிப்பந்தை மீண்டும் நோபாலாக வீச, மாட்னான்டா கோபாலு என ஃப்ரீஹிட் பந்தை லாங் ஆனில் சிக்ஸருக்கு ஏவிவிட்டார் தாக்கூர். கர்ண் சர்மா வீசிய 14வது ஓவரின் கடைசி பந்தில், இன்னொரு பவுண்டரியை விரடிட்னார் தாக்கூர். மீண்டும் ப்ரேஸ்வெல் வந்தார். லாங் ஆன், டீப் மிட் விக்கெட் திசைகளில் இரண்டு சிக்ஸர்களை அடுத்தடுத்த பந்துகளில் சொருவி மிரட்டினார் தாக்கூர். 15 ஓவர்கள் முடிவில், 140/5 என கெத்தான நிலையில் இருந்தது கொல்கத்தா. எப்படி இவ்ளோ ரன் ஏறுச்சு என தலையை சொறிந்தார்கள் ஆர்.சி.பியன்ஸ். வில்லியைத் தவிர வேறு ஆள் இல்லையென உணர்ந்து மீண்டும் அவரை பந்து வீச இறக்கினார் டூப்ளெஸ்ஸி. அப்போதும், ஒரு பவுண்டரியைத் தட்டிவிட்டார் தாக்கூர். 17வது ஓவரை வீசவந்தார் ஹர்ஷல். 2வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி, தனது அதிவேக அரை சதத்தை நிறைவு செய்தார். அதே ஓவரின் 5வது பந்தில், இன்னொரு பவுண்டரி.
மீண்டும் வந்தார் சிராஜ். ஒரு லெக் பைஸ், ஒரு அகலப்பந்து, ஒரு நோபால் என தன்னால் முடிந்த உதவிகளை செய்தார் சிராஜ். ஒரு பவுண்டரி, பிறகு அந்த நோபாலில் ஒரு சிக்ஸர் என தாக்கூரும் தன்னால் முயன்றதை செய்தார். கோலி இந்த ஆட்டத்தில் சதம் அடிக்க வேண்டுமென்றால், எதிரணியினர் இன்னும் கொஞ்சம் ரன் அடித்து இலக்கை செட் செய்தாக வேண்டும் என்கிற இதயம் நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஹர்ஷல் படேலை அழைத்துவந்தார் டூப்ளெஸ்ஸி. 1 பவுண்டரி, 2 சிக்ஸர் என நெருக்கி செய்தார் ரிங்கு. பரிதாபமாக, கடைசிப்பந்தில் அவர் அவுட்! சிராஜ் விசிய கடைசி ஓவரில் இரண்டு பவுண்டரிகள் கொல்கத்தாவுக்கும், தாகூரின் விக்கெட் பெங்களூருக்கும் கிடைத்தது. ஆட்டத்தின் முடிவில், 204/7 என நினைத்துப் பார்க்காத ஸ்கோரை எட்டியிருந்தது கொல்கத்தா. `புள்ளை பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு நான் என்ன கனவா கண்டேன்' என சோகமானார்கள்.
இலக்கை எட்டிப்பிடிக்க கோலியும் டுப்ளெஸ்ஸியும் இன்னிங்ஸை ஆரம்பிக்க, உமேஷ் பந்து வீச வந்தார். முதல் பந்து பவுண்டரியில் போய் விழுந்தது. அப்படியே ஓவரின் கடைசிப்பந்தும் பவுண்டரிக்கு சென்று விழுந்தது. விரட்டினா கோலி. சௌத்தீ வீசிய 2வது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது. உமேஷ் வீசிய 3வது ஓவரில், எக்ஸ்ட்ரா கவர் மேல் ஒரு பவுண்டரியைத் தூக்கி அடித்தார் டூப்ளெஸ்ஸி. 4வது ஓவரின் முதல் பந்தில் ஓர் பவுண்டரி. அடுத்த பந்தில் 3 ரன்கள் ஓட்டம். அதன்பிறகு, டூப்ளெஸ்ஸியின் வேற லெவல் ஆட்டம். மிட் ஆனில் ஒரு சிக்ஸர், டீப் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி, மிட் விக்கெட்டில் ஒரு பவுண்டரி என களத்தில் கதகளி ஆடினார் டூப்ளெஸ்ஸி. கொல்கத்தா பாவம் என பரிதாபப்பட்டார்கள் பெங்களூர் ரசிகர்கள்.
5வது ஓவரை வீசவந்தார் நரைன். கோலியின் தடுப்பைத் தாண்டி ஸ்ப்டெம்ப் எகிறியது. 6வது ஓவரை வீசவந்தார் வருண் சக்கரவர்த்தி. டூப்ளெஸ்ஸியின் தடுப்பதைத் தாண்டி ஸ்டெம்ப் எகிறியது. பெங்களூர் ரசிகர்கள். தூக்கிப்போட்டு விளையாடப்பட்ட குழந்தை, மகிழ்ச்சியில் உயரமாக தூக்கிப்போட்டு, கடைசியில் பிடிப்பதற்கு கீழே ஆளில்லாமல் போன கதையாக நொந்துப்போய் கிடந்தது பெங்களூர் அணியும் அதன் ரசிகர்களும். பவர் ப்ளேயின் முடிவில், 50/2 என நின்று கொண்டிருந்தது ஆர்.சி.பி. இங்கே 49-ஐ தாண்டியது மட்டுமே ஒரே ஆறுதல். நரைன் வீசிய 7வது ஒவரில் 3 ரன்கள் மட்டுமே. 8 ஓவரை வீசவந்தார் வருண். 2வது பந்தில் மேக்ஸ்வெல்லின் தடுப்பைத் தாண்டி ஸ்ப்டெம்ப் எகிறியது. அடுத்து, தினேஷ் கார்த்திக் இறங்குவார் என பார்த்தால், ஹர்ஷல் படேல் இறங்கினார். இதென்ன ஒரு மிஸ்ட்ரியா இருக்கு என பெங்களூர் ரசிகர்களே தலையை சொரிய, ஹர்ஷல் உண்மையிலேயே மிஸ்ட்ரி ஸ்பின்னரின் வலையில் சிக்கினார். தடுப்பைத் தாண்டி ஸ்ப்டெம்ப் எகிறியது.
9வது ஒவரை வீசினார் நரைன். ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுகிறேன் என ஃபீல்டரின் கையில் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார் சபாஷ் அகமது. வருண் வீசிய 10வது ஓவரில், ஒரு பவுண்டரி கிடைத்தது ப்ரேஸ்வெல்லுக்கு. 10 ஓவர் முடிவில் 69/5 என பரிதாபகரமான நிலையில் இருந்தது ஆர்.சி.பி. இப்போது, வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக சுழற் பந்து வீச்சாளர் சுயாஷை இம்பாக்ட் வீரராக களமிறக்கியது கொல்கத்தா. சுயாஷ் வீசிய முதல் ஓவரின் 3வது பந்து, லாங் ஆனில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ப்ரேஸ்வெல். மேக்ஸ்வெல் செய்யாததை ப்ரேஸ்வெல் செய்யவேண்டும். ஆல் இஸ் வெல் என மனதை தேற்றிக்கொண்டார்கள் பெங்களூர் ரசிகர்கள்.
பேட்டிங்கில் புரட்டியெடுத்த தாக்கூர், பவுலிங் வீச வந்தார். முதல் பந்தை, தினேஷ் கார்த்திக் டீப் மிட் விக்கெட் திசையில் பவுண்டரிக்கு தட்டிவிட்டார். ஆனால், மூன்றாவது பந்தில் ப்ரேஸ்வெல் அவுட்டானார். எக்ஸ்ட்ரா பவுன்ஸ் பந்தை சரியாக அடிக்காமல், ஷார்ட் ஃபைன் திசையிலிருந்த ரானாவிடன் வீணாக கேட்ச் கொடுத்து அவுட்டானார். சிராஜுக்கு பதில், அனுஜ் ராவத்தை இம்பாக்ட் ப்ளேயராக இறக்கியது ராயல் சேலஞ்சர்ஸ். சுயாஷ் வீசிய 13வது ஒவரில், ராவத், கார்த்திக் இருவருமே அவுட்டாகி நடையைக் காட்டினார்கள். பெங்களூர் ரசிகர்கள் இடிந்துப்போய் அமர்ந்தார்கள்.
தாக்கூர் வீசிய 14வது ஓவரில், வில்லி ஒரு பவுண்டரியை அடித்தார். இப்படி தனியாக அடித்துக் கொண்டிருக்கும் வில்லியைப் பார்க்கையில், பெங்களூர் ரசிகர்களுக்கு பரிதாபமாகிவிட்டது. அடுத்த ஓவரில், கர்ண் சர்மா விக்கெட்டை கழட்டினார் சுயாஷ். அப்படி இப்படி உருட்டி, ஒரு வழியாக 16வது ஓவரின் முடிவில் 100 ரன்களைக் கடந்திருந்தது ஆர்.சி.பி. சுயாஷ் வீசிய 17வது ஓவரில் வில்லி ஒரு பவுண்டரியும், ஆகாஷ் தீப் ஒரு சிக்ஸரும் அடித்தனர். ஆகாஷை நினைத்து, கையிலே ஆகாசம் பாடலை மனதுக்குள் பாடினார்கள் பெங்களூர் ரசிகர்கள். கடைசியில், 18வது ஓவரின் 4வது பந்தில், அவரின் விக்கெட்டும் சரிந்தது. கொல்கத்தா 81 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை சுருட்டியது. கடந்த மேட்ச்சை வென்றதிலிருந்து கப் ஜெயிக்கின்ற கனவில் மிதந்துக்கொண்டிருந்த பெங்களூர் ரசிகர்களை, கவனமாக தரையில் இறக்கிவிட்டது பெங்களூர் அணி!