KKRvPBKS | தக்க சமயத்தில் ஃபார்முக்கு வந்த ரஸல்... மீண்டும் வெல்ல வைத்த ரிங்கு..!

5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி, ப்ளே ஆஃபில் நாங்களும் இருக்கோம் என்பதை நங்கூரம் போட்டது நச்சென சொன்னது கொல்கத்தா. 23 பந்துகளில் 42 ரன்கள் அடித்து ஃபார்முக்கு திரும்பிய ரஸலுக்கு, ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
Andre Russell
Andre RussellSwapan Mahapatra
Published on

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

முன்பெல்லாம் ஐ.பி.எல் தொடர்களில் `என்ன அவன் அடிக்க, அவன் என்ன அடிக்க' என அடிகள் எல்லாம் ஒரு பக்கமே விழும். ஆனால், இம்முறையோ அடிகள் எல்லாம் மாறி மாறி விழுகிறது. புள்ளிப்பட்டியலில் பத்தாவது இடத்திலிருக்கும் அணியும், முதல் இடத்திலிருக்கும் கடைசி 5 போட்டிகளில் 4 போட்டிகள் வென்றிருக்கின்றன. இந்த இடியாப்ப சிக்கலில், நேற்றிரவு போடபட்டது ஓர் கூடுதல் முடிச்சு. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தாவும் பஞ்சாப்பும் மல்லுகட்டின. டாஸ் வென்ற தவன், பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

Dhawan
DhawanSwapan Mahapatra

ப்ரப்சிம்ரனும் தவனும் பஞ்சாப்பின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசவந்தார் அரோரா. ஒரே ஓவரில் மூன்று பவுண்டரிகள் விளாசி அசத்தினார் ப்ரப்சிமரன். ஹர்ஷ்த் ராணாவின் இரண்டாவது ஓவரில், தவன் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். ஆனால், கடைசிப்பந்தில் சிம்ரன் அவுட். தலைக்கு மேல் வந்த பந்தை, தட்டி எகிறவைத்து மீண்டும் அதை பிடித்தார் கீப்பர் குர்பாஸ். `நல்லா சர்க்கஸ் காட்ற மேன் நீ' என கொல்கத்தா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அரோராவின் 3வது ஓவரில், தவன் ஒரு பவுண்டரி அடித்தார். ஹர்ஷித்தின் 4வது ஓவரில், ராஜபக்‌ஷா அவுட். இம்முறை கேட்ச் பிடித்ததும் அதே குர்பாஸ். ரஸல் வீசிய 5வது ஓவரில், லிவிங்ஸ்டோன் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்தார். அதில் ஒரு நோ பாலும் அடங்கும். அதே ஓவரில் தவனும் ஒரு பவுண்டரியை சாத்த, 19 ரன்கள் ஒரே ஓவரில். அடுத்த ஓவரை வீசினார் வருண் சக்கரவர்த்தி. 3வது பந்தில் அபாய ஆட்டகாரர் லிவிங்ஸ்டோன் அவுட். எல்.பி.டபுள்யு முறையில் அவுட்டாகி, ஒரு ரிவ்யூவையும் எடுத்துகொண்டு புறப்பட்டார். ஓவரின் கடைசிப்பந்தில், கேப்டன் தவன் ஒரு பவுண்டரி அடிக்க, பவர்ப்ளே முடிவில் 58/3 என நல்ல ஸ்கோர் அடித்திருந்த பஞ்சாப், விக்கெட்களையும் இழந்திருந்தது.

Varun Chakravarthy | Rana
Varun Chakravarthy | RanaSwapan Mahapatra

சுயாஷின் 7வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே. வருணின் 8வது ஓவரில் தவன் ஒரு பவுண்டரியைத் தட்டினார். சுயாஷின் 9வது ஓவரில் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார் ஜித்தேஷ் சர்மா. 10வது ஓவரை வீசவந்தார் நரைன். வெறும் 3 ரன்கள் மட்டுமே. 10 ஓவர் முடிவில், 82/3 என கியரை குறைத்திருந்தது பஞ்சாப். சுயாஷின் 11வது ஓவரில், ஜித்தேஷ் இன்னொரு சிக்ஸரை வெளுத்துவிட்டார். தவனும் தன் பங்குக்கு ஒரு பவுண்டரியை கணக்கில் ஏற்றினார். நரைனின் 12வது ஓவரில், தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார் கேப்டன் தவன்.

மீண்டும் வந்தார் வருண் சக்கரவர்த்தி. ஜித்தேஷ் சர்மா அவுட்! இம்முறை கேட்ச் பிடித்தது அதே குர்பாஸ்! நரைனின் 14வது ஓவரில், ஒரு சிக்ஸரை தூக்கிவிட்டு தனது அரைசதத்தை நிறைவு செய்தார் தவன். 15வது ஓவரை, கேப்டன் நிதீஷ் ராணாவே வீசினார். கேப்டன் தவனின் விக்கெட்டைத் தூக்கினார். லாங் ஆனில் கேட்ச் கொடுத்துவிட்டு வெளியேறினார் கேப்டன் தவன். அந்த தவன் போனால் என்ன, இந்த தவன் இருக்கிறேன் என, அதே ஓவரில் ஒரு பவுண்டரியை விளாசினார் ரிஷி தவன். 15 ஓவர் முடிவில், 124/5 என உருட்டிக்கொண்டிருந்தது பஞ்சாப்.

Rishi Dhawan
Rishi DhawanSwapan Mahapatra

நரைனின் 16வது ஓவரில் பவுண்டரிகள் ஏதுமின்றி 7 ரன்கள் மட்டுமே கிடைத்தது. வருணின் 17வது ஓவரில், ரிஷி தவன் ஒரு சிக்ஸரை வெளுத்தார். அம்புட்டுதேன்! எந்த கரப்பான் பூச்சி கண் பட்டதோ, அதே ஓவரில் க்ளீன் போல்டானார். சுயாஷ் வீசிய 18வது ஓவரில், சுட்டி கரண் காலி. இம்முறை கேட்ச் பிடித்ததும் அதே குர்பாஸ்! அரோராவின் 19வது ஓவரில், ப்ரார் இரு பவுண்டரிகளும், ஷாரூக் ஒரு பவுண்டரியும் அடித்தார். ரொம்ப மெதுவாக ஓவர்களை வீசியதால், கடைசி ஓவரில் நான்கு பேர் ஃபீல்டர்களை மட்டுமே நிறுத்த முடியும் என நித்தீஷ் ராணாவிடம் கறாராக சொல்லிவிட்டார் அம்பயர். ஹர்ஷீத் ராணாவின் கடைசி ஓவரை, சிக்ஸருடன் துவங்கினார் ஷாரூக் கான். அடுத்த இரண்டு பந்துகளும், பவுண்டரிகள். 5வது பந்து, ப்ரார் ஒரு சிக்ஸரை வெளுக்க, 179/7 என ஓரளவுக்கு நல்ல ஸ்கோருடன் இன்னிங்ஸை முடித்தது பஞ்சாப் கிங்ஸ்.

ஒரு வழியாக தங்கள் அணிக்கான ஓப்பனர்களை கண்டறிந்துவிட்டது கொல்கத்தா. ஜேசன் ராயும் - குர்பாஸும் அணியின் இன்னிங்ஸை துவங்க, முதல் ஓவரை வீசினார் ரிஷி தவன். வெறும் 5 ரன்கள் மட்டுமே. அர்ஷ்தீப்பின் 2வது ஓவரில், ஒரு பவுண்டரியுடன் சேர்த்தே 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ரிஷி தவனின் 3வது ஓவரில், ஜேசன் ராய் இரண்டு பவுண்டரிகளை கொளுத்தினார். அர்ஷ்தீப்பின் 4வது ஒவரை, சிக்ஸருடன் துவங்கினார் குர்பாஸ். அடுத்த பந்தே, பவுண்டரி. அடே ஓவரில், ஜேசனும் ஒரு பவுண்டரி அடித்தார். ராஜபக்‌ஷாவுக்கு பதில் இம்பாக்ட் வீரராக களமிறங்கிய எல்லீஸ், 5வது ஓவரை வீசினார். ஓவரின் 4வது பந்து, குர்பாஸ் காலி. அவுட் என தனக்கே தெரிந்தும், சும்மா இருந்த ரிவியூவையும் தட்டிவிட்டுப் போனார். என்ன காரணமென புரியவில்லை. 6வது ஓவரை வீசினார் சாம் கரண். ராணா ஒரு பவுண்டரியும், ராய் இரு பவுண்டரிகளும் அடித்தனர். பவர்ப்ளேயின் முடிவில் 52/1 சிறப்பாகவெ தொடங்கியிருந்தது கொல்கத்தா அணி.

 Jason Roy | Rahmanullah Gurbaz
Jason Roy | Rahmanullah Gurbaz Swapan Mahapatra

லிவிங்ஸ்டோனின் 7வது ஓவரில், தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை அடித்தார் ஜேசன் ராய். 8வது ஓவரை வீசினார் ஹர்ப்ரீத் ப்ரார். ஜேசன் ராய் விக்கெட் காலி. எல்லீஸின் 9வது ஓவரில், 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். பாம்பு (எ) ராகுல் சாஹரின் 10வது ஓவரில் 3 ரன்கள். ஆக, 10 ஓவர் முடிவில் 76/2 என பள்ளத்தாக்கை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது கொல்கத்தா அணி. அப்போதுதான் வந்தார் லிவிங்ஸ்டோன். முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிகள் விளாசிய நித்தீஷ் ராணா, 3வது பந்தை சிக்ஸருக்கே பார்சல் செய்தார். மீண்டும் வந்த பாம்பு சாஹர், 6 ரன்கள் கொடுத்தார். சாம் கரனின் 13வது ஓவரில், இரண்டு பவுண்டரிகளை வெளுத்துவிட்டார் கேப்டன் ராணா. மீண்டும் வந்தது பாம்பு. இம்முறை ராணா ஒரு பவுண்டரியை தட்டிவிட்டார். பந்த அடிக்க போராடிக்கொண்டிருந்த வெங்கி, அவுட்டும் ஆனார். எல்லீஸின் 15வது ஓவரில், ஒரு பவுண்டரியுடம் சேர்த்தே 6 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 15 ஓவர் முடிவில் 122/3 என பள்ளத்தாக்கின் விளிம்பில் சென்றது நின்றது கொல்கத்தா. பின்னால் நின்று எட்டி உதைக்க தயாரானது பஞ்சாப்.

16வது ஒவரின் முதல் பந்தில், தனது அரைசதத்தை கடந்தார் கேப்டன் ராணா. அடுத்த பந்தே அவுட்! பாவத்த! 24 பந்துகளில் 51 ரன்கள் வேண்டும். ரிங்கு சிங் களத்தில் இருக்கிறார் எனும் ஒற்றை நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள் கொல்கத்தா ரசிகர்கள். எல்லீஸின் 17வது ஓவரில் ரஸல் ஒரு பவுண்டரி, ரிங்கு ஒரு சிக்ஸரை வெளுத்துவிட்டனர். அர்ஷ்தீப்பின் 18வது ஓவரில், ரஸல் ஒரு பவுண்டரி, ரிங்கு ஒரு பவுண்டரி அடித்தனர். சாம் கரண் வீசிய 19வது ஓவரில், மூன்று பிரம்மாண்ட சிக்ஸர்களை பறக்கவிட்டார் ரஸல். அரண்டுபோனது பஞ்சாப் அணி! கடைசி 6 பந்துகளில் 6 ரன்கள் தேவை.

Rinku Singh
Rinku SinghPTI

சிறுவர் சிங், கடைசி ஓவரை வீசவந்தார். முதல் பந்து பவுன்சரில், ரன் ஏதுமில்லை. 2வது பந்தில், ரஸல் ஒரு சிங்கிள் தட்டினார். 3வது பந்து, ரிங்கு ஒரு சிங்கிளை தட்டினார். 4வது பந்து ரஸல் இரண்டு ரன்களை ஓடினார். 5வது பந்து, மிஸ் செய்துவிட்டு ரஸல் ஓட, கீப்பர் எடுத்து பவுலரிடம் எறிய, பவுலர் ஸ்டெம்பில் எறிந்தார். ரஸல் அவுட்! கடைசிப்பந்து, 2 ரன்கள் எடுத்தால் வெற்றி. ரிங்கு சிங் ஒரு பவுண்டரி அடித்தார். மீண்டும் ஒருமுறை, கடைசிப்பந்தில் கொல்கத்தாவை வெற்றியடைய செய்தார் ரிங்கு. 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி, ப்ளே ஆஃபில் நாங்களும் இருக்கோம் என்பதை நங்கூரம் போட்டது நச்சென சொன்னது கொல்கத்தா. 23 பந்துகளில் 42 ரன்கள் அடித்து ஃபார்முக்கு திரும்பிய ரஸலுக்கு, ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com