சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் திணறடித்தனர்.
அபிஷேக் சர்மா, ஹெட், திரிப்பாதி என அடுத்தடுத்து ஒற்றை இலக்கில் வெளியேறினர். ஹைதராபாத் அணியில் கேப்டன் கம்மின்ஸ் மட்டுமே 24 ரன்களை எடுத்திருந்தார். 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 113 ரன்களை மட்டுமே ஹைதராபாத் வீரர்கள் எடுத்தனர்.
சிறப்பாக பந்துவீசிய கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் கொத்துக்கொத்தாக விக்கெட்களை வீழ்த்தினர். ரஸல் 3 விக்கெட்களையும், ஹர்ஷித் ராணா, ஸ்டார்க் தலா 2 விக்கெட்களையும், வைபவ் அரோரா, நரைன், வருண் சக்கரவர்த்தி தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர்.
114 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. சுனில் நரைன் 6 ரன்களில் வீழ்ந்தாலும், குர்பாஸ்(39), வெங்கடேஷ் ஐயர்(52)* இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 10.3 ஓவர்களிலேயே கொல்கத்தா அணி 114 ரன்களை எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹைதராபாத் அணி பேட்டர்கள் நிலையாக ஆடி இன்னும் 50 முதல் 60 ரன்களை எடுத்திருந்தார்களானால் குவாலிபயர் 2ல் ராஜஸ்தான் அணி போட்டி போல் முடிவுகள் அமைந்திருக்கலாம். ஆனால், பைனல் போட்டியை முழுக்க முழுக்க தனக்கு சாதகமாக அமைத்துக் கொண்டது கொல்கத்தா அணி.
பெங்களூர் அணிக்கு எதிரானப் போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் (287) அடித்து சாதனை படைத்திருந்தது ஹைதராபாத் அணி.
கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டியில் குறைவான ஸ்கோர் அடித்து மோசமான சாதனையும் படைத்தது ஹைதராபாத் அணி!
ஹைதராபாத் அணியில் ஒருவர் கூட 25 ரன்களை எட்டவில்லை. அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்தார்.
தொடர் முழுவதும் சிக்ஸர் மழை பொழிந்த SRH அணி கொல்கத்தாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இரண்டு சிக்ஸர் மட்டுமே அடித்தது!
அதிக ஐபிஎல் கோப்பைகளை வென்ற மூன்றாவது பெரிய அணியாக மாறியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!