நடப்பு டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்ற உற்சாகத்துடன், தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்துள்ளது. அந்தப் பதவிக்காக கவுதம் கம்பீரின் பெயர் முன்னிலையில் இருப்பதாக பிசிசிஐ வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. என்றாலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
அதேநேரத்தில், டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றபிறகு பேட்டியளித்த ராகுல் டிராவிட், “நான், அடுத்த வாரத்தில் இருந்து பணி இல்லாமல் இருக்கப் போகிறேன். எனக்கு யாராவது வேலை கொடுங்கள்” எனக் கிண்டலாகச் சொல்லியிருந்தார்.
இதையடுத்து, ராகுல் டிராவிட்டை ஐபிஎல் அணிகள் தங்களது பயிற்சியாளராக்க சில அணிகள் போட்டிபோட்டு வருகின்றன. அதன்படி, கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகப் பதவியேற்றால், அவர் ஐபிஎல் அணியில் தொடர முடியாது. இதன் காரணமாக புதிய பயிற்சியாளர்களை தேடும் பணியில் கொல்கத்தா அணியும் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக தெரிகிறது. இதனால் ராகுல் டிராவிட்டை கம்பீருக்கு பதில் பயிற்சியாளராக நியமிக்க அந்த அணியும் தீவிரம் காட்டி வருகிறது.
மேலும் டி20 உலகக் கோப்பையை வென்றதால் ராகுல் டிராவிட்டின் வருகை, கொல்கத்தா அணியை மேலும் பலமாக்கும் என்று அந்த அணி நிர்வாகம் நம்புகிறது. ஏற்கெனவே சாம்பியன் பட்டத்தை தற்போது வென்றுள்ள கொல்கத்தா அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக வந்தால், அது மேலும் பலத்தைக் கொடுக்கும் என அது நம்புகிறது. அத்துடன், குடும்பச் சூழ்நிலை காரணமாகத்தான் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் தாம் நீடிக்க விரும்பவில்லை என ராகுல் பிசிசிஐயிடம் கூறியதாகத் தகவல் வெளியானது. காரணம், ஆண்டு முழுவதும் இந்திய அணியுடன் பயணம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருக்க வேண்டும். ஆனால் ஐபிஎல் தொடரில் அதற்கு அவசியமே இல்லை. வருடத்தில் 3 மாதங்கள் மட்டும் பயிற்சியாளராக இருந்தால் போதும். இதைக் கருத்தில்கொண்டே, ஐபிஎல் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2016 முதல் என்சிஏ இயக்குநர், யு-19 மற்றும் இந்தியா ஏ ஆகிய அணிகளின் பயிற்சியாளராகச் செயல்பட்ட ராகுல் டிராவிட் 2024 டி20 உலகக் கோப்பையையும் வென்ற அனுபவத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 121 பேர் பலியான ஹத்ராஸ் சம்பவம்| 855 பக்கங்கள் கொண்ட அறிக்கை.. வெளியான புது தகவல்!