நடப்பு ஐபிஎல் தொடர் அடுத்தகட்டத்தை நோக்கி நடைபோட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று (ஏப்ரல் 28) நடைபெற்ற 46-வது லீக் போட்டியில் சென்னையும் ஹைதராபாத்தும் மோதின. இதில், 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சென்னை அணி, புள்ளிப் பட்டியலிலும் 3-வது இடத்திற்கு முன்னேறியது. சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டாலும், அவ்வப்போது முன்னாள் கேப்டனான டோனியும் களத்தில் ஃபீல்டிங் செட் செய்வதில் கவனம் செலுத்துகிறார். அப்படி நேற்று அவர் கட்டமைத்த ஃபீல்டிங்கில்தான் ஹைதராபாத் அணி தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் வீழ்ந்தார். அந்தப் போட்டியில் 2வது ஓவரை துஷார் தேஷ்பாண்டே வீசினார்.
அந்த ஓவரின் 5வது பந்தின்போது விக்கெட் கீப்பரான டோனி, பவுண்டரி எல்லையில் நின்றிருந்த டேரில் மிட்செலை கொஞ்சம் முன்னோக்கி நகர்ந்து நிற்குமாறு கூறினார். அவரும் வந்து அப்படியே நின்றார். அப்போது, 5வது பந்தைத் தூக்கியடித்த டிராவிஸ் ஹெட், டோனி விரித்து வைத்த வலையில் சிக்கினார். ஆம், டேரில் மிட்செல் அவர் அடித்த பந்தை கேட்ச் பிடித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். அவர் ஆட்டமிழந்தது அவ்வணியின் உரிமையாளரான காவ்யா மாறனுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அதுவும், டோனியின் ஃபீல்டிங் செட்டில் டிராவிஸ் ஹெட் பெவிலியன் திரும்பியது, காவ்யா மாறனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, ஐபிஎல் தொடரிலேயே சன்ரைசர்ஸ் அணி அதிக ரன்களைக் குவிக்கக் காரணமாக இருந்தவர் டிராவிஸ் ஹெட் என்பது குறிப்பிடத்தக்கது.