ஐசிசி நடத்தும் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை தொடரானது வங்கதேசத்தில் நடத்தப்பட ஏற்கனவே திட்டமிடப்பட்டது. அக்டோபர் 3 முதல் 20 வரை விளையாட திட்டமிடப்பட்டிருக்கும் நிகழ்வில், 10 அணிகள் பங்கேற்று 23 போட்டிகளில் 18 நாட்கள் விளையாடவிருக்கின்றன. போட்டிகளானது வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய கிரிக்கெட் ஸ்டேடியம் மற்றும் மற்றும் சில்ஹெட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடத்தப்பட இருந்தது.
இந்நிலையில், இடஒதுக்கீட்டு பிரச்னையால் ஏற்பட்ட மிகப்பெரிய கலவரத்தின் காரணமாக வங்கதேசத்தில் நிறைய உள்நாட்டு பிரச்னைகள் ஏற்பட்டதால் டி20 உலகக்கோப்பையை வங்கதேசத்தில் நடத்தவேண்டுமா என்ற ஆலோசனையில் ஐசிசி இருப்பதாக தகவல் வெளியானது. ஒருவேளை வங்கதேசத்தில் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை நடத்தப்படவில்லை என்றால் இந்தியா அல்லது யுஏஇ-ல் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டது.
இத்தகைய சூழலில் வங்கதேசத்தில் தற்போது இடைக்கால அரசு அமைக்கப்பட்டிருக்கும் நிலையிலும், டி20 உலகக்கோப்பையை வெற்றிகரமாக நடத்த என்னசெய்யவேண்டும் என்ற குழப்பத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் இருந்துவருகிறது. முதலில் வங்கதேச ராணுவத்திடம் உதவியை நாடிய வாரியம், தற்போது இந்தியா ராணுவத்தின் உதவியையும் நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் வங்கதேச வாரியத்தின் கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு பிரச்னையால் என்ன செய்வதென்று தெரியாமல், ஐசிசியிடம் ‘விரைவில் முடிவெடுத்துவிட்டு வருகிறோம்’ என்று தெரிவித்துவிட்டு இந்திய ராணுவத்திடம் உதவியை நாடியிருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி வங்கதேசம், ‘மகளிர் டி20 உலகக்கோப்பையை ஏற்று நடத்ததுங்கள்’ என பிசிசிஐ இடம் முறையிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பேசியிருக்கும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, “அவர்கள் (வங்கதேசம்) மகளிர் டி20 உலகக்கோப்பையை நடத்த முடியுமா என்று பிசிசிஐயிடம் கேட்டனர், ஆனால் நான் திட்டவட்டமாக மறுத்துவிட்டேன். இனி மழைக்காலம் வரும் என்பதால் அது சரியாக இருக்காது, அதுமட்டுமில்லாமல் அடுத்தாண்டு நாங்கள் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையை நடத்தவிருப்பதால் தொடர்ச்சியாக இரண்டு உலகக்கோப்பைகளை நடத்த விரும்பவில்லை” என்று ஜெய் ஷா கூறியதாக TOI செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் வங்கதேசத்துக்கு எதிரான தொடர் நடைபெறுமா என்ற கவலை இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “இப்போது எந்த கவலையும் இல்லை. தற்போது அங்கு புதிய ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நிச்சயமாக எங்களை அணுகுவார்கள். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், நான் நிச்சயமாக அவர்களை அணுகுவேன். எங்களுக்கு, வங்கதேச தொடர் மிகவும் முக்கியமானது. அதை நடத்த எங்களால் முடிந்தவரை முயற்சி செய்வோம்” என்று ஜெய்ஷா கூறியுள்ளார்.