WPL: முதலிடத்தில் RCB... சின்னஸ்வாமி மைதானத்தில் மாறும் காட்சிகள்..!

கடந்த ஆண்டு முதல் 5 போட்டிகளையும் தோற்ற RCB, அதன்பிறகு கம்பேக் கொடுத்து கடைசி 3 போட்டிகளில் இரண்டை வென்றது. தோல்வியின்போது அந்த அணியின் வீராங்கனைகள் அனைவருமே மனமுடைந்து இருந்தனர். ஆனால் இம்முறை அவை அனைத்துமே மாறியிருக்கிறது
RCB WPL
RCB WPLWPL
Published on

வுமன்ஸ் பிரீமியர் லீக் (WPL) தொடரின் இரண்டாவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பேங்களூர் அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. கடந்த சீசன் 8 போட்டிகளும் சேர்த்து மொத்தம் 2 வெற்றிகள் மட்டுமே பெற்றிருந்த RCB, இப்போது முதலிரு போட்டிகளிலுமே வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன?

RCBயைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு அவர்களின் ஏலத் திட்டத்தமே அவர்களின் காலை பெரிதும் வாரியது. ஆண்கள் அணியின் யுக்தியை அவர்கள் இதிலும் பயன்படுத்தினார்கள். பெரிய ஸ்டார்களாக வாங்கிக் குவித்தார்கள். ஸ்மிரிதி மந்தனாவை வாங்கிய அவர்கள், வெளிநாட்டு வீரர்கள் விஷயத்திலும் அதையே செய்தனர். சூப்பர் ஸ்டார் ஆல்ரவுண்டர் எல்லிஸ் பெர்ரி, இங்கிலாந்து கேப்டன் ஹெதர் நைட், முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் டேன் வேன் நீகர்க், சூப்பர் ஸ்டார் வேகப்பந்துவீச்சாளர் மேகன் ஷூட், நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன் என பெரும் நட்சத்திரப் பட்டாளமாக வாங்கினார்கள். ஆனால் அது அவர்களுக்கு பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் உதவவில்லை.

ரேணுகா சிங், ஷூட் இருவருமே ஸ்விங் பௌலர்கள். இருவரும் ஆடும்போது, ஒருவர் பெரும்பாலான ஓவர்களைப் பவர்பிளேவுக்கு வெளியே வீசவேண்டியதாக இருந்தது. மேலும், ஓவர்சீஸ் கோட்டாவை நட்சத்திர ஆல்ரவுண்டர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் என பயன்படுத்திவிட, முழுக்க முழுக்க உள்ளூர் ஸ்பின்னர்களை பயன்படுத்தவேண்டியதாக இருந்தது. இவையெல்லாம் அவர்களுக்குப் பெரிய பாதகமாக அமைந்தன. பந்துவீச்சு பெரிதும் தடுமாறியது. பேட்டிங்கில் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா பெரிய ஸ்கோர்கள் அடிக்கத் தவற, அதுவும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

இம்முறை அந்தத் தவறுகளையெல்லாம் சரிசெய்தது ராயல் சேலஞ்சர்ஸ். 2024 WPL தொடருக்கான ஏலத்துக்கு முன் மேகன் ஷூட், வேன் நீகர்க், எரின் பர்ன்ஸ் ஆகியோரை ரிலீஸ் செய்தனர். அந்த இடங்களுக்கு ஜார்ஜியா வேர்ஹம், சோஃபி மோலினாக்ஸ், கேட் கிராஸ் ஆகியோரை வாங்கினர். பெண்கள் கிரிக்கெட்டில் அனுபவ ஸ்பின்னர்கள் தேவை என்பதை உணர்ந்து மோலினாக்ஸ், வேர்ஹம் இருவரையும் வாங்கினார்கள். அது அவர்களுக்குப் பெருமளவு உதவியிருக்கிறது. உபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் கடைசி இரு ஓவர்களையும் அவர்கள் இருவரும் சிறப்பாகப் பந்துவீசி அந்த அணியை வெற்றி பெற வைத்தனர்.

அதேபோல் சபினேனி மேகனாவை இந்த ஏலத்தில் வாங்கினார்கள். கடந்த சீசனில் அவர் சரியாக செயல்படவில்லை என்றாலும், அவரது டொமஸ்டிக் செயல்பாட்டையும் அனுபவத்தையும் கருத்தில் கொண்டு அவரை வாங்கினார்கள். இப்போது இரண்டு சுற்றுகள் முடிவில் இரண்டாவது டாப் ஸ்கோரராக இருக்கிறார் மேகனா. நல்ல தொடக்கத்தை ஸ்மிரிதி மந்தனாவும் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார். பெங்களூரு ரசிகர்கள் தங்கள் அணிக்குத் தொடர்ந்து நல்ல ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கிறது. அதனால் அணிக்குள் எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு முதல் 5 போட்டிகளையும் தோற்ற RCB, அதன்பிறகு கம்பேக் கொடுத்து கடைசி 3 போட்டிகளில் இரண்டை வென்றது. தோல்வியின்போது அந்த அணியின் வீராங்கனைகள் அனைவருமே மனமுடைந்து இருந்தனர். ஆனால் இம்முறை அவை அனைத்துமே மாறியிருக்கிறது. கேப்டன் ஸ்மிரிதி போட்டியின்போது சிரிப்பதைப் பார்க்க முடிகிறது. கடந்த முறை தடுமாறிய ரேணுகா சிங் இப்போது பவர்பிளேவில் சிறப்பாக செயல்படுகிறார். பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தும் முந்தைய சீசனில் ஏமாற்றிய ரிச்சா கோஷ், முதல் போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அனுபவ வெளிநாட்டு ஸ்பின்னர்கள் இருப்பதால், டொமஸ்டிக் இந்திய ஸ்பின்னர்கள் நெருக்கடி இல்லாமல் சிறப்பாக செயல்படுகிறார்கள். வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் ஆஷா ஷோபனா. இப்படி அனைத்தும் ஒருசேர சரியாக நடக்கத் தொடங்கியிருக்கிறது. இன்னும் 2-3 போட்டிகளில் வென்றால், அந்த அணி நிச்சயம் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையலாம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com