ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக கடந்த 2012-ம் ஆண்டு முதல், ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து ஆடி வருகிறார். இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில், சென்னை அணியின் கேப்டன்சி பொறுப்பை ஜடேஜா ஏற்றார்; பின்னர் லீக் சுற்றில் தொடர் தோல்வியின் காரணமாக விலகினார்; இச்சம்பவங்கள் முதலே அவரை சுற்றி சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. தோனி, சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் ஜடேஜாவுக்கு இடையில் மோதல் நிலவி வந்ததாக தகவல் பரவி வந்தநிலையில், நடப்பு சீசனில் அவர் விளையாட மாட்டார் என்றே கருத்து நிலவியது.
எனினும், தோனியின் சமரசத்தால் ஜடேஜா சென்னை அணிக்காக விளையாட வந்ததாகக் கூறப்பட்டாலும், நடப்பு தொடரில் அவரின் பேட்டிங் விதம் சரியாக இல்லை. இருப்பினும், பௌலிங்கில் கலக்கி வந்த ஜடேஜா (டெல்லி அணிக்கு எதிரான கடைசிப் போட்டியை தவிர), வெற்றிபெற்ற 7 லீக் போட்டிகளில் 3 போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
அவ்வாறு ஆட்ட நாயகன் விருதுபெற்றாலும், தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என்று சொல்லப்பட்டு வருவதால், தோனிக்கு முன்னர் ஜடேஜா பேட்டிங்கில் களமிறங்கும் போதெல்லாம் ரசிகர்கள் அவர் அவுட் ஆக வேண்டும் என்று கத்தி கூச்சலிடுவதை வெளிப்படையாகவே பேசியிருந்தார். புன்னகையுடன் ஜடேஜா அப்படி கூறினாலும், மன வலியை மறைத்துக்கொண்டு பேசுவதாக நெட்டிசன் ஒருவர் ட்வீட் செய்திருந்ததை ஜடேஜா லைக் செய்தது மீண்டும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், கடைசி லீக் போட்டியான டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், மற்ற பௌலர்கள் எல்லாம் குறைவான ரன்களே கொடுத்த நிலையில், ஜடேஜா மட்டும் 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் எடுத்து 50 ரன்கள் கொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து போட்டி முடிந்த கையோடு, தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா சற்று கோபத்துடன் விவாதம் செய்தவாறு மைதானத்தில் சென்ற வீடியோவை பகிர்ந்த நெட்டிசன்கள், மீண்டும் இருவருக்கும் மோதலா என்று குறிப்பிட்டு வந்தனர்.
இதற்கிடையில் ஜடேஜா, நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் நிச்சயமாக என்ற கேப்ஷனுடன், “கர்மா உங்களை திரும்பி தாக்கும். விரைவிலோ அல்லது பின்னரோ, நிச்சயமாக திரும்பி வரும்” என்று குறிப்பிட்டுள்ளார். எதற்காக அவர் இப்படி பதிவுசெய்தார் என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த பதிவுக்கு ஜடேஜாவின் மனைவியும், பாஜக எம்.எல்.யுமான ரிவாபா பதிவுசெய்துள்ள பதில் பதிவில், “உங்கள் வழியை பின்பற்றுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, தோனிக்கும், ஜடேஜாவுக்கும் மீண்டும் மோதலா என்றும், இல்லை சென்னை ரசிகர்களை அவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளரா என்றும் நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.