எங்கு பார்த்தாலும் இப்போது ஓடுவது ஐபிஎல் பற்றிய பேச்சுகள்தான். இன்றும் நாளையும் அடுத்த சீசனுக்கான மெகா ஏலம் நடக்கவிருக்கிறது. இந்த ஏலம் முதல் முறையாக சவூதி அரேபியாவில் நடக்கிறது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியின் திட்டமும் என்னவாக இருக்கும், இருக்கவேண்டும் என்று பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டுரையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்ன செய்யவேண்டும் என்று அலசுவோம்.
ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோலி, பட்டிதார், யஷ் தயால் ஆகியோரை மொத்தமாக 37 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்திருக்கிறது. அதனால் அவர்களுக்கு ஏலத்தில் 83 கோடி ரூபாய் இருக்கிறது. பஞ்சாப் கிங்ஸுக்கு அடுத்ததாக அதிக தொகையோடு களமிறங்குவது ஆர்சிபி அணிதான்.
17 ஆண்டுகளாக ஆர்சிபி அணி அந்தக் கோப்பைக்காகப் போராடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அவர்களால் அதைத் தொட முடியவில்லை. இந்த முறை அவர்கள் தங்கள் கட்டமைப்பை ஒட்டுமொத்தமாக மாற்றவேண்டும். இதுவரை அந்த அணி வெளிநாட்டு வீரர்கள் மீது அதிகம் முதலீடு செய்திருக்கிறது. ஆனால், அது வேலைக்கு ஆகாது. அதனால் இம்முறை அவர்கள் இந்திய வீரர்களில் அதிகம் முதலீடு செய்யவேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போல் 'கோர்' அணியை உருவாக்கவேண்டும். அதுதான் இந்த ஏலத்தில் அவர்களின் முக்கிய இலக்காக இருக்கவேண்டும். 83 கோடி ரூபாய் மீதமிருப்பதால் அவர்களால் நிச்சயம் அதை செய்ய முடியும். குறைந்தபட்சம் 4 தரமான இந்திய வீரர்களை அவர்கள் வாங்கவேண்டும். அதற்கு அவர்கள் 50 கோடி ரூபாய் வரை தாராளமாக செலவு செய்யலாம்.
அந்த இலக்கின் முதல் படி அவர்கள் மீண்டும் ராகுலை வாங்குவதாக இருக்கும். ஏற்கெனவே இது சமூக வலைதளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆர்சிபி அணிக்கு கேப்டன் தேவை. கோலி மீண்டும் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வாரா என்று தெரியவில்லை. அதனால் ராகுல் மீண்டும் அணிக்கு வருவது அவர்களுக்கு நல்லதுதான். மேலும், அது கோலி மீதான நெருக்கடியையும் குறைக்கும்.
'கோர்' டீமை உருவாக்கும் முயற்சியில் அவர்கள் அடுத்த செய்யவேண்டியது இன்னொரு முன்னாள் வீரரை அணிக்கு அழைத்துவருவது - யுஸ்வேந்திர சஹால். சின்னஸ்வாமி ஸ்டேடியத்தில் ஆதிக்கம் செலுத்திய ஒரே பௌலர் அவர்தான். அவரை வெளியே விட்டு ஆர்சிபி பெரிய தவறு செய்தது. அதற்கான பலனையும் 3 ஆண்டுகள் அனுபவித்துவிட்டது. அதனால், அவரை எப்படியாவது கொண்டுவருவது மிகவும் முக்கியம்.
அடுத்த 2 இடங்களில் ஒன்று ஆல்ரவுண்டராக இருக்கவேண்டும். இப்போதைக்கு இருக்கும் இந்திய ஆல்ரவுண்டர்களில் வாஷிங்டன் சுந்தர் மிகச் சிறந்த தேர்வாக இருப்பார். அட்டகாசமான ஃபார்மில் இருக்கிறார். இளம் வீரர் என்பதால் நிச்சயம் எதிர்காலத்துக்கான வீரராகவும் இருப்பார். அதுமட்டுமல்லாமல் அவர் பெங்களூரு அணிக்காக ஓரளவு நன்றாகவே செயல்பட்டிருக்கிறார். அந்த அணிக்காக அவர் பந்துவீசியபோது 7.18 என்ற அட்டகாசமான எகானமியில் பந்துவீசியிருக்கிறார். சின்னஸ்வாமி ஸ்டேடியத்தில் அவரது எகானமி 8.26. அது அந்த மைதானத்துக்கு அதி அற்புதமான செயல்பாடு. சொல்லப்போனால் அவர்களுக்குத் தேவை இப்படியான வீரரே. பெங்களூரு அணிக்குத் தேவை சிக்கனமாகப் பந்துவீசக்கூடிய பௌலர்கள் தான். அதனால் வாஷிங்டன் அனைத்து பாக்ஸ்களையும் டிக் செய்வார்.
அந்த நான்காவது இந்திய வீரராக அவர்கள் நேஹல் வதேராவை குறிவைக்கவேண்டும். மிடில் ஆர்டரை அவர் பலப்படுத்துவார். கூடிய விரைவில் அவர் இந்திய அணியின் ஒரு முக்கிய அங்கமாகவும் வளர்வார். பட்டிதாருக்குப் பின் ஒரு இடது கை ஆப்ஷனும் கொடுப்பார். அதனால் அவர் சரியான சாய்ஸாக இருப்பார்.
இவர்களை எடுத்துவிட்டால், அதன்பிறகு 20-25 கோடி ரூபாய் செலவில் அவர்கள் முதல் சாய்ஸ் 4 வெளிநாட்டு வீரர்களை வாங்கலாம். அவர்கள் அணியின் மிச்ச தேவைக்கு ஏற்றவர்களாக இருக்கவேண்டும். நம்பர் 3 பொசிஷனை நிரப்ப வில் ஜேக்ஸ் அல்லது ரச்சின் ரவீந்திரா நல்ல தேர்வாக இருப்பார்கள். அவர்கள் பௌலிங்கிலும் பங்களிக்கக்கூடும். ஆறாவது இடத்துக்கு அவர்கள் சற்று குறைவான தொகையில் தரமான வீரரை வாங்க முயற்சிசெய்யவேண்டும். கிளென் ஃபிலிப்ஸ் நிச்சயம் அட்டகாசமான தேர்வாக இருப்பார். அவரை ஓரளவு குறைந்த தொகைக்கும் வாங்க முடியும். வெளிநாட்டு பௌலர் இடத்துக்கு குறைந்த தொகையில் நல்ல சாய்ஸை அவர்கள் தேர்வு செய்தால், ஏழாவது இடத்துக்கு ஆர்ச்சர் அல்லது யான்சன் போன்ற ஒருவரை வாங்க முடியும்.
மீதமிருக்கும் தொகையில் அவர்களால் நிச்சயம் நல்ல பேக் அப் வீரர்களை வாங்கலாம். லவ்னீத் சிசோடியா, வைஷாக் விஜய்குமார் போன்ற உள்ளூர் நாயகர்கள் நிச்சயம் நல்ல தேர்வாக இருப்பார்கள்.