இந்த ஆண்டுக்கான (17வது) ஐபிஎல் சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் வழக்கம்போல் 10 அணிகள் களம் காண உள்ளன. இதன் முதல் போட்டியில், சென்னை அணியும் பெங்களூரு அணியும் மல்லுக்கட்ட இருக்கின்றன. இதற்காக வீரர்கள் அவ்வணி கூடாரத்தில் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு கேள்விகளும் விமர்சனங்களும் எழுப்பப்பட்டு வந்த நிலையில், அவரும் தற்போது அணியோடு இணைந்திருப்பதில் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது.
இந்த நிலையில், நேற்றிரவு சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தரப்பில், ’அன்பாக்ஸ்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி மகளிர் அணி வீராங்கனைகளுக்கு அவ்வணியின் ஆடவர் அணி கார்ட் ஆஃப் ஹானர் மரியாதையை அளித்தனர். ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் மைதானத்தில் குவிந்து ஆர்.சி.பி அணிக்கு உற்சாகம் அளித்தனர்.
பின்னர் இந்நிகழ்வுக்குப் பிறகு ஆர்.சி.பி. அணியின் ஜெர்சியிலும் பெயரிலும் சிறிது மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேசிய நட்சத்திர வீரர் விராட் கோலி, ”ரசிகர்கள் என்னை ’கிங்’ என்ற அடைமொழியுடன் அழைப்பதை நிறுத்த வேண்டும். என்னை ’விராட்’ என்றே அழைக்க வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் ரசிகர்கள் என்னை ’கிங்’ என்று அழைக்கும்போது, கூச்சமாக உள்ளது. இனியாவது என்னை ’விராட்’ என்றே அழையுங்கள்.
இந்த புதிய ஜெர்சியின் மூலமாக ஆர்சிபி அணியின் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. நான் எப்போதும் கோப்பையை முதல்முறையாக வெல்லப் போகும் ஆர்சிபி அணியில் அங்கமாக இருக்க முயற்சிக்கிறேன். எனது திறமை மற்றும் அனுபவத்தைக் கொண்டு கோப்பையை வென்று ரசிகர்கள் மற்றும் அணிக்கு என்னால் இயன்றதைக் கொடுக்க முயற்சிப்பேன். ஐபிஎல் கோப்பையை வெல்வது எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பது என்னுடைய கனவாகும்” எனத் தெரிவித்தார்.