IPL 2024 | ஸ்பின்னருக்கு நாங்க எங்க போவோம்? - 2024 Playoff தேறுமா RCB? எங்கு சிக்கல்? விரிவான அலசல்!

வேண்டா வெறுப்பாய் கல்யாணத்திற்கு வந்து மொய் செய்துவிட்டுப் போகும் தூரத்துச் சொந்தம் போல கடனுக்கு ஒரு டீமை எடுத்து கடமைக்கு ஆடவிடுகிறார்கள் இந்த தடவை. ப்ளே ஆஃப் செல்லுமா ஆர்.சி.பி? எப்படி அசெம்பிள் செய்யப்பட்டிருக்கிறது அணி?
RCB
RCBpt web
Published on

பிற அணிகளின் பலம் பலவீனம் குறித்து, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...

RCB ஏல ஸ்ட்ராடஜி

மனிதன் பரிணாம வளர்ச்சி அடையத் தொடங்கிய காலத்திலிருந்தே அவனை சில கேள்விகள் துரத்திக்கொண்டே இருக்கின்றன. ஏலியன்களும் அவர்களின் இருப்பும், மனித உடலின் டெயில்போனும் அதன் தேவையும், எல் டொராடோவும் அதன் தங்கமும், பா.ம.கவும் அதன் தேர்தல் நேரத்துக் கொள்கைக் கூட்டணியும்... எவ்வளவோ முயன்றும் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இன்றுவரை விடை கண்டறிய முடியவில்லை. அந்தப் பட்டியலில் கடைசிக் கேள்வி, ஆர்.சி.பியும் அதன் ஏல ஸ்ட்ராடிஜியும்!

கிரிக்கெட்டில் சரியான நேரத்தில் தவறான முடிவுகள் எடுப்பதற்கு மிகப்பொருத்தமான உதாரணம் ஆர்.சி.பி அணி நிர்வாகம்தான். டிமாண்ட் இருக்கும் எனத் தெரிந்தும் அணியில் இருந்த ஹர்ஷல் படேல் போன்ற வீரரை விடுவித்துவிட்டுப் பின் ஏலத்தில் பத்து கோடி கொடுத்து எடுப்பார்கள். ஐ.பி.எல்லில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் டாப் 5யில் இருந்த சாஹலை ஜஸ்ட் லைக் தட் விடுவித்துவிட்டு முழுநேர ஸ்பின்னரே இல்லாத அணியைக் கட்டமைத்துவிட்டு அடி வாங்குவார்கள். ஓரளவு பவுலிங் போட்டுக் காப்பாற்றிய ஹஸரங்கா, ஹேசல்வுட்டை ரிலீஸ் செய்துவிட்டு ஃபார்ம் அவுட்டான பவுலர்களைத் தேடித் தேடி எடுப்பார்கள். இதெல்லாம் சித்தி சீரியலை விட நெடிய தொடர்கதை ஆர்.சி.பி வரலாற்றில்.

RCB
Gujarat Titans IPL 2023 Preview | கோப்பையை தக்க வைக்குமா குஜராத்

ஏலத்தில் நடந்ததென்ன?

இந்தமுறை இவர்கள் செய்த ஒரே உருப்படியான வேலை, ஏலத்திற்கு முன் மும்பையிடமிருந்து கேமரூன் க்ரீனை வாங்கியது மட்டும்தான். 'வாவ், ஆர்.சி.பி திருந்திட்டாங்களா?' என புகழ வாய்திறக்கும் முன்பே ஷபாஷ் அகமதுவை சன்ரைஸர்ஸுக்கு கொடுத்துவிட்டு மயாங்க் டாகரை அவர்களிடமிருந்து வாங்கினார்கள். கோடிகள் செலவழித்து நடக்கும் கல்யாணத்தில் போட்டோ எடுக்க விடாமல் குழந்தைகள் குறுக்கே ஓடுமே. அப்படியான டீல் இது. யாருக்கும் எந்தப் பயனுமில்லை.

கேமரூன் க்ரீன்
கேமரூன் க்ரீன்

ஏலத்திற்கு 23 கோடியோடு வந்தார்கள். இவர்களின் எஸ்.டி.டி எல்லாருக்கும் தெரியுமென்பதால் எதையும் எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள் ரசிகர்கள். 'கப்பு வாங்கிடுவோம்னு ஏற்கனவே உங்களை ஏமாத்துறது பத்தாதா? ஏலத்துல வேற ஏமாத்தணுமா?' என எதிர்பார்த்தபடியே கோமாளித்தனங்கள் செய்தார்கள். சர்வதேச டி20களை விட குறைவான ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியிருக்கும் அல்ஸாரி ஜோசப்பை 11.50 கோடி கொடுத்து எடுத்தார்கள். அவர் இதுவரை ஒரு சீசனில் எடுத்திருக்கும் அதிகபட்ச விக்கெட்களே ஏழுதான். அதன்பின் வரிசையாக யஷ் தயால், லாக்கி பெர்குசன், ஜஸ்ட் 10.84 எகானமியே வைத்திருக்கும், இங்கிலாந்து அணியே கைவிட்டுவிட்ட டாம் கர்ரன் என நான் ஸ்டாப்பாய் சிரிப்பு மூட்டிக்கொண்டே இருந்தார்கள்.

இருக்கும் எட்டு வெளிநாட்டு வீரர்களில் நான்கு பேர் பவுலர்கள். அதுவும் ஃபாஸ்ட் பவுலர்கள். எப்படியும் டுப்ளெஸ்ஸி, க்ரீன், மேக்ஸ்வெல் ப்ளேயிங் லெவனில் ஆடுவார்கள் என்பதால் ஒரு பவுலர் மட்டுமே ஆடமுடியும். நான்கில் ஒரு ஸ்பின்னரையாவது எடுத்திருந்தால் சென்னை, கொல்கத்தா போன்ற ஆடுகளங்களில் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் ஆர்.சி.பி.யிடம் லாஜிக்கை எதிர்பார்த்தால் எப்படி?

வேண்டாவெறுப்பாய் கல்யாணத்திற்கு வந்து மொய் செய்துவிட்டுப் போகும் தூரத்துச் சொந்தம் போல கடனுக்கு ஒரு டீமை எடுத்து கடமைக்கு ஆடவிடுகிறார்கள் இந்த தடவை. ப்ளே ஆஃப் செல்லுமா? எப்படி அசெம்பிள் செய்யப்பட்டிருக்கிறது அணி?

பலம்

பேட்டிங் பவர்ஸ்டார்ஸ்

கடந்த முறை ஆர்.சி.பி மொத்தமாய் எடுத்த 2502 ரன்களில் 1769 ரன்கள் முறையே டுப்ளெஸ்ஸி (730), கோலி (639), மேக்ஸ்வெல் (400) மூவரும் இணைந்து எடுத்தது. அதற்கு அடுத்ததாய் ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ரன்களே 140 தான். தினேஷ் கார்த்திக். மூன்று விக்கெட்களை வீழ்த்திவிட்டால் போதும், மேட்ச் நம் கையில் என எதிரணி நினைக்குமளவிற்குத்தான் போன சீசனில் ஆர்.சி.பியின் பேட்டிங் டெப்த் இருந்தது. இந்த முறை கேமரூன் க்ரீனின் வருகை பேட்டிங்கை நன்றாகவே பலப்படுத்தியிருக்கிறது.

காயம் காரணமாக கடந்த சீசனில் விளையாடாத ரஜத் படிடாரும் இந்த முறை களம் காண ரெடி. இந்த சீசனுக்குப் பின் ஓய்வு பெற இருப்பதால் தினேஷ் கார்த்திக் தன் பெஸ்ட்டைக் கொடுக்கவே விரும்புவார். டுப்ளெஸ்ஸி தற்போது ஃபார்ம் அவுட். ஆனாலும் ஐ.பி.எல் அவர் ஏரியா. ஃபார்முக்கு திரும்ப அவருக்கு ஒரே ஒரு மேட்ச்சே தேவை. கடைசியாய் கோலி. உலகக்கோப்பை டி20 தொடரில் அவர் இடம்பெறமாட்டார் என்றெல்லாம் கண்டமேனிக்கு யூகங்கள் கிளம்பும்நிலையில் மனிதர் வெறியாட்டம் ஆடக் காத்திருப்பார். இந்த முறை எல்லா ஆட்டங்களும் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தால் ஆர்.சி.பி பேட்ஸ்மேன்களிடமிருந்து வாண வேடிக்கையை எதிர்பார்க்கலாம்.

ஆன்டி ஆதிக்கம்

பல ஆண்டுகளாக ஆர்.சி.பியின் நிர்வாகக் குழுவில் எல்லாமுமாக இருந்த மைக் ஹெஸ்ஸன் மொத்தமாக அணியிலிருந்து விலகிவிட்டார். லக்னோவை இரண்டு முறை ப்ளே ஆப் அழைத்துச் சென்ற ஆன்டி ப்ளவர்தான் இந்த முறை ஆர்.சி.பியின் கோச். அவரின் அனுபவமும் அணுகுமுறையும் அணிக்குக் கைகொடுக்கும் என நம்பலாம்.

பலவீனம்

டெத் ஓவர் யார் கையில்?

பவர்ப்ளே சிராஜ் இருக்க, பிரச்னை இல்லை. ஆனால் டெத் ஓவர்களில் அணியை யார் காப்பாற்றுவார்கள்? ரீஸ் டாப்லியும் நியூ பால் பவுலர்தான். டாம் கர்ரன் எந்த இடத்தில் பவுலிங் போட்டாலுமே பாரபட்சம் பார்க்காமல் அடிப்பார்கள். அல்ஸாரி ஜோசப்பும் லாக்கி பெர்குசனும் 145+ கி.மீ வேகத்தில் பந்தை இறக்குபவர்கள். அந்த வேகத்தில் பந்தைத் தொட்டுவிட்டாலே பவுண்டரி கிடைக்கும்.

இந்திய பவுலர்களான ஆகாஷ் தீப், வைசாக் விஜயகுமார், யஷ் தயால் மூவரின் கடந்த சீசன் எகானமி முறையே 11.08, 10.54, 10.02. ஹர்ஷல், ஹேசல்வுட் இந்த சீசனில் அணியில் இல்லாத நிலையில் டெத் ஓவர்களில் பவுலிங் போடுவது பெரிய சவாலாகவே அணிக்கு இருக்கப்போகிறது. கடந்த சீசனில் ஆர்.சி.பியின் டெத் ஓவர் எகானமி 11.1, தொடரிலேயே இரண்டாவது மோசமான எகானமி ரேட் இது. இந்தமுறை அதைத் தாண்டாமல் இருந்தால் மட்டுமே ப்ளே ஆப் வாய்ப்பு சாத்தியம்.

பினிஷர் வேண்டும்

தினேஷ் கார்த்திக்கை டீமில் எடுத்தபோதே அவர் ரோல் பினிஷர் தான் என முடிவாகிவிட்டது. அவரும் 2022 சீசனில் அதற்கேற்றார்போல் 183.33 என்கிற ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். ஆனால் போன சீசனில் நிலைமை அப்படியே தலைகீழ். 104 பந்துகளில் 140 ரன்களே மொத்தமாய் அவரால் எடுக்க முடிந்தது. சமீபத்தில் முடிந்த விஜய் ஹசாரே தொடரில் ஓரளவிற்கு நன்றாகவே ஆடியிருந்தாலும் ஐ,பி.எல் பினிஷர் ரோலுக்கு அந்த பேட்டிங் போதுமானதாய் இல்லை. ஒருவேளை டி.கே இந்த சீசனிலும் ஃபார்ம் அவுட்டானால் பொறுப்பு மொத்தமும் க்ரீன் தலையில்!

ஸ்பின் இல்லன்னா என்ன?

ஸ்பின் பவுலிங்கைப் பற்றிக்கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத ஒரே அணியாக ஆர்.சி.பி மட்டுமே இருக்கமுடியும். போன சீசனில் ஏழு மேட்ச்கள் பிரதான ஸ்பின்னராக ஆடிய கரன் சர்மா ஃபாஸ்ட் பவுலருக்கு இணையாக 10.37 எகானமி வைத்திருந்தார். ஒன்றிரண்டு ஆட்டங்களில் ஆடிய ஸ்வப்னில் சிங்கும் ஹிமான்ஸு சர்மாவும் விக்கெட்கள் வீழ்த்தவில்லை. ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர் இடத்தில் களமிறங்கும் மயாங்க் டாகருக்கும் மூன்றே போட்டிகள்தான் ஐ.பி.எல் அனுபவம். இப்படியொரு ஸ்பின் பவுலிங்கை வைத்துக்கொண்டு சென்னை, கொல்கத்தா போன்ற ஆடுகளங்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பதும் கேள்விக்குறியே.

ப்ளேயிங் லெவன்

டு ப்ளெஸ்ஸி, விராட் கோலி, ரஜத் படிடார், மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், தினேஷ் கார்த்திக், மயாங்க் டாகர், சிராஜ், லாக்கி பெர்குசன், கரன் சர்மா, வைசாக் விஜயகுமார்.

கூடுதல் ஸ்பின் ஆப்ஷன் ப்ளேயிங் லெவனில் தேவைப்பட்டால் லாக்கி பெர்குசனுக்கு பதில் வில் ஜாக்ஸை ஆடவைத்து மேலும் ஒரு இந்திய வேகப்பந்துவீச்சாளரோடு செல்லலாம். ஆனால் வில் ஜாக்ஸ் ஓபனிங்தான் ஆடுவார் என்பதால் கோலி பொசிஷன் மாறவேண்டும். அது மேலும் குழப்பங்களை உருவாக்கும் என்பதால் மேலே சொன்ன அணியோடு அவர்கள் களமிறங்கவே வாய்ப்புகள் அதிகம்.

RCB
IPL 2024 | Rajasthan Royals | ‘விதை நான் போட்டது’ - இந்தியாவை தாங்கும் ராஜஸ்தான் படை!

இம்பேக்ட் பிளேயர்

அனுஜ் ராவத் - அணியில் ஒரு கூடுதல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவைப்படும்போது.

யஷ் தயால் - அணியில் ஒரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர் தேவைப்படும்போது.

ஆகாஷ் தீப் - அணியில் கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் தேவைப்படும்போது.

தனி ஒருவன் :

நிச்சயம் விராட் கோலி மீது எக்கச்சக்க கவனம் இருக்கும்தான். ஆனால் அது அவருக்கு புதிதில்லையே. இந்த சீசனில் அவருக்கு அடுத்ததாய் அனைவரும் எதிர்பார்க்கும் வீரர் ரஜத் படிடார். 2022 சீசனில் எட்டு இன்னிங்ஸ்களில் 333 ரன்கள் குவித்து தன் வருகையை உலகிற்கு அறிவித்தவர். போன சீசன் காயம் காரணமாக விளையாட முடியாமல் போய்விட்டது. அதன்பின் இந்திய ஒருநாள், டெஸ்ட் அணிகளில் இடம்பெற்று ஆடிவிட்டாலும் அதில் சுமாரான ஃபெர்பாமான்ஸையே அவரால் தரமுடிந்தது. கிங் கோலியே 'அடுத்த பெரிய கை இவன்தான்' என ஆரூடம் சொல்லியிருப்பதால் இந்த சீசனில் அசத்துவார் என்றே தோன்றுகிறது.

பெங்களூரு நகரத்தில் தண்ணீர் பிரச்னை நிலவுவதால் எல்லா மேட்ச்களும் அங்கே நடக்குமா என்பதில் இன்னமும் தெளிவில்லை. ஆனால் எங்கே நடந்தாலும் சரி, கோப்பையை கட்டாயம் வென்றாக வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது ஆர்.சி.பி. இரண்டு காரணங்கள். ஏறக்குறைய ராயல் சேலஞ்சர்ஸ் முகாமிலேயே வளர்ந்த தத்துப்பிள்ளையான கோலி தன் உடல் பொருள் ஆவி ரத்தம் என எல்லாவற்றையும் இந்த கிளப்புக்காக கொடுத்துவிட்டார். 'அவருக்காகவாவது ஒருதடவை ஜெயிங்கப்பா' என பிற அணி ரசிகர்களே வேண்டுகிறார்கள். கோலியின் உழைப்பிறகு அணியால் திருப்பிக்கொடுக்க முடிந்தது இந்தக் கோப்பை ஒன்றுதான். இரண்டாவது காரணம் ரசிகர்கள். லீக்கின் கடைசி வாரிசான குஜராத்தே கோப்பை வென்றுவிட்ட நிலையில் மூத்தக் குழந்தையான ஆர்.சி.பி தன்னை இத்தனை ஆண்டுகாலம் விஸ்வாசமாக தொடரும் ரசிகர்களுக்காக கோப்பை வென்றாக வேண்டும். பார்ப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com