IPL 2024 | Punjab Kings | ‘ஆல்ரவுண்டர் வேலை - ஆட்கள் தேவை..’ பஞ்சாப்பின் தொடர் தோல்விகளுக்கு காரணம்?

மும்பை, சென்னை, ராஜஸ்தான் அணிகள் ஆண்டுமுழுவதும் ஸ்கவுட் செய்து யாரையெல்லாம் குறிவைத்து ஏலம் கேட்கிறார்களோ அவர்களை எல்லாம் இவர்களும் கண்ணை மூடிக்கொண்டு ஏலம் கேட்பார்கள். வந்தால் லாபம், இல்லாவிட்டால் அடுத்த பிளேயர்.
பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ்pt web
Published on

லியோ படம் நினைவிருக்கிறதா? விஜய், த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத், கெளதம் மேனன், மடோனா என மூளை கொள்ளாத அளவுக்கு கலைஞர்கள். இவ்வளவு பேருக்கு மத்தியில் நம் கேரக்டரும் எடுபடும் என நம்பிவந்து பொட்டில் குண்டு வாங்கி பட்டென போவாரே அனுராக் காஷ்யப்... அப்படியான கேரக்டர்கள் நிஜத்திலும் உண்டு. அவர்களால் அவர்கள் இருக்கும் இடத்தில் எந்தத் தாக்கமும் நிகழாது.

சொல்லப்போனால் அவர்கள் ஏன் அந்த இடத்தில் இருக்கிறார்கள் என அவர்களுக்கும் தெரியாது, சுற்றியிருப்பவர்களுக்கும் தெரியாது என்பதுதான் பெருஞ்சோகம்.

நடிகர் சங்கத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் போல, பா.ஜ.கவில் சரத்குமார் போல. அப்படித்தான் ஐ.பி.எல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணியும்.

இவர்களை லீக்கிலிருந்து எடுத்துவிட்டால் மற்ற அணிகள் ஆடும் ஆட்டங்களின் எண்ணிக்கையில் இரண்டு குறையுமே தவிர, மற்றபடி யாருக்கும் எந்த சேதாரமும் இல்லை.

இத்தனை ஆண்டுகளில் மிகக்குறைந்த முறை ப்ளே ஆப்பிற்கு தகுதி பெற்றிருக்கும் ஒரே அணி பஞ்சாப்தான். இரண்டு முறை. இரண்டே ஆண்டுகள் ஆடிய ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகள் தொடங்கி கடைசியாய் லீக்கில் இணைந்த குஜராத், லக்னோ அணிகள் வரை எல்லா அணிகளுமே பஞ்சாப்பைவிட நன்றாகவே பெர்ஃபார்ம் செய்திருக்கின்றன.

இதற்கு முழுமுதல் காரணம் அணி நிர்வாகம் மட்டுமே. 'எதுக்குப்பா கல்யாண மண்டபத்துல, ஹோம குண்டத்துல உக்காந்துகிட்டு கண் எரிச்சலோடு மந்திரம் எல்லாம் சொல்லிகிட்டு, அதெல்லாம் நீ பார்த்துக்க. பொண்ணை நான் கூட்டிட்டுப் போயிடுறேன்' என சத்யராஜ் ஒரு படத்தில் காமெடியாக சொல்வாரே, நிஜத்தில் அதுதான் பஞ்சாப் அணி நிர்வாகத்தின் ஏலத் திட்டம். அலட்டிக்கொள்ளாமல் ஏல டேபிளுக்கு வருவார்கள்.

பஞ்சாப் கிங்ஸ்
IPL 2024 | GT | சுப்மன் கில் தலைமையில் திறமையை நிரூபிக்குமா குஜராத் டைட்டன்ஸ்? பலமும் பலவீனமும்!

மும்பை, சென்னை, ராஜஸ்தான் அணிகள் ஆண்டுமுழுவதும் ஸ்கவுட் செய்து யாரையெல்லாம் குறிவைத்து ஏலம் கேட்கிறார்களோ அவர்களை எல்லாம் இவர்களும் கண்ணை மூடிக்கொண்டு ஏலம் கேட்பார்கள். வந்தால் லாபம், இல்லாவிட்டால் அடுத்த பிளேயர். பத்தில் மூன்று பேராவது கிடைக்காமலா போவார்கள். மற்றபடி அணியின் பேலன்ஸ் எப்படி இருக்கிறது, பேக்கப் எப்படி இருக்கிறது என்பதை பற்றியெல்லாம் இவர்களுக்குக் கவலையே இல்லை.

இந்தமுறையும் அப்படித்தான். கோர் டீமையும் தக்கவைத்துக்கொண்டு கிட்டத்தட்ட 30 கோடி பணத்தையும் எடுத்துக்கொண்டுதான் ஏலத்திற்கு வந்தார்கள். நினைத்திருந்தால் அசரடிக்கும்படி சில வீரர்களை வாங்கியிருக்கலாம். ஆனால் அதையெல்லாம் பஞ்சாப்பிடம் எதிர்பார்த்தால் எப்படி.

ஒன்பது கோடி கொடுத்து எடுத்து பின் ரிலீஸ் செய்த ஷாருக் கானை 8 கோடி வரைக்கும் துரத்திச் சென்று மீண்டும் ஏலம் கேட்டார்கள். இந்திய பவர் ஹிட்டர்களே குறைவுதான் என்கிற நிலையில் இந்த ஒரு கோடி மிச்சம் என்கிற கணக்கையெல்லாம் விவரம் தெரிந்த அணிகள் பார்க்கவே பார்க்காது. ஏலத்தின் கடைசியில் 'ஐய்யய்யோ பேக்கப் பாரீன் பேட்ஸ்மேனே எடுக்கலையே' என இரண்டாவது ரவுண்டில் ரைலி ரூஸோவை எட்டுகோடி கொடுத்து எடுத்தார்கள். அவர் ஃபார்ம் அவுட் என்பதால் முதல் ரவுண்டிலேயே அவரை எடுக்க ஆளில்லை. அப்போதே எடுத்திருந்தால் ஆறுகோடியாவது மிச்சமாகியிருக்கும்.

இந்திய பவுலர் நிச்சயம் தேவை என்பதால் ஹர்ஷல் படேலை மட்டும் விடாமல் துரத்தி 11.75 கோடிக்கு வாங்கினார்கள். 4.20 கோடிக்கு வாங்கிய க்றிஸ் வோக்ஸின் ஐ.பி.எல் ரெக்கார்டுமே மிகச் சுமார்தான். கடைசிவரை இந்திய ஆல்ரவுண்டர் ஒருவரை வாங்க மெனக்கெடவே இல்லை. தரமான ஸ்பின்னர்கள் யாரையும் வாங்கவே இல்லை. ஹஸரங்கா போன்ற ஆல்ரவுண்டரின் மேல் கவனம் செலுத்தியிருந்தால் நான்கு நச் ஓவர்களும் கிடைத்திருக்கும். பேட்டிங் டெப்த்தும் இருந்திருக்கும். ம்ஹூம். இதனால் அணியும் அவசரமாக சமைக்கப்பட்ட குழைந்த சாதம் போலத்தான் இருக்கிறது.

பலம் :

அனுபவம் வாய்ந்த பவுலிங் :

அர்ஷதீப், ரபாடா, ஹர்ஷல் படேல், சாம் கர்ரன், ராகுல் சஹார் என ப்ளேயிங் லெவனில் ஆடப்போகும் ஐந்து பவுலர்களுக்கும் எக்கச்சக்க அனுபவம் இருக்கிறது. ரன்களை வாரி வழங்குவார்கள்தான் என்றாலுமே இக்கட்டான நேரங்களில் விக்கெட்களை வீழ்த்தும் சாமர்த்தியம் வாய்ந்த பவுலர்கள் இவர்கள் அனைவரும். பேக்கப் ஆப்ஷன்களான க்றிஸ் வோக்ஸ், ரிஷி தவான் போன்றவர்களுமே பிரஷரைத் தாங்கக்கூடிய பவுலர்கள்தான். இந்த பவுலிங் டெப்த்தே பஞ்சாப் அணியின் பிரதான பலம்.

நாங்க நாலு பேரு, எங்களுக்கு பயமே தெரியாது :

பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டன், சிக்கந்தர் ராஸா, சாம் கர்ரன், ரபாடா, நாதன் எல்லீஸ் - அணியில் அதிக போட்டிகள் ஆட வாய்ப்பிருக்கும் இந்த வெளிநாட்டு வீரர்கள் அனைவருமே தரமான சர்வதேச வீரர்கள். ஒரு ஓபனிங் கீப்பர் பேட்ஸ்மேன், ஒரு மிடில் ஆர்டர் அதிரடி ஆட்டக்காரர், ஒரு ஆல்ரவுண்டர், ஒரு பவுலர் என சரியான பேலன்ஸ் வெளிநாட்டு வீரர்களின் ப்ளேஸ்மென்ட்டைப் பொறுத்தவரை பஞ்சாப் அணிக்கு நன்றாக செட்டாகியிருக்கிறது. லிவிங்ஸ்டன், சாம் கர்ரன் நிச்சயம் ஆடுவார்கள். மீதி இரண்டு இடங்களில் இந்த நால்வரில் யார் ஆடினாலும் அது பலம் வாய்ந்த ஃபாரீன் கோர் டீமாகவே இருக்கும்.

பலவீனம்

ஸ்பின்னா... அப்படின்னா?

சந்திரமுகி பங்களாவில் ஒற்றையாளாய் வெள்ளையடிக்கும் கோபாலின் நிலைமைதான் ராகுல் சஹாருக்கு. டீமில் அவரைத் தவிர தரமான முழுநேர ஸ்பின்னர்கள் என யாருமே இல்லை. சென்னை, லக்னோ, கொல்கத்தா ஆடுகளங்களில் குறைந்தது இரண்டு முழுநேர ஸ்பின்னர்கள் இருந்தால்தான் சமாளிக்கவே முடியும் என்கிற நிலையில் ஹர்ப்ரீத் ப்ராரை மட்டுமே ராகுலுக்கு துணை என நம்பி களமிறங்குகிறது பஞ்சாப். இது எதிரணிக்குக் கொண்டாட்டம்தான்.

ஆல்ரவுண்டர் வேலைக்கு ஆள்கள் தேவை :

எந்த டி20 அணியிலும் குறைந்தது இரு ஆல்ரவுண்டர்கள் நிச்சயம் தேவை. ஆனால் பஞ்சாப் அணியில் ஐந்து பவுலிங் ஆப்ஷன்கள் போக இம்பேக்ட் பிளேயராக ஹர்ப்ரீத் ப்ரார் என்கிற ஸ்பின்னர் வந்தால் மட்டுமே சமாளிக்கவே முடியும். எனவே இருக்கும் ஒரே ஆல்ரவுண்டரான ரிஷி தவான் ஆடுவது சிரமம். அப்படியிருக்கையில் டாப் 6 பொசிஷன்களில் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களைக் கொண்டு மட்டுமே களமிறங்குகிறது பஞ்சாப். லிவிங்ஸ்டன் ஒன்றிரண்டு ஓவர்கள் எப்போதாவது போடுவார் என்றாலும் அது உரிய தாக்கத்தை உண்டாக்குமா என்பது கேள்விக்குறியே.

கேப்டன் தவான் :

ஐ.பி.எல்லின் சூப்பர்ஸ்டார் பேட்ஸ்மேன் தவான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவரின் கேப்டன்சி ரெக்கார்ட் கவலைக்கிடமாகவே இருக்கிறது. சன்ரைஸர்ஸ் அணிக்கு கேப்டனாக அவர் விளையாடிய 11 போட்டிகளில் ஐந்தில் மட்டுமே வெற்றி. பஞ்சாப் அணியின் கேப்டனாக அவர் இந்த இரண்டு சீசன்களில் ஆடிய 12 போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றி. எனவே இந்தமுறை ஒரு கேப்டனாகவும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் தவான்.

ப்ளேயிங் லெவன் :

ஷிகர் தவான், பேர்ஸ்டோ, ப்ரப்சிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டன், அதர்வா டைட், ஜித்தேஷ் சர்மா, சாம் கர்ரன், நாதன் எல்லீஸ், அர்ஷதீப் சிங், ராகுல் சஹார், ஹர்ஷல் படேல்.

பேர்ஸ்டோவின் அனுபவத்தை அணி நிர்வாகம் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் என்றே தோன்றுகிறது. ஒருவேளை பேர்ஸ்டோ சொதப்பினால் ஓபனிங் ப்ரப்சிம்ரன் சிங் ஆட மிடில் ஆர்டரில் சிக்கந்தர் ராஸா களமிறங்குவார். அப்படி ராஸா களமிறங்கும்பட்சத்தில் ஒரு எக்ஸ்ட்ரா ஸ்பின் ஆப்ஷனும் அணிக்குக் கிடைக்கும். சமீபத்திய ஃபார்மின் அடிப்படையில் நாதன் எல்லீஸ் பவுலராக களமிறங்கவே வாய்ப்புகள் அதிகம்.

இம்பேக்ட் பிளேயர் :

ஹர்ப்ரீத் ப்ரார் - அணிக்கு எக்ஸ்ட்ரா ஸ்பின்னர் நிச்சயம் தேவை என்கிற நிலை வரும்போது.

தனய் தியாகராஜன் - அணிக்கு எக்ஸ்ட்ரா பாஸ்ட் பவுலிங் ஆப்ஷன் தேவைப்படும்போது.

தனி ஒருவன் :

ஜித்தேஷ் சர்மா - இந்திய அணியில் லேட்டஸ்ட் வரவு. மிடில் ஆர்டரில் இறங்கி வெளுக்கக்கூடியவர். இந்தமுறை பஞ்சாப் அணியின் ஃபினிஷர் ரோலை இவரே கையாளக்கூடும். இந்த டி20 உலகக்கோப்பைக்குப் பின் அடுத்த தலைமுறை அணி தயாராகும் என்பதால் அதில் தன் பெயரை இணைத்துக்கொள்ள கடுமையாக போராடுவார். அதனால் வாண வேடிக்கைகள் இருக்கும் என நம்பலாம்.

தங்கள் ஆஸ்தான கிரவுண்டான ஐ.எஸ் பிந்த்ராவுக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு இந்தமுறை புதிதாக கட்டப்பட்டுள்ள முல்லன்பூர் யதவீந்திர சிங் ஸ்டேடியத்தை தங்கள் ஹோம் கிரவுண்டாகக் கொண்டு களமிறங்குகிறது பஞ்சாப். புதிய ஸ்டேடியம் என்பதால் ஆடுகளம் தங்களுக்கு சாதகமாய் இருக்குமா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள பஞ்சாப் அணிக்குமே கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படலாம். கூடவே, பஞ்சாப் அணி ப்ளே ஆப்பிற்கு தகுதி பெறுமா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள நமக்கும். பார்ப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com