IPL 2023 : ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர வைத்த சிறந்த 5 போட்டிகள்!

எப்போதும் இல்லாத வகையில் இந்த வருட ஐபிஎல் தொடரானது பல சுவாரசியம் நிறைந்த போட்டிகளை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்தது.
IPL 2023 Best Matches
IPL 2023 Best MatchesTwitter
Published on

2023 ஐபிஎல் தொடரில் பல புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அந்த விதிகள் அனைத்துமே போட்டியின் விறுவிறுப்பை இன்னும் அதிகமாக்கின. புதிய விதிகளில் இம்பேக்ட் பிளேயர் ரூல், நோ-பால் மற்றும் ஒய்டு பந்துக்கு ரிவ்யூ, போட்டியின் நேரம் அதிகமானால் 30 யார்ட் வட்டத்திற்குள் வெளியே பீல்டர்கள் குறைப்பு, பந்தை எதிர்கொள்ளும் போது வீரர்கள் சம்மந்தம் இல்லாமல் சைகையோ நகரவோ செய்தால் பெனால்டி ரன்கள், 4 அல்லது 5 சப்டியூட் வீரர்களை பயன்படுத்தலாம் என்பது போன்ற பல விதிகள், ஆட்டத்தை யாருக்கு சாதகம் என்ற நிலைக்கே செல்ல விடாமல் இறுதிவரை விறுவிறுப்பாகவே வைத்திருந்தது.

Impact Player Rule
Impact Player RuleTwitter

முக்கியமாக இம்பேக்ட் பிளேயர் விதிமுறையானது 2023 ஐபிஎல் தொடரையே கோலாகலமாக மாற்றியது என்றே சொல்லலாம். இந்த விதிமுறைக்கு முன்பு வரை டாஸ் வென்றுவிட்டால் போதும் அந்த அணிக்கே கிட்டத்தட்ட எல்லாம் சாதகமாக முடியும். ஆனால் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை என்பது முக்கியமான நேரத்தில் ஒரு பந்துவீச்சாளரையோ, பேட்ஸ்மேனையோ 12ஆவது வீரராக களத்தில் இறக்கிக்கொள்ளலாம். அப்படி வரும் பல இம்பேக்ட் வீரர்கள் 2023 ஐபிஎல் தொடரில் நிச்சயம் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் . அதே நேரம் இந்த விதிமுறையானது பல வீரர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை கிடைக்கவிடாமலும் செய்தது. என்ன இருப்பினும் இந்த விதி கடைசிவரை கூடுதல் சுவாரசியம் கூட்டியது. அந்தவகையில் இந்த வருட ஐபிஎல்லில் ரசிகர்களை நகரவே விடாமல் கட்டிப்போட்ட 5 போட்டிகளை இதில் பார்க்கலாம்.

5. 1 பந்தில் 5 ரன்கள் தேவை என்ற இடத்தில் நோ-பால் வீசிய சந்தீப் ஷர்மா!

தொடரின் முதல் பாதியில் எதிர்கொள்ளும் அனைத்து அணிகளையும் தோற்கடித்து, இந்த வருட ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணியாக எல்லோருடைய தேர்வாகவும் இருந்துவந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஆனால் முதல் 5 போட்டிகளில் 4-ல் வெற்றிபெற்று வலுவாக இருந்த ராஜஸ்தான் அணி, அதற்கடுத்த 6 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் வாழ்வா சாவா என்ற போட்டியில் சொந்த மண்ணான ஜெய்ப்பூரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடியது ராஜஸ்தான். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் மற்றும் சஞ்சு சாம்சன் 3 பேரின் அதிரடியான பேட்டிங்கால் 214 ரன்களை குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். 10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என அதிரடி காட்டிய பட்லர் 95 ரன்கள் குவித்தார்.

Sandeep Sharma
Sandeep Sharma

215 ரன்கள் என்ற பெரிய இலக்கை துறத்திய சன்ரைசர்ஸ் அணியில், அனைத்து பேட்டர்களும் அதிரடியான பேட்டிங்கை ஆடினர். 17 ஓவர்கள் முடிவில் 171/3 என்ற நிலையில் இருந்த சன்ரைசர்ஸ் அணி 18 பந்துகளில் 44 ரன்கள் தான் தேவை என்று வலுவான இடத்தில் தான் இருந்தது. ஆனால் 18ஆவது ஒவரை வீசிய சாஹல் வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து த்ரிப்பாத்தி மற்றும் மார்க்ரம் இருவரையும் வெளியேற்றி அசத்தினார். கடைசி 2 ஓவருக்கு 41 ரன்கள் என்று கடினமாக போட்டி மாறினாலும், அடுத்து களத்திற்கு வந்த க்ளென் பிலிப்ஸ் ஹாட்ரிக் சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என பறக்கவிட்டு, ராஜஸ்தான் அணியின் ப்ளே ஆஃப் கனவில் மண்ணை போட்டார். அடுத்த பந்தில் ராஜஸ்தான் பிலிப்ஸை வெளியேற்றினாலும், அந்த ஒரு ஓவரில் மட்டும் 24 ரன்களை அடித்திருந்தது சன்ரைசர்ஸ் அணி.

Abdul Samad
Abdul Samadespn

கடைசி 6 பந்துக்கு 17 ரன்கள் என்று போட்டி மாற, கடைசி ஓவரை சந்தீப் சர்மா சிறப்பாகவே வீசினார். முதல் பந்திலேயே ஒரு கேட்ச்சை கோட்டைவிட்டு ராஜஸ்தான் அணி சொதப்பியது. இருப்பினும் 5 பந்துகளில் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த சந்தீப் கலக்கினார். கடைசி 1 பந்துக்கு 5 ரன்கள் தேவை என போட்டிமாற, ஸ்டிரைக்கில் இருந்த அப்துல் சமாத் ஒய்டு யார்க்கராக வீசப்பட்ட பந்தை தூக்கி சிக்சருக்கு அடிக்கிறார். பவுண்டரி லைனுக்கு அருகே இருந்த ஜோஸ் பட்லர் கேட்ச்சை பிடிக்க, ராஜஸ்தான் ரசிகர்கள் வெற்றிபெற்றுவிட்டதாகவே ஆரவாரம் செய்தனர். ஆனால் அம்பயர் அந்த பந்தை நோ-பால் என அறிவிக்க ஒட்டுமொத்த ராஜஸ்தான் அணியும் ஆடிப்போனது. சந்தீப் சர்மா நோ-பால் வீசி 1 ரன் வழங்க, கடைசி 1 பந்துக்கு 4 ரன்கள் அடித்தால் போதும் என்ற நிலையானது. அப்போது கடைசி பந்தையும் தவறான லெந்தில் சந்தீப் சர்மா வீச, அதை நேராக சிக்சருக்கு அடித்த அப்துல் சமாத் அற்புதமான ஒரு வெற்றியை சன்ரைசர்ஸ் அணிக்கு தேடித்தந்தார். வெற்றிபெற வேண்டிய போட்டியில் தோல்வியை தழுவியதால் தான், ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் வராமல் வெளியேறியது.

4. மும்பை அணிக்கு எதிராக 2 முறை ஸ்டம்பை உடைத்த அர்ஸ்தீப் சிங்!

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இடையேயான போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய பஞ்சாப் அணி 83/4 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய நிலையில், அதற்கு பிறகு கைகோர்த்த சாம் கரன், ஹர்ப்ரீத் சிங், ஜிதேஷ் சர்மா 3 பேரின் அபாரமான ஆட்டத்தால் 214 ரன்களை குவித்தது.

215 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்திய மும்பை அணி சொந்த மைதானத்தில் சிறப்பாகவே விளையாடியது. கேம்ரான் க்ரீன் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரின் அதிரடியான ஆட்டத்தால், இலக்கை எட்டிவிடும் நிலைக்கே சென்றது போட்டி. ஆனால் கடைசி 6 பந்துக்கு 16 ரன்கள் என்ற இடத்தில் போட்டி இருக்க, கடைசி ஓவரை அற்புதமாக வீசிய அர்ஸ்தீப் சிங் திலக் வர்மா மற்றும் நேஹல் வதேரா இருவரது ஸ்டம்ப்பையும் இரண்டாக உடைத்து வெளியேற்றினார். வெறும் 2 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டை கைப்பற்றிய அர்ஸ்தீப் 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தினார்.

ஆனால் போட்டி முடிந்த பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணியானது அவர்களுடைய டிவிட்டர் பக்கத்தில், மும்பை சிட்டி போலீஸை டேக் செய்து “ ஹே மும்பை போலீஸ் உங்களிடம் ஒரு க்ரைம் குறித்து புகாரளிக்க விரும்புகிறோம்” என்று ட்வீட் செய்திருந்தது. இந்நிலையில் அதற்கடித்த போட்டியில் பஞ்சாப் அணியை மும்பை வீழ்த்திய பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணி “அனைத்து போலீசிற்கும் ஒரு தகவல், இங்கே ஒரு அணி தோற்கடிக்கப்பட்டது. வேறொன்றும் இல்லை உங்களுடைய பணியை நீங்கள் பாருங்கள்” என பதில் போட்டு அசத்தியது.

3. வெற்றிக்கு பிறகு ஹெல்மெட்டை தரையில் அடித்த ஆவேஷ் கான்!

லக்னோ மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியானது, இந்த ஐபிஎல்லில் அதிகப்படியான பேசுபொருளாகவே இருந்தது. ஆர்சிபி மற்றும் லக்னோ அணிகள் மோதிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, கேஜிஎஃப்(கோலி க்ளென் மேக்ஸி ஃபாஃப் டூ பிளெஸ்ஸி) மூன்று பேரின் அதிரடியால் 212 ரன்களை குவித்தது. 213 என்ற கடினமான இலக்கை துரத்திய லக்னோ அணியில் கைல் மெயர்ஸ் மற்றும் க்ருணால் பாண்டியா இருவரையும் டக் அவுட்டில் வெளியேற்றிய ஆர்சிபி அணி, 23 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. ஆனால் அதற்கு பிறகு ஜோடி சேர்ந்த ஸ்டோய்னிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் அதிரடியான பேட்டிங்கால் போட்டியில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினர். இருப்பினும் மீண்டும் கம்பேக் கொடுத்த ஆர்சிபி பவுலர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி, போட்டியை கட்டுக்குள்ளாகவே வைத்திருந்தனர். 19 ஓவர் முடிவில் 208 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருக்க, களத்தில் பவுலர்கள் மட்டுமே நிலைத்திருந்தனர். இருப்பினும் 6 பந்துக்கு 5 ரன்கள் தான் தேவை என்று போட்டி மாற, யாருக்கு வேண்டுமானாலும் வெற்றி சேரலாம் என்று மாறியது.

Avesh khan
Avesh khanTwitter

கடைசி ஓவரை வீசிய ஹர்சல் பட்டேல் மார்க் உட் விக்கெட்டை எடுத்து வெளியேற்ற, லக்னோ அணி மீது அழுத்தம் அதிகமானது. ஆனால் களத்தில் இருந்த ரவி பிஸ்னோய் மற்றும் உனாத்கட் 2 ரன்கள், 1 ரன் ஓடி எடுக்க, கடைசி 2 பந்துக்கு 1 ரன் தான் தேவை என்று போட்டி மாறியது. ஆனால் அப்போது உனாத் கட் விக்கெட்டை ஹர்சல் வீழ்த்த ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகமானது. கடைசி 1 பந்துக்கு 1 ரன் தான் தேவை இருக்க, 1 ரன் எடுத்தால் லக்னோ வெற்றி, டாட் பந்தோ அல்லது விக்கெட்டையோ வீழ்த்தினால் சூப்பர் ஓவர் என போட்டி மாறியது. பரபரப்பான கடைசி நேரத்தில் இறுதி பந்தை டாட் பாலாக ஹர்சல் வீச, அதை பிடிப்பதில் கோட்டை விட்டார் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்.

இந்நிலையில் வெற்றிக்கு தேவையான 1 ரன்னை ஓடி எடுத்த ஆவேஷ் கான், ஹெல்மெட்டை தரையில் அடித்து வெற்றியை கொண்டாடுவார். அவர் தான் ஒருபுறம் என்றால் லக்னோ அணியின் மெண்டரான கவுதம் கம்பீர், ஆர்சிபி ரசிகர்களை பார்த்து “வாயில் கைவைத்து சத்தம் போடக்கூடாது” என்பது போல் சைகை செய்தார். சொந்த மண்ணில் இந்த தோல்வியை சந்தித்திருந்த பெங்களூர் அணி, அடுத்த போட்டியில் லக்னோவை அதன் சொந்த மண்ணிலேயே வைத்து தோற்கடித்து கெத்து காட்டியது. அந்த போட்டியின் போது ஒவ்வொரு விக்கெட்டுக்கும் லக்னோ வீரர்களை வெறுப்பேற்றிய விராட் கோலி, போட்டி முடிந்த பிறகு நவீன் உல் ஹக் மற்றும் கவுதம் கம்பீர் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இருவருக்கும் அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்.

2. கடைசி ஓவரீல் 5 பந்துக்கு 5 சிக்சர்களை அடித்த ரிங்கு சிங்!

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டிக்கு பிறகு ரிங்கு சிங் என்ற புதிய ஹீரோ உருவெடுத்தார். நம்பவே முடியாத இடத்தில் இருந்து வெற்றியை தேடித்தந்த ரிங்கு சிங்கை, இந்த ஐபிஎல்லின் சிறந்த கண்டுபிடிப்பு என்று கூறலாம். விஜய் சங்கர் மற்றும் சாய் சுதர்சன் என்ற இரண்டு தமிழக வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால் 204 ரன்களை குவித்தது டைட்டன்ஸ் அணி. 205 ரன்களை துறத்திய கொல்கத்தா அணிக்கு எதிராக சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய குஜராத் அணி, விரைவாகவே இரண்டு விக்கெட்டை கைப்பற்றி அசத்தியது. ஆனால் பிறகு ஜோடி சேர்ந்த வெங்கடேஸ் ஐயர் மற்றும் நிதிஸ் ரானா இருவரும் போட்டியை குஜராத் கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச்சென்றனர். ஆனால் முக்கியமான நேரத்தில் நிதிஸ் ரானா மற்றும் வெங்கடேஸ் ஐயர் இருவரையும் அல்சாரி ஜோசப் வெளியேற்ற, அடுத்து வந்த ரஸ்ஸல் (1), சுனில் நரைன் (0) மற்றும் ஷர்துல் தாக்கூர் (0) மூன்று பேரையும் தொடர்ச்சியாக வெளியேற்றி அடிக்கு மேல் அடி கொடுத்தார் ரசீத் கான்.

IPL 2023 Best Matches
GTvKKR | ஈஸ்டர் சண்டேயில் உயிர்த்தெழுந்த IPL... 66666 அதிரடி சரவெடி ரிங்கு..!

கடைசி 6 பந்துக்கு 29 ரன்கள் தேவை என்ற இடத்தில் முதல் பந்தில் 1 ரன்னை கொடுத்த யாஸ் தயாள் சிறப்பாகவே தொடங்கினார். 5 பந்துக்கு 28 ரன்கள் தேவை எப்படியும் டைட்டன்ஸ் அணி தான் வெற்றிபெற போகிறது, என்ன 5 பந்துக்கு 5 சிக்சரா வரப்போகுது என டிவியையும், மொபைல் போனையும் ஆஃப் செய்துவிட்டே போய்விட்டனர் ரசிகர்கள். ஆனால் களத்தில் இருந்த ரிங்கு சிங் பேட்டிங்கில் ஒரு சூறாவளியையே கிளப்பியிருந்தார். ஹாட்ரிக் சிக்சர்களை அடித்த போது கூட யாரும் அவர் வெற்றியை தேடித்தருவார் என்று சொன்னால் நம்பியிருக்கவே மாட்டார்கள். 5 ஆவது பந்தில் 4ஆவது சிக்சரை அடித்த போது தான் “என்னவோ பன்றாரு பா இந்தாளு” என்றே தோன்றியது. நம்பலாமா வேண்டாமா என்று கண்ணை மூடித்திறப்பதற்க்குள் அவர் 5ஆவது சிக்சரையும் கிரவுண்டிற்குள் அடித்துவிட்டு ஓடிவந்துகொண்டிருந்தார். கடைசி 6 பந்தில் 31 ரன்களை அடித்து நம்பமுடியாத ஒன்றை நிகழ்த்தி காட்டிய ரிங்கு சிங் மிரட்சியையே ஏற்படுத்தினார்.

1. கடைசி 2 பந்துக்கு 10 ரன்கள் தேவை என்ற இடத்தில் கோப்பையை வென்ற ஜடேஜா!

இந்த பட்டியலில் முதலிடத்தில் பிடிப்பது கோப்பையை வெல்வதற்கு ஜடேஜா அடித்த அந்த 10 ரன்கள் போட்டி தான். கோப்பைக்கான இறுதிபோட்டியை காண 3 நாட்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு விருந்தையே படைத்தார் ரவீந்திர ஜடேஜா. கடைசி 6 பந்துக்கு 13 ரன்கள் தேவை என்ற இடத்தில் அற்புதமான பவுலிங்கை வீசிய மோஹித் சர்மா, முதல் 4 பந்தில் 3 ரன்களை மட்டுமே கொடுத்து கலக்கிப்போட்டார்.

IPL 2023 Best Matches
CSKvGT | சாம்பியன்ஸ்... தோனி ஸ்டம்பிங் முதல் ஜடேஜாவின் வின்னிங் ஷாட் வரை... எல்லாமே சென்னை தான்..!

கடைசி 2 பந்துக்கு 10 ரன்கள் என்று போட்டி மாற, களத்தில் இருந்த ஜடேஜாவா இல்லை மோஹித் சர்மாவா யார் அழுத்தத்தை சிறப்பாக கையால போவது என்று கடினமான நிலைக்கு போட்டி சென்றது. போட்டியின் தவறான முடிவை பார்க்க விரும்பாத சிஎஸ்கே கேப்டன் தோனி கண்களை மூடிக்கொண்டு தலையை குணிந்தபடி அமர்ந்திருந்தார். அவுட்டாய்ட்டு போங்க ஜடேஜா நாங்க தோனியை பார்க்கனும் என்று கத்திய சிஎஸ்கெ ரசிகர்கள், “ஜெயிச்சுடு மாறா” என்றபடி ஜடேஜாவை பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் 5ஆவது பந்தில் நேராக தூக்கியடித்து சிக்சரை அனுப்பிய ஜடேஜா கலக்கி போட்டார்.

கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை என மாற இரண்டு அணி ரசிகர்களும் அழுத்தம் தாங்காமல் அழவே ஆரம்பித்து விட்டனர். இறுதி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரவீந்திர ஜடேஜா தலைகுணிந்த தோனியை தலைநிமிர வைத்தார். நேராக தோனியை நோக்கி ஜடேஜா ஓட, ஜடேஜாவை தன் தோளில் தூக்கிவைத்து அழுவார் எம் எஸ் தோனி. ஆம் உங்கள் கண்களில் விரிகிறது அல்லவா அதே காட்சி தான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com