ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் 22ஆவது லீக் போட்டியில் இன்று, மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்தப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கவில்லை. வயிற்று வலி காரணமாக ரோகித் சர்மா ஓய்வில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக இந்தியாவின் 360 வீரர் என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.
இந்த சீசனில், இன்றைய போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர் களமிறங்கியுள்ளார். மும்பை அணி இவரை அடக்க விலைக்கு ஏலத்தில் எடுத்திருந்த போதிலும் இதுவரை வாய்ப்பு வழங்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியில் இன்று அர்ஜூன் அறிமுகமானார். அத்துடன், மும்பை அணிக்காக முதல் ஓவரையும் வீசினார். அந்த ஓவரில் 5 ரன்களை வழங்கினார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தந்தையும், பின்னர் மகனும் விளையாடியுள்ளனர். ஆனால், ஐபிஎல் போட்டியில் தந்தைக்கு (சச்சின்) பின்னர் மகன் (அர்ஜூன்) விளையாடுவது இதுவே முதல் முறை.
இந்தப் போட்டியில் மும்பை அணி வீரர்கள் வழக்கமாக அணியும் ஜெர்ஸியுடன் இன்று களமிறங்கவில்லை. கல்வி மற்றும் விளையாட்டு அனைவருக்குமானது என்பதை அனுசரிக்கும் தினம் இன்று (ESA Day - Education and Sports For All) கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை அனுசரிக்கும் வகையில் பிரத்யேகமான ஜெர்ஸி தயாரிக்கப்பட்டு அதனை அணிந்து மும்பை வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை 3 போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் அடைந்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவிய மும்பை அணி டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கடைசிப் பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. அந்த வகையில், தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் இன்று விளையாடி வருகிறது.