மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 62 பந்துகளில் 16 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 124 ரன்கள் விளாசி அசத்தினார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் யாஷஸ்வி ஜெய்ஸ்வால்.
இந்திய அணிக்காக விளையாடாத ஒரு இந்திய வீரரால், ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.
மும்பை அணியின் பந்துவீச்சை தனி ஒருவனாக அடித்து நொறுக்கி, தனது 21-வது வயதில் இப்படியொரு அபாரமான இன்னிங்ஸை ஆடி அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார் ஜெய்ஸ்வால்.
நடப்பு ஐபிஎல் சீசனில் அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜெய்ஸ்வால், இதுவரை ஆடிய 9 போட்டிகளில் 3 அரை சதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் 428 ரன்களை குவித்து விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். இதற்காக அவர் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானதல்ல.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பஹோடி என்ற ஊரில் பிறந்தவர் ஜெய்ஸ்வால். இவரின் தந்தை ஒரு சிறிய ஹார்டுவேர் கடையை நடத்தி வந்திருக்கிறார். கிரிக்கெட் மீது ஜெய்ஸ்வாலுக்கு சிறு வயதிலிருந்தே அதீதமான ஆர்வம். ஆனால், குடும்பச் சூழ்நிலை காரணமாக முழு நேரமும் இவரால் கிரிக்கெட் விளையாட முடியாமல் போயுள்ளது. இருந்தபோதிலும் கடைகளில் வேலை பார்த்துக் கொண்டே, கிடைத்த நேரத்திலெல்லாம் கிரிக்கெட் விளையாடி வந்திருக்கிறார்.
ஜெய்ஸ்வால் தனது 10 வயதில் ஆசாத் மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி பெறுவதற்காக மும்பைக்கு சென்றுள்ளார். அப்போது கிரிக்கெட் பயிற்சிக்கு பணம் சேர்ப்பதற்காக ஒரு பால் பண்ணையில் வேலைப் பார்த்து வந்துள்ளார். அங்கு கடையிலேயே தங்கி வேலை செய்து வந்த ஜெய்ஸ்வால், தனது வேலைக்கிடையிலும் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளார். இதனால், ‘வேலைநேரத்தில் சரியாக பணி செய்யவதில்லை’ எனக்கூறப்பட்டு, ஒரு கட்டத்தில் வேலையை விட்டு அனுப்பப்பட்டிருக்கிறார்.
அடுத்து என்ன செய்வதென தெரியாமல் தவித்துவந்த நிலையில், ஆசாத் மைதானத்தில் உள்ள முஸ்லிம் யுனைடெட் டெண்ட்டில் தங்கினார் ஜெய்ஸ்வால்.
இங்கு தங்கியிருந்தபடியே பகுதி நேரமாக பானிபூரி விற்பனையும் செய்து வந்துள்ளார்.
பல மாதங்கள் இதே இடத்தில் தங்கி கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டு, டெண்ட்டில் தோட்டக்காரர்களுடன் தங்கியிருந்த ஜெய்ஸ்வாலுக்கு அநேக அசெளகரியங்களும் ஏற்பட்டுள்ளன. பயிற்சிக்காக அங்கிருந்து மைதானத்திற்கு செல்வது அவருக்கு வசதியாக இருந்தாலும், டெண்ட்டில் தங்குவது பல காரணங்களால் கடினமாக இருந்துள்ளது. குறிப்பாக தோட்டக்காரர்களால் மோசமாக நடத்தப்படுவது; உணவு சமைக்கும்படி கட்டாயப்படுத்தப்படுவது; கழிப்பறை வசதியில்லா நிலைமை; பொருளாதார ரீதியிலோ மனரீதியிலோ உதவியில்லாமல் அவதி என பற்பல போராட்டங்களை எதிர்கொண்டுள்ளார் ஜெய்ஸ்வால்.
இருப்பினும் அதையெல்லாம் சகித்துக்கொண்டு கிரிக்கெட் பயிற்சியில் முழு கவனத்தையும் செலுத்தி வந்திருக்கிறார்.
ஜெய்ஸ்வாலின் கிரிக்கெட் திறமையையும் ஆர்வத்தையும் உற்றுக்கவனித்த உள்ளூர் கிரிக்கெட் பயிற்சியாளர் ஜ்வாலா சிங் என்பவர், ஒருகட்டத்தில் அவரின் கிரிக்கெட் வழிகாட்டியாக மாறினார். ஜெய்ஸ்வாலுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்ததோடு பயிற்சியாளராகவும் மாறி, உதவி செய்துள்ளார் ஜ்வாலா சிங். அன்று முதல் இன்று வரை ஜெய்ஸ்வாலின் கிரிக்கெட் கேரியருக்கு பக்கபலமாக இருந்து வருகிறார் ஜ்வாலா சிங்.
* 2015ஆம் ஆண்டு நடைபெற்ற கில்ஸ் ஷீல்ட் போட்டியில் 319 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
* 2016-ல் 16 வயதிற்குட்பட்ட மும்பை அணியில் சேர்க்கப்பட்டார்.
* 2019-ல் ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக களம்கண்டார். இதுவே அவரது முதல் அறிமுகப் போட்டி.
* அதே 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ‘விஜய் ஹசாரே கோப்பை’ தொடரிலும் மும்பை அணிக்காக விளையாடினார். இதில், ஜார்கண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 154 பந்துகளில் 203 ரன்கள் எடுத்து கவனம் ஈர்த்தார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த இளம் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்தார். அப்போது அவருக்கு வயது, 17 வருடங்கள் 192 நாட்கள் ஆகும்.
* 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் விளையாடினார். இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் சதம் அடித்து அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
* அண்டர்-19 உலகக் கோப்பை தொடரில் கலக்கிய ஜெய்ஸ்வாலுக்கு ஐபிஎல் தொடரில் கதவு திறந்தது.
* 2020 ஐபிஎல் ஏலத்தில் அறிமுக வீரராக இடம்பிடித்த இவரை, ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியது. 2.40 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. ஆனால் அந்த சீசனில் ஜெய்ஸ்வால் பெரிதாக சோபிக்கவில்லை.
* 2021 ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் 249 ரன்கள் அடித்தார். இவரின் அபாரமான ஆட்டம் 2022 ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்தது. 10 போட்டிகளில் விளையாடிய ஜெய்ஸ்வால் 258 ரன்களை எடுத்திருந்தார்.
* நடப்பு ஐபிஎல் சீசனில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் ஜெய்ஸ்வால் இதுவரை ஆடிய 9 போட்டிகளில் 3 அரை சதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் 428 ரன்களை குவித்திருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் ஒட்டுமொத்த அணிகளிலும் அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் ஜெய்ஸ்வால் முதலிடத்தில் இருக்கிறார்.
ஜெய்ஸ்வாலின் இந்த அதிரடி ஆட்டம் இந்திய அணியில் அவர் நுழைவதற்கான திறவுகோலாக அமையுமா என ரசிகர்களும் கிரிக்கெட் ஆர்வலர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பானிபூரி விற்பவராக, தோட்டவேலைகள் செய்தவராக, ஹோட்டல்களில் பணியாற்றவராக தொடர்ந்து போராடி வந்த ஜெய்ஸ்வால்.... இன்று தன் கனவுகளுக்காக தடைகளைத் தாண்டி பெற்றுள்ள வெற்றியென்பது, அவரைப்போன்ற ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை ஊற்று!