INDvBAN | இந்தியாவுக்கு டஃப் கொடுக்குமா வங்கதேசம்..?

பண்ட் & சூர்யா பேட்டிங்கில் அசத்திக்கொண்டிருக்க, பௌலிங்கில் எல்லோருமே கலக்குகிறார்கள். நட்சத்திர ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பான ரோஹித் & கோலி தான் சற்று ஏமாற்றம் தருகிறார்கள்.
Virat Kohli | Rohit Sharma
Virat Kohli | Rohit SharmaRicardo Mazalan
Published on
போட்டி எண் 47: வங்கதேசம் vs இந்தியா
சூப்பர் 8 பிரிவு: குரூப் 1
போட்டி நடக்கும் மைதானம்: சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா
போட்டி தொடங்கும் நேரம்: ஜூன் 22, இந்திய நேரப்படி இரவு 8 மணி

இந்த உலகக் கோப்பையில் இதுவரை

வங்கதேசம்: போட்டிகள் - 5, வெற்றிகள் - 3, தோல்விகள் - 2, முடிவு இல்லை - 0
சிறந்த பேட்ஸ்மேன்: தௌஹித் ஹிரதோய் - 5 போட்டிகளில் 135 ரன்கள்
சிறந்த பௌலர்: தன்சிம் ஹசன் சகிப் - 5 போட்டிகளில் 9 விக்கெட்டுகள்
சமீபமாக ஐசிசி தொடர்களில் தடுமாறி வந்த வங்கதேச அணி, இந்த உலகக் கோப்பையை சிறப்பாகத் தொடங்கியது. முதல் போட்டியில் இலங்கையை 2 விக்கெட்டுகளில் வீழ்த்தி அப்போது சூப்பர் 8க்கான வாய்ப்பை அதிகரித்தது. அடுத்த போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் தோற்றிருந்தாலும், கடைசி 2 போட்டிகளில் நெதர்லாந்தையும், நேபாளத்தையும் முறையே 25 மற்றும் 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 8 சுற்றை உறுதி செய்தது அந்த அணி. சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 28 ரன்கள் (DLS முறைப்படி) வித்தியாசத்தில் தோற்றது வங்கதேசம்.

Virat Kohli | Rohit Sharma
இப்படி ஒரு விதியா? ’ஹிட் விக்கெட் + ரன்அவுட்’ 2 முறை அவுட்டாகியும் NOTOUT கொடுக்கப்பட்ட பேட்ஸ்மேன்!

இந்தியா: போட்டிகள் - 5, வெற்றிகள் - 4, தோல்வி - 0, முடிவு இல்லை - 1
சிறந்த பேட்ஸ்மேன்: ரிஷப் பண்ட் - 4 இன்னிங்ஸில் 116 ரன்கள்
சிறந்த பௌலர்: ஆர்ஷ்தீப் சிங் - 4 இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள்
50 ஓவர் உலகக் கோப்பையில் எப்படி ஆதிக்கம் செலுத்தியதோ (இறுதிப் போட்டியை மறந்துவிடவும்) அதேபோல் இந்த உலகக் கோப்பையிலும் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது ரோஹித் அண்ட் கோ. பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் இந்திய அணி கொஞ்சம் கஷ்டப்படவேண்டியிருந்தது. ஆனால் அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளை எளிதாக வென்றது இந்தியா. அடுத்து சூப்பர் 8 சுற்றிலும் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை எளிதாக 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மென் இன் புளூ.

இந்தியாவை வங்கதேசத்தால் சமாளிக்க முடியுமா?!

இந்திய அணி பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என எல்லா ஏரியாக்களிலுமே சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. பண்ட் & சூர்யா பேட்டிங்கில் அசத்திக்கொண்டிருக்க, பௌலிங்கில் எல்லோருமே கலக்குகிறார்கள். நட்சத்திர ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பான ரோஹித் & கோலி தான் சற்று ஏமாற்றம் தருகிறார்கள். அவர்களும் கிளிக் ஆகிவிட்டால் இந்திய அணியைத் தடுப்பது முடியாத காரியம் ஆகிவிடும். கடந்த போட்டியில் முதல் வாய்ப்பு பெற்ற குல்தீப்பும் சிறப்பாக பந்துவீசியிருப்பது அணிக்கு கூடுதல் நம்பிக்கை கொடுக்கும். இந்திய பௌலிங் அசத்தலாக இருக்கும் நிலையில், வங்கதேச அணியோ பேட்டிங்கில் தடுமாறுகிறது. பெரும்பாலும் தௌஹித் ஹிரதோயையே நம்பவேண்டியிருக்கிறது. அவர்தான் ஓரளவு எல்லாப் போட்டிகளிலும் போராடுகிறார். மற்றவர்கள் ஒவ்வொரு போட்டியில் நல்ல இன்னிங்ஸ் ஆடினாலும் சீராக எல்லாப் போட்டிகளிலும் ஆடத் தவறுகிறார்கள். அனைவரும் ஒருசேர சிறப்பாக ஆடினால் மட்டுமே இந்திய பௌலிங்கை சமாளிக்க முடியும். இந்திய அணியைப் பொறுத்தவரை எந்த மாற்றங்களும் செய்யமாட்டார்கள். வங்கதேசம் கடந்த போட்டியில் கூடுதல் பௌலிங் ஆப்ஷனாக மஹதி ஹசனை அழைத்துவந்தார்கள். இந்தியாவுக்கு எதிராகவும் அது தேவைப்படும்.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்:

வங்கதேசம்: தன்சித் ஹசன், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (கேப்டன்), தௌஹித் ஹிரதோய், ஷகிப் அல் ஹசன், மஹமதுல்லா, மஹதி ஹசன், ரிஷாத் ஹொசைன், டஸ்கின் அஹமது, தன்சிம் ஹசன் சகிப், முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.

இந்தியா: ரோஹித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே, ஹர்திக் பாண்டியா, அக்‌ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, ஆர்ஷ்தீப் சிங்.

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்:

வங்கதேசம் - முஸ்தாஃபிசுர் ரஹ்மான்: இந்திய பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருமே நல்ல டச்சுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் நம் பேட்ஸ்மேன்கள் இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் என்றால் ஒரு அடி பின்னால் வைக்கத்தான் செய்வார்கள். நல்ல ஃபார்மில் இருக்கும் முஸ்தாஃபிசுர் ஆரம்பத்திலேயே அவர்களுக்கு முட்டுக்கட்டை போட்டால், வங்கதேசத்துக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

இந்தியா - ரிஷப் பண்ட்: வங்கதேசத்தின் இடது கை பௌலிங்குகை சமாளிக்க இந்தியா வைத்திருக்கும் அஸ்திரம் பண்ட். சும்மாவே சுழன்று சுழன்று அடிக்கும் அவர், இந்த உலகக் கோப்பையில் செம ஃபார்மில் வேறு இருக்கிறார். பண்ட் vs முஸ்தாஃபிசுர் யுத்தம் இப்போட்டியில் மிகமுக்கியமானதாக இருக்கும்.

கணிப்பு: இந்தியா பெரிய சிரமங்கள் இல்லாமல் இந்தப் போட்டியை வெல்லக்கூடும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com