INDvAUS | அரையிறுதிக்குள் நுழையுமா ஆஸ்திரேலியா..?

குரூப் 1ல் 4 புள்ளிகளோடு இந்திய அணி ஒரு காலை அரையிறுதியில் எடுத்து வைத்துவிட்டது. 2.425 என்ற நல்ல ரன்ரேட் இருக்கிறது. அதனால் இந்தியா மிக மிக பெரிய தோல்வி அடைந்தாலே ஒழிய அந்த அணி நிச்சயம் டாப் 2 இடங்களுக்குள் முடிக்கும்.
Virat Kohli | Rohit Sharma
Virat Kohli | Rohit SharmaRicardo Mazalan
Published on
போட்டி 51: ஆஸ்திரேலியா vs இந்தியா
சூப்பர் 8 பிரிவு: குரூப் 1
போட்டி நடக்கும் மைதானம்: டேரன் சமி நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம், கிராஸ் ஐலட், செயின்ட் லூசியா
போட்டி தொடங்கும் நேரம்: ஜூன் 24, இந்திய நேரப்படி இரவு 8 மணி

இந்த உலகக் கோப்பையில் இதுவரை

ஆஸ்திரேலியா: போட்டிகள் - 6, வெற்றிகள் - 5, தோல்வி - 1, முடிவு இல்லை - 0
சிறந்த பேட்ஸ்மேன்: டிராவிஸ் ஹெட் - 6 இன்னிங்ஸில் 179 ரன்கள்
சிறந்த பௌலர்: ஆடம் ஜாம்பா - 6 போட்டிகளில் 13 விக்கெட்டுகள்
தொடர்ந்து 5 போட்டிகளை வென்று உலகக் கோப்பையில் ராஜ நடை போட்டது ஆஸ்திரேலியா. குரூப் சுற்றில் 4 போட்டிகளையுமே வென்று வந்த அவர்கள், சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் வங்கதேசத்தை வென்று புள்ளிக் கணக்கைத் தொடங்கியிருந்தது. அந்த ராஜ நடை எல்லாம் ஆப்கானிஸ்தானை சந்தித்த வரை தான். ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 148 ரன்கள் எடுக்க, அதை சேஸ் செய்த ஆஸ்திரேலியா 127 ரன்கள் மட்டும் தான் எடுத்தது. 0.223 என்ற பாசிடிவ் ரன்ரேட் இருப்பதால் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது மார்ஷ் அண்ட் கோ.

இந்தியா: போட்டிகள் - 6, வெற்றிகள் - 5, தோல்வி - 0, முடிவு இல்லை - 1
சிறந்த பேட்ஸ்மேன்: ரிஷப் பண்ட் - 5 இன்னிங்ஸ்களில் 112 ரன்கள்
சிறந்த பௌலர்: ஆர்ஷ்தீப் சிங் - 5 போட்டிகளில் 12 விக்கெட்டுகள்
இதுவரை இந்த உலகக் கோப்பை தொடரில் பெரும் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது இந்திய அணி. குரூப் சுற்றில் ஹாட்ரிக் வெற்றிகளோடு தொடங்க, கனடாவுக்கு எதிரான கடைசிப் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இருந்தாலும் தங்கள் வெற்றிப் பயணத்தை சூப்பர் 8 சுற்றிலும் தொடர்ந்திருக்கிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்களில் வீழ்த்திய மென் இன் புளூ, வங்கதேசத்தை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

யாருக்கு அரையிறுதி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

குரூப் 1ல் 4 புள்ளிகளோடு இந்திய அணி ஒரு காலை அரையிறுதியில் எடுத்து வைத்துவிட்டது. 2.425 என்ற நல்ல ரன்ரேட் இருக்கிறது. அதனால் இந்தியா மிக மிக பெரிய தோல்வி அடைந்தாலே ஒழிய அந்த அணி நிச்சயம் டாப் 2 இடங்களுக்குள் முடிக்கும். ஆஸ்திரேலியா 2 புள்ளிகளுடன் 0.223 என்ற ரன்ரேட்டில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியும் 2 புள்ளிகள் பெற்றிருந்தாலும் -0.650 என்ற நெகடிவ் ரன்ரேட்டில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஆக, ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் தோற்றால் அந்த அணி உறுதியாக சென்றுவிடும். இரண்டு அணிகளுமே வென்றால், ரன்ரேட் மிகமுக்கிய அங்கம் வகிக்கும். பாசிடிவ் ரன்ரேட் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு சாதகமான அம்சம்.

ஆப்கானிஸ்தான் முடித்துவிட்டது, இந்தியாவும் முடித்துவிடுமா?

50 ஓவர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய போட்டியில் கடைசி கட்டத்தில் அதைத் தவறவிட்டது ஆப்கானிஸ்தான். ஆனால் சூப்பர் 8 சுற்றில் அவர்களை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளியிருக்கிறது அந்த அணி. அதேபோல் இப்போது இந்தியாவுக்கும் ஒரு வாய்ப்பு. உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்திருந்தது. ஆப்கானிஸ்தான் போல் இப்போது இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவை பழிதீர்க்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பேட்டிங், பௌலிங் என அனைத்து ஏரியாவிலும் எல்லோரும் அசத்திக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் தடுமாறிக்கொண்டிருந்த ரோஹித் - கோலி ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பும் வங்கதேசத்துக்கு எதிரான நன்றாக செயல்பட்டு நம்பிக்கை கொடுத்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணி சற்று நெருக்கடியை சந்தித்திருப்பதால் அதைப் பயன்படுத்தி இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட முனைவார்கள். பந்துவீச்சில் குல்தீப், பும்ரா, ஆர்ஷ்தீப் ஆகியோர் விக்கெட் வேட்டை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை சமாளிப்பது ஆஸ்திரேலியாவுக்கு பெரும் சவால் தான்.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் இணை அவர்கள் பெரிய ஸ்கோர் பதிவு செய்வதில் மிகப் பெரிய அங்கம் வகிக்கும். அதேசமயம் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக அசத்திக்கொண்டிருக்கும் டிராவிஸ் ஹெட்டை வீழ்த்துவது இந்திய பௌலர்களுக்கு மிகப் பெரிய டார்கெட்டாக இருக்கும். அதேசமயம் அவர்கள் பௌலர்கள் தொடர்ந்து அசத்துகிறார்கள். அதிலும் கம்மின்ஸ் தொடர்ந்து 2 போட்டிகளாக ஹாட்ரிக் வீழ்த்தி மிரட்டியிருக்கிறார். அவர்கள் நிச்சயம் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஷாக் கொடுக்கலாம்.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

இந்தியா: ரோஹித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே, ஹர்திக் பாண்டியா, அக்‌ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, ஆர்ஷ்தீப் சிங்.

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்:


ஆஸ்திரெலியா - மிட்செல் ஸ்டார்க்: மிகமுக்கிய தருணங்களில் விஸ்வரூபம் எடுப்பார். போதாக்குறைக்கு இடது கை வேகப்பந்துவீச்சாளர் வேறு. இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவால் கொடுக்கக்கூடும்.

இந்தியா - ஹர்திக் பாண்டியா: பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே நல்ல பங்களிப்பைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அரைசதம் வேறு அடித்திருக்கிறார். இரண்டு ஏரியாவிலுமே ஆஸ்திரேலியாவுக்கு பிரச்சனையாக இருப்பார்.

கணிப்பு: இந்தியா 60 - 40 ஆஸ்திரேலியா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com