இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க மகளிர் அணி, நம் நாட்டு மகளிர் அணியுடன் கூடிய கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது.
முன்னதாக நடைபெற்ற ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய மகளிர் அணி. அடுத்து ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர், கடந்த ஜூன் 28-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி, முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 603 ரன்கள் எடுத்தது.
இந்த ரன் குவிப்பின்போது இந்திய மகளிர் அணி பல புதிய சாதனைகளையும் படைத்தது. மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
பின்னர் கடினமான இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 266 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் சினே ரானா சிறப்பாக பந்துவீசி 8 விக்கெட்களும்ம், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் பாலோ ஆன் பெற்ற தென்னாப்பிரிக்கா 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. அந்த இன்னிங்ஸிலும் அனைத்து விக்கெட்களையும் இழந்த தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 373 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் அவ்வணி 36 ரன்கள் முன்னிலை பெற்றது.
அதாவது, இந்திய அணியைவிட 36 ரன்கள் முன்னிலை (266+373) வகித்தது. இதையடுத்து இந்திய அணிக்கு 37 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதாவது, ஏற்கெனவே இந்திய அணி 603 ரன்கள் எடுத்திருந்ததால், (639-603) அது கழிக்கப்பட்டு வெறும் 37 ரன்கள் மட்டும் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மாவும் (24 ரன்கள்), சதீஷ் சுபாவும் (13 ரன்கள்) ஆட்டமிழக்காமல் 37 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெற வைத்தனர். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஏற்கெனவே டி20 ஆடவர் உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவை இந்தியா வீழ்த்திய நிலையில், மகளிர் அணியும் அதே அணியை வீழ்த்தியிருப்பது பேசுபொருளாகி வருகிறது.