உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தைவிட இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு இருக்கும் ரசிகர்கள் அதிகம். அழுத்திச் சொல்லுகிறேன், இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிக்குத்தான் ரசிகர்கள் அதிகம். போட்டிக்கு வெளியே, மைதானத்தில் நடக்கும் கோஷங்களுக்கு அல்ல. உதாரணமாக, நேற்றைய போட்டியில் கூட பாதி இந்திய அணி, பாதி பாகிஸ்தான் அணி கொண்ட டீசர்ட்டை ரசிகர் ஒருவர் அணிந்து வந்திருந்தார்.
உலக அரசியல் இப்போதைக்கு வேண்டாம். ஆட்டத்திற்குள் செல்லலாம்.
ஆடவர் டி20 உலகக்கோப்பையில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் குரூப் Aவில் இடம்பெற்றுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி நியூயார்க்கில் உள்ள Nassau County கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
மழை காரணமாக ஆட்டம் தாமதமாகவே தொடங்கப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, டாஸின் போது பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவோ, டாஸ் வென்றிருந்தால் நாங்களும் பந்துவீச்சையே தேர்வு செய்திருப்போம் என தெரிவித்தார். இதிலேயே தெரிந்தது, முதலில் பந்துவீசுவது எத்தனை முக்கியமானது என்று. முதல் ஓவரில் இருந்தே அது கண்கூடானது.
முதல் ஓவரில் இருந்து ஒரு பந்துகூட பேட்டிற்கு வரவில்லை. அனைத்தும் தாறுமாறாக சென்றது. இந்திய பேட்டர்கள் அத்தனைபேரும் சிரமப்பட்டனர். முதல் ஓவரை ஷாகின் அப்ரிடி வீச, சிக்சர் அடித்து இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தார் ரோகித் சர்மா.
பின் விராட்டும் தான் சந்தித்த முதல் பந்திலேயே, தனது கெத்தான கவர் ட்ரைவில் பவுண்டரி விளாச இந்திய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மிதந்தனர். ஆனால் இந்த உற்சாகமோ கொண்டாட்டமோ கொஞ்சமும் நீடிக்கவில்லை. இரண்டாம் ஓவரை நசீம் ஷா வீசிய நிலையில், பவுண்டரிக்குப் பின்பான இரண்டாவது பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார் விராட்.
அடுத்த ஓவரில் ரோகித் சர்மா. ஷாகீன் அப்ரிடி வீசிய பந்தை ரோகித் சர்மா தூக்கி அடிக்க, அது ஹரிஸ் ராஃப் கைகளில் கச்சிதமாக உட்கார்ந்தது. ரோகித் சர்மா பாகிஸ்தானுக்கு எதிராக திணறிய ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்துள்ளார். இதுவரை, பாகிஸ்தானுக்கு எதிரான 11 சர்வதேச டி20 போட்டிகளில் 127 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். சராசரி 14.11 ஆக இருக்கும் நிலையில், அவரது அதிகபட்ச ஸ்கோரே 30 எனும் நிலையில்தான் உள்ளது.
பின் வந்த ரிஷப் பண்ட்டும் அக்சர் படேலும், சற்றே திணறி திணறி ரன்களை சேர்த்தவண்ணம் இருந்தனர். பவர்ப்ளேவில் இந்திய அணி 2 விக்கெட்களை இழந்து 50 ரன்களை எடுத்திருந்தது. அணியின் ஸ்கோர் மெதுவாக உயர்ந்து கொண்டிருந்தபோது, நசீம் ஷா பந்துவீச்சில் அக்சர் படேல் க்ளீன் போல்ட் ஆனார்.
எதிரே விக்கெட்கள் விழுந்தாலும் பவுண்டரியில் மிரட்டிக் கொண்டிருந்தார் ரிஷப் பந்த். ஆனால், அவர் பந்தை ஒரு பக்கம் அடிக்க நினைத்தார் என்றால், பந்து வேறு பக்கம் பவுண்டரிக்கு சென்ற வண்ணம் இருந்தது. தடுமாறிக் கொண்டிருந்த சூர்யகுமார் யாதவும் வெளியேற இந்திய அணி தனது நம்பிக்கையை இழந்து விட்டது என்றே சொல்லலாம்.
பின் வந்த அத்தனை பேட்டர்களும் வந்தார்கள், விழுந்தார்கள், சென்றார்கள்.
துபே, ஜடேஜா, பாண்டியா என எவரொருவரும் மிட்சம் இல்லை. அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். ஐபிஎல் போட்டிகளில் சிக்சர்களாக பறக்கவிட்டனர் இந்திய பேட்ஸ்மேன்கள். உலகக்கோப்பையில் எதிரணிகள் என்ன நிலைக்கு ஆளாகப்போகிறதோ என நாம் சிந்தித்துக் கொண்டிருக்க, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இந்திய அணி சார்பாக மொத்தமாகவே 2 சிக்சர்கள் மட்டுமே அடிக்கப்பட்டிருந்தன. முடிவில் இந்திய அணி 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் மட்டுமே 42 ரன்களை எடுத்திருந்தார். பந்துவீச்சில் அசத்திய பாகிஸ்தானில், ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா தலா 3 விக்கெட்களையும், அமிர் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி தனது நான்காவது குறைந்த பட்ச ஸ்கோரை பதிவு செய்தது. நியூசிலாந்து அணிக்கு எதிராக 2016 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இந்திய அணி 79 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதுவே இந்திய அணி உலகக்கோப்பையில் பதிவு செய்த குறைந்தபட்ச ஸ்கோர்.
120 ரன்கள் எனும் எளிய இலக்கைக் கொண்டு களமிறங்கியது பாகிஸ்தான் அணி. அதிகபட்சம் 15 ஓவர்களில் ஆட்டத்தையே முடித்துவிடுவார்கள் என்றே நினைத்தனர் ரசிகர்கள். முதலில் பேட் செய்த அணிக்கு ஒத்துழைக்காத ஆடுகளம், இரண்டாவது பேட் செய்த அணிக்கா ஒத்துழைக்கப் போகிறது. அதே டெய்லர் அதே வாடகை என்பது போலத்தான் பாகிஸ்தான் இன்னிங்ஸும் இருந்தது.
முதல் 4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி விக்கெட்டை இழக்கவில்லை. 4 ஓவர்களில் 21 ரன்கள் என்ற டீசண்டான ஸ்கோரையே எடுத்திருந்தது. முதல் விக்கெட்டுக்கான தேடல் இருந்தபோது, இந்திய அணியின் மீட்பராக வந்தார் பும்ரா. பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமின் விக்கெட்டை 5 ஆவது ஓவரில் வீழ்த்திக் கொடுத்தார். பவர் ப்ளே முடிவில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட்டை இழந்து 35 ரன்கள் எனும் நிலையில் ஆடி வந்தது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்களும் பாகிஸ்தானின் அடுத்த விக்கெட்டை 10 ஓவர்கள் வரை வீழ்த்தவில்லை.
அந்த ஏக்கத்தை அக்சர் படேல் போக்கினார். தான் வீசிய 10 ஆவது ஓவரின் முதல் பந்திலேயே உஸ்மான் கானை வெளியேற்றினார். இதன் பின்னர் பாகிஸ்தான் அணி எடுத்த ரன்களின் வேகம் மெல்ல மெல்ல குறைந்தது. 13 ஆவது ஓவரை வீசிய பாண்டியா ஒரு ரன்னை மட்டுமே கொடுத்து ஃபாக்கரின் விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆனாலும் ரிஸ்வான் மட்டும் களத்தில் நின்று போராடிக்கொண்டிருந்தார். அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார் பும்ரா. 15 ஆவது ஓவரின் முதல் பந்திலேயே ரிஸ்வான் போல்ட் ஆக இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் சற்றே நிம்மதி பெருமூச்சு வந்தது.
இதன் பின்னர் ஓவருக்கு 2 அல்லது 3 ரன்கள் எனும் நிலையிலேயே ஆடி வந்தனர் பாகிஸ்தான் பேட்டர்கள். அனைத்து வகைகளிலும் பாகிஸ்தானை இறுக்கினர் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள். முடிவில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 113 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. 4 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்திய பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிகபட்ச வெற்றியை பதிவு செய்த அணி என்ற சாதனையையும் இந்திய அணி படைத்துள்ளது. இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 7 முறை வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா அணிகள் உள்ளன. வங்கதேசத்திற்கு எதிராக பாகிஸ்தான் அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஸ்ரீலங்காவும் தலா 6 முறை வெற்றியை பதிவு செய்துள்ளன.
தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம், அதிகபட்ச டாட் பந்துகளை வைத்ததே தோல்விக்கு முக்கிய காரணமாக குறிப்பிட்டார். உலகக்கோப்பையில ஒவ்வொரு ரன்னும், ஒவ்வொரு பந்தும் முக்கியம் பிகிலு!