இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 213 ரன்களை எடுத்தது.
அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணியில் சுப்மன் கில் 34 ரன்களையும், ஜெய்ஸ்வால் 40 ரன்களையும் எடுத்தனர். பின்வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் 58 ரன்களையும், பந்த் 49 ரன்களையும் எடுத்தனர். இலங்கை அணியில் பதினாரா மட்டுமே 40 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
214 ரன்கள் இலக்காகக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 170 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தபோதும் பின்வரிசை வீரர்கள் சோபிக்கத் தவறியதால் 170 ரன்களுக்கு அந்த அணி சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக நிசங்கா 79 ரன்களையும் குசால் மெண்டீஸ் 45 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியில் ரியான் பராங் 3 விக்கெட்களையும், அக்சர், அர்ஷ்தீப் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகனாக சூர்யகுமார் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் 16 முறை ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விராட் கோலியின் சாதனையை, இந்த ஆட்டநாயகன் விருது மூலம் சமன் செய்துள்ளார் சூர்யகுமார் யாதவ். விராட் 125 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி முறை ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.