தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதலிரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவும் வெற்றிபெற்று தொடரானது 1-1 என சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், தொடரின் 3வது டி20 போட்டி நேற்று செஞ்சூரியனில் தொடங்கி நடைபெற்றது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்ய இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் மீண்டும் 0 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். முதல் விக்கெட்டை விரைவாகவே இழந்தாலும் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த திலக் வர்மா மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவருவரின் அசத்தலான ஆட்டத்தால் முதல் 6 ஓவரில் 70 ரன்களை குவித்தது இந்திய அணி.
3 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என துவம்சம் செய்த அபிஷேக் சர்மா 25 பந்தில் 50 ரன்களை அடித்து வெளியேறினார். தொடர்ந்து அதிரடியை நிறுத்ததாத திலக் வர்மா இறுதிவரையில் நின்று 8 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என விளாசி தன்னுடைய முதல் சர்வதேச டி20 சதத்தை விளாசினார். திலக் வர்மா 107 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காத நிலையில், இந்திய அணி 20 ஓவர் முடிவில் 219 ரன்களை குவித்தது.
இந்த போட்டியில் சதமடித்த திலக் வர்மா சர்வதேச டி20 போட்டியில் சதமடித்த 10 வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
சர்வதேச டி20 சதமடித்த இந்திய வீரர்கள்:
1. ரோகித் சர்மா - 5 சதங்கள்
2. சூர்யகுமார் யாதவ் - 4 சதங்கள்
3. கேஎல் ராகுல் - 2 சதங்கள்
4. சஞ்சு சாம்சன் - 2 சதங்கள்
5. சுரேஷ் ரெய்னா - 1 சதம்
6. சுப்மன் கில் - 1 சதம்
7. விராட் கோலி - 1 சதம்
8. தீபக் ஹூடா - 1 சதம்
9. அபிஷேக் சர்மா - 1 சதம்
10. திலக் வர்மா - 1 சதம்
பின்னர் 220 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய தென்னாப்ரிக்க அணியில் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்த அனைத்து வீரர்களும், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் வெளியேறினர். இறுதியில் தென்னாப்ரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 208 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மேக்ரோ ஜென்சன் 54 ரன்களையும், ஹென்ரிச் க்ளாசன் 41 ரன்களையும் எடுத்தனர். இதில் மேக்ரோ ஜென்சன் 16 பந்துகளில் அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் சார்பில் அர்ஷ்தீப் சிங் சார்பில் 3 விக்கெட்களையும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
ஆட்டம் இறுதிவரை பரபரப்பாகவே சென்றது. ஹர்திக் பாண்டியா வீசிய 19 ஆவது ஓவரில் மட்டும் மேக்ரோ ஜென்சன் 26 ரன்களைக் குவிக்க, கிட்டத்தட்ட ஆட்டம் கைமீறிப் போய்விடுமோ என்ற பதற்றம் எழுந்தது. இறுதி ஓவரில் 25 ரன்கள் மட்டுமே தேவை எனும் நிலையில், அர்ஷ்தீப் சிங் ஓரளவு கட்டுக்கோப்பாக வீசி 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இந்திய அணி வெற்றி பெற வழிவகுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. போட்டி முடிந்து பேசிய சூர்யகுமார் யாதவ், “திலக் வர்மா க்கெபர்ஹாவில் (2ஆவது டி20 நடந்த இடம்) எனது அறைக்கு வந்து, மூன்றாவது இடத்தில் விளையாட வாய்ப்பு கொடுங்கள், நான் நன்றாக ஆட விரும்புகிறேன் என சொன்னார். தாராளமாக ஆடுங்கள் என்றேன். அவர் சொன்னதைச் செய்து விட்டார்” என தெரிவித்தார்.