அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. தொடக்கத்திலேயே மழையின் குறுக்கீட்டால் டாஸ் தாமதமாக போடப்பட்டது.
பின் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசியது. இந்தியாவின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 13 ரன்களிலும், விராட் கோலி 4 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
ரிஷப் பந்த் 40 ரன்களும், அக்ஷார் பட்டேல் 20 ரன்களும் எடுத்தனர். ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் 19 ஓவர்களில் 119 ரன்களை மட்டும் எடுத்து இந்திய அணி ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும், அமிர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி நிதானமாக ஆட்டத்தை தொடங்கியது.
ஆனாலும் சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுகளை இழந்தது. இறுதி கட்டத்தில் ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறிய பாகிஸ்தான், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.