மகளிர் அணிகளுக்கு இடையேயான 9வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இலங்கையில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஜூலை 19 முதல் ஜூலை 28 வரை நடைபெறவிருக்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், “இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாள், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா மற்றும் தாய்லாந்து” முதலிய 8 அணிகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டிருப்பதில் A குரூப்பில், “இந்தியா, பாகிஸ்தான், நேபாள், ஐக்கிய அரபு அமீரகம்” முதலிய 4 அணிகளும், B குரூப்பில் “வங்கதேசம், இலங்கை, மலேசியா, தாய்லாந்து” முதலிய 4 அணிகளும் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவுகளில் உள்ள ஒரு அணி மற்ற அணிகளுடன் மோதிக்கொள்ளும், அதாவது ஒவ்வொரு அணிகளும் 3 லீக் போட்டிகளில் விளையாடவிருக்கின்றன. பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும், முதல் அரையிறுதி போட்டியில் A1 மற்றும் B2 அணிகளும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் B1 மற்றும் A2 அணிகளும் மோதிக்கொள்ளும். கோப்பைக்கான இறுதிப்போட்டி ஜூலை 28ம் தேதி இலங்கையில் உள்ள டம்புலா மைதானத்தில் நடைபெறும்.
இந்நிலையில் இந்திய அணி தங்களுடைய முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாடி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரவெற்றிபெற்றது. இரண்டாவது லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்த்து இன்று விளையாடிவருகிறது.
டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷபாலி வெர்மா மற்றும் ஸ்மிரிதி மந்தனா இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆரம்பத்தில் சிக்சர், பவுண்டரி என பறக்கவிட்ட ஸ்மிரிதி 13 ரன்னில் வெளியேற, தொடர்ந்து அதிரடியை நிறுத்தாத ஷபாலி 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என மிரட்டினார். ஆனால் ஷபாலி 37 ரன்னிலும், அடுத்துவந்த ஹேமலதா 2 ரன்னிலும் வெளியேற இந்திய அணி சறுக்கலை சந்தித்தது.
ஆனால் அதற்குபிறகு ஆட்டத்தை தனது கன்ட்ரோலில் எடுத்துவந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 7 பவுண்டரிகள் 1 சிக்சர் என துவம்சம் செய்து 66 ரன்களை குவித்தார். அதுவரை இந்திய அணி 180 ரன்களை மட்டுமே எட்டும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் இறுதியாக வந்து வாணவேடிக்கை காட்டிய ரிச்சா கோஷ் அனைவரையும் தன்னுடைய ஆட்டத்தால் கட்டிப்போட்டார். வெறும் 29 பந்துகளில் 12 பவுண்டரிகள் 1 சிக்சர் என வேடிக்கை காட்டிய ரிச்சா 220 ஸ்டிரைக்ரேட்டில் 64 ரன்கள் குவித்தார்.
ரிச்சா கோஸின் அதிரடியால் முதல்முறையாக சர்வதேச டி20 போட்டியில் 200 ரன்களை எட்டி அசத்தியது இந்திய மகளிர் அணி. 20 ஓவர் முடிவில் 201 ரன்களை இந்தியா அடிக்க, இரண்டாவதாக பேட்டிங் செய்துவரும் யுஏஇ அணி 53 ரன்களுக்கு 3 விக்கெட் என விளையாடிவருகிறது.