மகளிர் அணிகளுக்கு இடையேயான 9-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கையில் ஜூலை 19 முதல் தொடங்கி நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாள், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா மற்றும் தாய்லாந்து முதலிய 8 அணிகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
தொடர் முழுவதும் அபாரமாக செயல்பட்ட இந்தியா, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தின.
இலங்கை டம்புலாவில் நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. முதலில் விளையாடிய வங்கதேசம் 80 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது.
டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அபாரமான இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத வங்கதேச அணி, எதற்கு பேட்டிங் எடுத்தோம் என வேதனைப்படுமளவுக்கு 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு வெறும் 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. அபாரமாக பந்துவீசிய ரேனுகா சிங் 1 ஓவர் மெய்டனுடன் 4 ஓவரில் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
81 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஸ்மிரிதி மந்தனா 55 ரன்களும், ஷபாலி வெர்மா 26 ரன்களும் எடுத்து அசத்த 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது. அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய மகளிர் அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஆட்டநாயகனாக ரேனுகா சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
25வது டி20 அரைசதத்தை பதிவுசெய்த ஸ்மிரிதி மந்தனா அதிக அரைசதங்கள் அடித்தவர்களில் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஆசியக்கோப்பை இரண்டாவது அரையிறுதிப்போட்டியானது இன்று இரவு 7 மணிக்கு பாகிஸ்தான் மகளிர் அணி மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெறவிருக்கிறது.