இந்திய அணியின் வெற்றி ஊர்வலம்| குஜராத்திலிருந்து பஸ் கொண்டுவரப்பட்டது ஏன்? கேள்வி எழுப்பும் மும்பை

மும்பையில் இந்திய வீரர்களின் ஊர்வலத்திற்கு குஜராத்தில் இருந்து பேருந்தை கொண்டு வந்தது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
bus
busx page
Published on

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு நேற்று டெல்லி விமான நிலையம் மற்றும் ஹோட்டலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து மும்பை சென்ற இந்திய அணியினர், திறந்தவெளி பேருந்தில் வான்கடே மைதானத்தை நோக்கிப் புறப்பட்டனர். பின்னர், மைதானத்தில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இந்திய அணியினரை உற்சாகம் பொங்க கூக்குரலிட்டு வரவேற்றனர்.

இந்த நிலையில், ”கிரிக்கெட் வீரர்களை வரவேற்க குஜராத்தில் இருந்து பேருந்தைக் கொண்டுவர வேண்டுமா” என சிவசேனா கட்சி (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே அணி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர், ”கிரிக்கெட் வீரர்களை வரவேற்கவும், மும்பையில் பேரணி நடத்தவும் குஜராத்தில் இருந்து மும்பைக்கு பேருந்தை கொண்டு வருவதற்கான காரணம் என்ன? எங்களிடமே இதுபோன்ற பேருந்துகள் உள்ளன. அவ்வாறு இல்லையென்றாலும்கூட, மும்பையில் ஒரே இரவில் அதனை எங்களால் தயாரித்துவிட முடியும். எல்லாமே குஜராத்தானா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையும் படிக்க: வெற்றிக் கொண்டாட்டம் முடிந்தபின் இங்கிலாந்துக்குப் பயணம்.. அவசரமாய் புறப்பட்டுச் சென்ற விராட் கோலி!

bus
குலுங்கியது மும்பை| ஹர்திக் பாண்டியாவிற்கு நன்றி சொன்ன ரோகித் சர்மா.. பாராட்டு மழையில் இந்திய அணி!

முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனான ஆதித்யா தாக்கரே, ”கிரிக்கெட் வீரர்களை வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம். ஆனால், நமது மகாராஷ்டிராவில் குஜராத் பேருந்துகள் ஏன்?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

காங்கிரஸ் மாநிலத் தலைவர் நானா படோலே, ”இந்திய அணியின் வெற்றி ஊர்வலத்தை நடத்த குஜராத்தில் இருந்து பேருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் இருந்து பேருந்தை கொண்டு வந்து மகாராஷ்டிராவை அவமதித்துள்ளனர். மகாராஷ்டிரா அரசு குஜராத்தில் இயங்குகிறது” என விமர்சித்துள்ளார்.

என்சிபி சரத் சந்திர பவார் கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான ரோஹித் பவார், ”இந்திய அணி மும்பைக்கு வருகிறது, ஊர்வலம் செல்லப்போகிறது என்றால், அதற்கு மும்பையின் சிறந்த பேருந்தை பயன்படுத்தியிருக்க வேண்டும். பெஸ்ட் பஸ் மற்றும் மும்பைக்கு என ஒரு தனி அடையாளம் உள்ளது. எனவே பெஸ்ட்-ன் பஸ் பயன்படுத்தப்பட்டிருந்தால், நாங்கள் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருப்போம். பிசிசிஐ குஜராத்தில் இருந்து ஒரு பேருந்தை கொண்டுவந்துள்ளது, ஆனால் அவர்கள் சிறந்த பேருந்தை தேர்வு செய்திருக்க வேண்டும்” என அதிருப்தி தெரிவித்திருந்தார்.

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குழுவின் தலைவர் சஞ்சய் ஷிர்சத், “குஜராத்தில் இருந்து பஸ் கொண்டுவந்தால் என்ன தவறு? குஜராத் பாகிஸ்தானுக்கு சொந்தமா” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிக்க: ரோகித் மற்றும் விராட் ஜெர்சி நம்பருக்கு ஓய்வா? ராபின் உத்தப்பா எதிர்ப்பு!

bus
ஐபிஎல்லில் விரக்தி.. டி20-ல் வெற்றி.. வான்கடே மைதானத்தில் விண்ணைப் பிளந்த ‘ஹர்திக் பாண்டியா’ கோஷம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com