டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றதையடுத்து, டெல்லி மற்றும் மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வெற்றி ஊர்வலத்திற்குப் பிறகு வீரர்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குச் சென்று குடும்பத்தினருடன் மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரில் இடம்பெற்றிருந்த ஒருசில வீரர்களைத் தவிர, பிற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது.
அதன்படி, இவ்விரு அணிகளுக்கான முதல்போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று (ஜூலை 6) நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி ஜிம்பாப்வே அணியை முதலில் பேட் செய்ய பணித்தது. அந்த அணி சார்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்கெட் கீப்பர் கிளைவ் 25 பந்துகளில் 4 பவுண்டரி உடன் 29 ரன்கள் எடுத்தார். அடுத்து டியான் மையர்ஸ் 23 ரன்னும், பிரைன் பென்னட் 22 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் மாதேவரே 21 ரன்னும் எடுத்தனர்.
கேப்டன் ஷிக்கந்தர் ராஸா 19 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆனார்கள். அதில் 4 வீரர்கள் டக் அவுட் முறையில் வீழ்ந்திருந்தனர். இறுதியில் அவ்வணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில், ரவி பிஷ்னோய் சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
பின்னர், 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால் இந்திய அணிக்கு தொடக்கம் முதலே விக்கெட்களை தாரை வார்த்தது. முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா டக் அவுட் முறையில் வீழ்ந்தார்.
அடுத்து 4வது ஓவரில் சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களிலும், 5வது ஓவரில் ரியான் பராக் 2 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். அதே ஓவரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் டக் அவுட் முறையில் வீழ்ந்தார். இதனால் இந்திய அணி பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது.
இந்திய அணி 5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு வெறும் 22 ரன்களை மட்டுமே எடுத்து தத்தளித்தது. இக்கட்டான சூழ்நிலையில், அடுத்த 5 ஓவர்கள் வரை விக்கெட்களை விடாமல் பாதுகாத்த இந்திய அணி ரன் குவிப்பிலும் தடுமாறியது. 10 ஓவர்கள் முடிவில் 43 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்களை தாரைவார்த்திருந்தது. ஒருகட்டத்தில், இந்திய அணியின் ரன் எண்ணிக்கை அதிகரிக்காவிட்டாலும், விக்கெட்களின் சரிவு மட்டும் நிற்கவே இல்லை.
என்றாலும் இக்கட்டான நிலையிலும் தொடக்க வீரரும் கேப்டனுமான சுப்மன் கில் மட்டும் நிலைத்து நின்று ஆடினார். ஆனால் அவரும் 31 ரன்களில் சிக்கந்தர் ராசா பந்துவீச்சில் போல்டானார். இதையடுத்து இறுதியில் ஆவேஷ் கான் அதிரடியாய் ஆடி 16 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபக்கம் வாஷிங்டன் சுந்தர் அணியை வெற்றிபெற வைக்க முயன்றும், அது தோல்வியிலேயே முடிந்தது. அவர் 27 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணியின் தோல்வி உறுதியானது.
19.5 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 102 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து ஜிம்பாப்வே 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கான 2வது போட்டி, நாளை நடைபெற உள்ளது.
ஒருகட்டத்தில் இந்திய அணி 100 ரன்களையே தாண்டாது குறைந்த ரன்களில் சுருண்டுவிடும் என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, 13 ரன்களில் தோல்வியைத் தழுவியது சற்றே ஆறுதலைத் தந்துள்ளது.