2024 டி20 உலகக்கோப்பை தொடரானது ஜூன் 2ம் தேதிமுதல் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 7 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், ஒவ்வொரு அணிகளும் தங்களுடைய வெற்றிக்காக தரமான மோதலை நிகழ்த்திகாட்டிவருகின்றன.
புதிதாக உலகக்கோப்பைக்குள் வந்திருக்கும் அமெரிக்கா, கனடா, நமீபியா, ஓமன் மற்றும் ஜெனிவா முதலிய 5 அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளன. விளையாடியிருக்கும் சில போட்டிகளிலேயே ஒரு சூப்பர் ஓவர் போட்டி வந்திருப்பது, நடப்பு உலகக்கோப்பை தொடர் எவ்வளவு கடினமான மோதல்களுடன் இருக்கப்போகிறது என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.
இந்நிலையில் 8வது லீக் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்த்து தங்களுடைய முதல் போட்டியில் விளையாடியது இந்திய அணி.
முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.
அபாரமாக பந்துவீசிய ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள், அர்ஷ்தீப் சிங் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகள், சிராஜ், அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட் என வீழ்த்த, அயர்லாந்து அணி 96 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்அவுட்டானது.
97 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணியில் விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இருப்பினும் ரோகித் சர்மா, ரிஷ்ப் பண்ட் அதிராடியாக விளையாடி ரன்களை எடுத்துவந்தனர். ரோகித் 36 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் அரைசதம் அடிக்க, இறுதிவரை களத்தில் இருந்த ரிஷப் பண்ட் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 36 ரன்கள் அடித்தார். 12.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்களை அடித்த இந்திய அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.