செயிண்ட் லூசியாவில் நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அதேசமயம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா 92 ரன்களை குவித்தார்.
பின்னர் வந்த ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா தங்கள் பங்கிற்கு கணிசமாக ரன்களை எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பொறுமையுடன் விளையாடி ரன்களை குவித்தனர். அதிகபட்சமாக திராவிஸ் ஹெட் 76 ரன்களும், மிட்செல் மார்ஷ் 37 ரன்களும் எடுத்தனர்.
20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. வியாழக்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.