நேற்று சேப்பாக்கத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 15 ரன்களில் வெற்றிப்பெற்று சிஎஸ்கே அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சிஎஸ்கே, 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. பின்பு களமிறங்கிய குஜராத் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டிக்கு பின் பேசிய தோனி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். அப்போது ஒரு இடத்தில், “விக்கெட்டின் தன்மைக்கு ஏற்ப அவ்வப்போது நான் பீல்டிங்கை மாற்றிக்கொண்டே இருப்பேன். இதனால் நான் எரிச்சலூட்டும் கேப்டனாகவே மற்றவர்களுக்கு தெரிவேன். நான் அணியில் இருப்பவர்களிடம் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். அவர்கள் களத்தில் என் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும்.
ஃபீல்டர்கள் கேட்சை தவறவிடும்போது, உண்மையில் அவர்களை நோக்கி என்னிடமிருந்து எந்தவித ரியாக்ஷனும் இருக்காது. ஆனாலும் என் மீது ஒரு கண் எப்போதும் வைத்திருங்கள் என்றே அவர்களை கேட்டுக்கொள்வேன்” என்றுள்ளார்.
பின் ஓய்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தோனி "அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவது குறித்து நான் நவம்பர் அல்லது டிசம்பரில் தான் முடிவெடுப்பேன். அதற்கு இன்னும் 8 முதல் 9 மாதங்கள் இருக்கிறது. அதனால் இப்போது அது குறித்து சொல்ல முடியாது. டிசம்பர் மாதம் மினி ஏலம் நடக்கும். அதற்கு முன்பாக முடிவெடுப்பேன். அந்தச் சமயத்தில் இருக்கும் உடல் தகுதியை வைத்து அடுத்த சீசனில் விளையாடலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுப்பேன். அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது என்று நினைக்கிறேன்" என்றார்.
மேலும் "இந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து நான் அணியோடு பயிற்சி எடுத்து வருகிறேன். இதையெல்லாம் வைத்து தான் அடுத்த சீசன் குறித்து முடிவெடுக்க வேண்டும். இப்போது எதற்கு அந்த தலைவலியை எடுத்துக் கொள்ள வேண்டும்? நான் சென்னை அணியை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். சிஎஸ்கேவுக்காக நான் எப்போதும் இருப்பேன்.
அது பிளேயிங் லெவனில் இருந்தாலும், அதற்கு வெளியே இருந்தாலும் சரி! இன்றைய போட்டியை இன்னொரு இறுதிப் போட்டியாக நான் எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் இன்றைய போட்டிக்காக கடந்த இரு மாதங்களாக நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். இன்றைய போட்டியின் வெற்றியில் அனைவரின் பங்கும் இருக்கிறது. வாய்ப்புகளை அனைவரும் சரியாக பயன்படுத்திக்கொண்டனர்" என்றார் தோனி.