இலங்கை ஈழப்போருக்கு பிறகான தமிழக மக்களின் மனநிலை என்பது பல வெறுப்புகளையும் வேதனைகளையும் கொண்டது. அதன் பிரதிபலிப்பென்பது, அரசியலை தாண்டி விளையாட்டில் கூட தீவிரமாகவே இருந்தது. உதாரணத்துக்கு 2013 ஐபிஎல் சீசனில், இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் பதற்றங்கள் மிக அதிகமாக இருந்தன. அதனால் இலங்கை வீரர்கள் பங்கேற்கும் எந்த போட்டியையும் சென்னை நடத்தாது என்று தீர்மானமே கொண்டுவரப்பட்டது. அதைத்தொடர்ந்து குலசேகரா மற்றும் தனஞ்செயா இருவரும் சென்னை போட்டியின் போது களமிறக்கப்படாமல் இருந்தனர்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, கடந்த 2020ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் பயோபிக் திரைப்படத்தில் தமிழக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் வெளியான போது கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
அதன் எதிரொலியாக விஜய் சேதுபதி அந்த படத்தில் இருந்து விலகுவதாக பின்னர் அறிவித்தார். இப்படியெல்லாம் தீவிர எதிர்ப்பு நிலை தமிழக மக்கள் மற்றும் ரசிகர்களிடையே இருந்துவந்த நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்பது கவனித்திற்குரிய ஒன்றாக இருக்கிறது.
இந்த ஐபிஎல் சீசனின் தொடக்கத்தில் தீக்ஷனா மற்றும் பதிரானா இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எடுக்கப்பட்டபோது, அவர்கள் அதிகம் வரவேற்கப்படவில்லை என்றபோதிலும்கூட அவர்களை எதிர்க்காமல் இருந்தனர் தமிழக ரசிகர்கள். இது முதல் மாற்றமாக அமைந்தது. தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் என்பதையெல்லாம் தாண்டி, பதிரானா மற்றும் தீக்ஷனா இருவரின் சிறப்பான ஆட்டம் என்பது சென்னை ரசிகர்களை இன்னும் ஈர்த்தது. அது அடுத்த மாற்றம்!
போகப்போக இந்த இரண்டு வீரர்களும் தற்போது சென்னை ரசிகர்களின் விருப்பத்திற்குரிய வீரர்களாக மாறியுள்ளனர். அதுவும் பதிரானாவிற்கு இருக்கும் ஆதரவு என்பது தோனி ஸ்டேடியத்திற்குள் வரும்போது இருக்கும் கரகோஷங்கள், சத்தங்களுக்கு நிகராக இருக்கிறது. அவர் டெத் ஓவர்கள் வீசவரும் போது “ஓஓஓஓஓ” என காதை பிளக்கும் ஒலியானது, அவர் பந்தை வீசிய பிறகு தான் அடங்குகிறது. அந்தளவு பதிரானாவை சென்னை மக்கள் மனதிற்கு நெருக்கமாக ஆக்கிக்கொண்டுள்ளனர்.
சென்னை அணியின் ஒரு இலங்கை வீரரான தீக்ஷனா, இலங்கை ராணுவத்தில் சர்ஜெண்டாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு இலங்கை வீரரின் பயோபிக் திரைப்படத்தில் கூட தமிழ் நடிகர் நடிக்கக்கூடாது என்ற நிலையில் இருந்து, தற்போது சிங்கள ராணுவ வீரராக இருக்கும் ஒரு வீரரை தமிழக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த மாற்றம் எங்கிருந்து தொடங்கியது என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், தமிழக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது ஆரோக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. குவாலிஃபயர் 1 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக, கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் ஆல்ரவுண்டர் டெவாட்டியா விக்கெட்டை வீழ்த்திய தீக்ஷனாவை, அந்த போட்டியில் கொண்டாடி தீர்த்தனர் சிஎஸ்கே ரசிகர்கள்.
தீக்ஷனா கொண்டாட்டம் ஒருபுறம் என்றால், பதிரானாவை “குட்டிமலிங்கா” என்றும், “சென்னையின் செல்லப்பிள்ளை” என்றும் கொண்டாடி வருகின்றனர். அதுவும் அவர் பந்துவீச வந்தாலே விசில் சத்தமும், “அட நம்மாளு இருக்கார்... டெத் ஓவர் பார்த்துப்பார்!” என்ற நம்பிக்கை வந்துவிடுகிறது ரசிகர்களுக்கு! அந்தளவுக்கு அவருடனான பாசப்பிணைப்பிற்கு பெரிதளவில் இடம் கொடுத்துள்ளனர் சென்னை மக்கள்.
சென்னை மக்களின் மனநிலை தற்போது எப்படி மாறியிருக்கிறது என்று விசிக கட்சியின் மக்களவை எம்பி டாக்டர் டி ரவிக்குமார் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில தளத்தில் பேசுகையில், “காலம் எல்லாவற்றையும் குணப்படுத்துகிறது. இலங்கை - ஈழம் போருக்கு காரணமான ராஜபக்சேக்கள் தற்போது இலங்கையில் ஆட்சியில் இல்லை என்பதும், இலங்கை மக்களின் பொருளாதார நிலை என்பதும், தமிழக மக்களின் மனதை பெரிய அளவில் மாற்றியுள்ளது.
அப்போது தமிழர்களுக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. ஆனால் இப்போது ராஜபக்சேக்களை தூக்கி எறிய வேண்டும் என்று சிங்களவர்களும் தமிழர்களும் இணைந்து போராட்டம் நடத்தினர்.
பெரிய நன்மைக்காக ஒரு பொதுவான காரணத்திற்காக போராடும் போது, நாமும் அவர்களை ஆதரிக்க வேண்டும். இந்த 2 வீரர்களும் ஐபிஎல்லில் இருந்து கொஞ்சம் பணம் பெற்று, வீட்டிற்கு திரும்பி செல்கையில் அங்கு ஏழைகளுக்கு உணவளிக்க உதவினால், நாங்கள் இவர்களுக்கும் ஆதரவளிக்க வேண்டும். அது எங்களது கடமை” என்று கூறினார்.
மேலும் “கலை, விளையாட்டு, இலக்கியம் போன்றவற்றை அரசியலுடன் கலக்கக் கூடாது என்று நினைக்கிறேன். ஆனால் அதே சமயம் சில நேரங்களில், மக்களின் உணர்வுகளுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டியது அவசியமானது. அதனால்தான் முன்பு இலங்கை கிரிக்கெட் வீரர்களால் சென்னையில் விளையாட முடியாமல் போனது. அதுமட்டுமல்லாமல் அப்போது தமிழர்களுக்கு எதிரான ராஜபக்சேக்கள், இலங்கை அரசின் பிரதிநிதிகளாக கருதப்பட்டனர். ஆனால் தற்போது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது மற்றும் நல்லிணக்கம் பொறுப்பேற்றுள்ளது. இதெல்லாம் ஒருபுறம் இருந்த போதும், இலங்கை மக்களின் பொருளாதார நிலையும், தமிழக மக்களின் மனதில் அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று ரவிக்குமார் கூறியுள்ளார்.
ஈழப்பிரச்சனை, அரசியல் காரணங்கள் என்பதையெல்லாம் தாண்டி இரண்டு திறமையான வீரர்களை சென்னை அணி கண்டுள்ளது. தீக்ஷனா, சமீபத்திய நியூசிலாந்து தொடரில் இலங்கை அணிக்கு சிறப்பாக செயல்பட்டிருந்தார். சவுத் ஆப்பிரிக்கா டி20 தொடரிலும் விளையாடியிருந்தார். ஆனால் பதிரானாவை அணிக்குள் கொண்டுவருவதில், சென்னை அணி நிர்வாகத்திற்கு எந்தவிதமான எண்ணமும் இல்லாமல் இருந்துள்ளது. அவருடைய திறமையை உணர்ந்த தோனி தான், சிஎஸ்கே அணிக்குள் எடுத்துவந்துள்ளார். இந்நிலையில் இந்த இரண்டு வீரர்களும் தற்போது சென்னை அணிக்கு, மேட்ச் வின்னிங் வீரர்களாக மாறியுள்ளனர்.
தீக்ஷனா குறித்து பேசியிருந்த சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், ”அவர் மிகவும் திறமையானவர், நுட்பமான பந்துவீச்சை கொண்டவர். அவர் பந்துவீசும் விதம் என்பது ஒரு வீரரை நோக்கி வந்து வீசுவதாக இருக்கிறது. அந்த அணுகுமுறை ஒரு ஹிட்டிங் பேட்ஸ்மேனை அவருடைய ரிதமை பெற முடியாதவாறு தடுக்கிறது. தீக்ஷனாவின் தனித்திறமையுடன் அவரின் பவுலிங் வேரியேசனும் சேர்ந்து கொண்டால், வீரர்கள் தடுமாறுகின்றனர்” என்று பாராட்டியிருந்தார்.
பதிரானாவை பொறுத்தவரையில், “அவர் திறமையான வீரர். இலங்கை அணிக்கு சொத்தாக இருப்பார்” என்று தோனி பெருமிதம் தெரிவித்திருந்தார்.
எது எப்படியோ, ரசிகர்களின் இந்த நன்மாற்றம், அமைதிக்கு வித்திடுகிறது என்று நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள் கிரிக்கெட் ஆர்வலர்கள்!