ஐபிஎல் சீசனில் நேற்று நடந்த 30-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி, த்ரில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ். 135 ரன்கள் மட்டுமே எடுத்த குஜராத் அணி, லக்னோவை 128 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத்.
இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் அண்ணன் க்ருனால் பாண்டியா, எதிரணியான லக்னோவுக்காக விளையாடினார். அண்ணன் - தம்பி இருவரும் எதிரெதிராக மோதும் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியிலும் ஆர்வம் அதிகமாக இருந்தது.
இந்தப் போட்டியில் லக்னோ பேட்டிங் செய்யும் போது அந்த அணிக்காக விளையாடிய க்ருனால் பாண்டியா அருகே சென்ற ஹர்திக் பாண்டியா, சில வார்த்தைகளை உபயோகித்து ஸ்லெட்ஜிங் செய்ததாக தெரிகிறது. ஆனால் அதற்கு க்ருனால் பாண்டியா பதிலுக்கு எதுவும் பேசாமல் அவரை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தரே தவிர எதிர்வினையாக எதுவும் செய்யாமல் கடந்து சென்றார். இந்நிகழ்வு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
போட்டி முடிந்ததும் ஹர்திக் பாண்டியா தன்னை சீண்டியது குறித்து பேசிய க்ருனால் பாண்டியா, “நாங்கள் அவ்வப்போது சற்று காலை வாரிக் கொள்வோம். குறிப்பாக இந்த போட்டியின் துவக்கத்தில் அவர் எனது பந்துகளை சாரமாரியாக அடிப்பேன் என்று என்னிடம் தெரிவித்தார். ஆனால் கடந்த போட்டியில் என்னை அவர் அடித்தாலும் இறுதியில் நான் அவுட் ஆக்கியதை அவருக்கு அந்த சமயத்தில் நினைவுபடுத்தி மீண்டும் அதே தவறு செய்யாதீர்கள் என்று எச்சரித்தேன்” எனக் கூறினார்.
இவ்வாறு ஆரோக்கியமான போட்டியுடன் மோதிக் கொண்ட அவர்கள் இறுதியில் போட்டி முடிந்ததும் தங்களுடைய ஜெர்சியை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு அன்பை வெளிப்படுத்தினர்.