2024 ஐபிஎல் தொடரில் நல்ல பேட்டிங் வரிசையை வைத்திருக்கும் ஆர்சிபி அணி, எவ்வளவு ரன்கள் அடித்தாலும் அதனை பாதுகாக்க முடியாத அளவிலேயேதான் பந்துவீச்சை வைத்திருக்கிறது. 16 வருட ஐபிஎல் வரலாற்றில் அந்த அணிக்கு இருந்த பெரிய பிரச்னை இந்த தொடரிலும் தொடர்ந்து வருகிறது.
இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 182 ரன்கள் அடித்த போதிலும், அதனை 17 ஓவரிலேயே எட்டிய KKR அணி 3 ஓவர்களை வெளியில் வைத்து போட்டியை வென்றது.
இதையடுத்து ஆர்சிபி அணி நிர்வாகத்தின் மோசமான செயல்பாடுகளை விமர்சித்திருக்கும் ஹர்பஜன் சிங், “இந்த பவுலிங் யூனிட்டை வைத்துக்கொண்டு கோப்பையை வெல்லும் கனவை எட்ட முடியாது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
திறமையான வீரர்களை Back-up செய்யாத ஆர்சிபி அணி குறித்து பேசியிருக்கும் ஹர்பஜன், “RCB அணி நிர்வாகம், தங்கள் வீரர்களை Back-up செய்வதில்லை. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக போட்டிகளை தனியாளாக வென்றுதரும் ஷிவம் துபேவின் சிறந்த ஆட்டத்தை RCB அணியால் வெளிக்கொண்டுவர முடியவில்லை. 2023-ல் சிஎஸ்கே அணியை டைட்டிலுக்கு அழைத்துச்சென்றதில் ஷிவம் துபே நட்சத்திர வீரராக இருந்தார். ஆனால் RCB அணியில் அவர் விளையாடியபோது, ஷிவம் துபே செயல்படத் தவறிவிட்டார். அதற்கு ஆர்சிபி அணியின் மோசமான நிர்வாகமே காரணம்" என்று ஜியோ சினிமாவிடம் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், "உண்மையில், வீரர்கள் CSK அணியில் ஆதரவைப் பெறுகிறார்கள், ஆனால் RCB-ல் நிலைமை அப்படியே மாறாக இருக்கிறது. நீங்கள் (ஆர்.சி.பி) உங்கள் வீரர்களை ஆதரிக்க வேண்டும்" என்று மேலும் கூறினார்.
மேலும் ஆர்சிபியின் பந்துவீச்சு வரிசை எந்த நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை என்றும், இந்த பவுலர்களை வைத்துக்கொண்டு அணியை பிளேஆஃப்களுக்கு அழைத்துச் செல்ல முடியாது என்றும் ஹர்பஜன் கூறியிருக்கிறார்.
பந்துவீச்சு குறித்து பேசிய ஹர்பஜன், “முதலில் உங்கள் அணியில் பவுலர்கள் எங்கே? ஐபிஎல் 2024-ல் உங்களிடம் (RCB) நல்ல பந்துவீச்சாளர்கள் இல்லை. என்னைப் பொறுத்தவரை பந்துவீச்சு என்பது கவலைக்குரிய பகுதியாக உங்கள் அணியில் இருக்கிறது. யுஸ்வேந்திர சாஹலை என்ன செய்தீர்கள்? அவர்தான் அணியின் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார், ஆனால் அவர் தக்கவைக்கப்படவில்லை. அவர் டி20 விளையாட்டின் ஜாம்பவான்களில் ஒருவர்” என்றுள்ளார்.
தொடர்ந்து வனிந்து ஹசரங்காவின் உதாரணத்தை மேற்கோள் காட்டிய ஹர்பஜன், “பெரிய வீரர்களை விடுவிப்பதன் மூலம் போட்டிகளில் வெற்றிகளை இழக்க நேரிடும். இந்த ஆர்.சி.பி அணியில் முகமது சிராஜைத் தவிர, அணிக்காக போட்டிகளை வெல்லக்கூடிய எந்த பந்துவீச்சாளரையும் நான் காணவில்லை. ஆனால் சிராஜ்ஜேவும் கூட ஃபார்முக்காக போராடி வருகிறார். கேகேஆருக்கு எதிரான போட்டியில் கரண் ஷர்மாவுக்கு ஓய்வு அளித்து தவறிழைத்தனர்” என்றுள்ளார்.
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, ரஜத் படிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, மனோஜ் பந்தேஜ், மயங்க் டாகர் (வர்த்தகம்), வைஷாக் விஜய் குமார், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா, ராஜன் குமார், கேமரூன் கிரீன் (வர்த்தகம்), அல்சாரி ஜோசப், யாஷ் தயாள், டாம் கரன், லாக்கி பெர்குசன், ஸ்வப்னில் சிங், சவுரவ் சவுகான்