தர்மசாலாவில் நடைபெற்ற 53 ஆவது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசியது. ருத்துராஜ் 32 ரன்களிலும், மிட்செல் 30 ரன்களிலும் ஆட்டம் இழக்க மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் ரவீந்தர ஜடேஜா 43 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் 167 ரன்களை மட்டுமே சென்னை அணி சேர்த்தது.
எளிய இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு தொடக்கம் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. துஷார் தேஷ்பாண்டே தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து சீரான இடைவெளியில் பஞ்சாப் அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் 28 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று பிளே-ஆஃப் வாய்ப்புக்கு பாதகம் ஏற்படாமல் பார்த்துக்கொண்டது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஜடேஜா ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றர்.
இந்நிலையில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி 9 ஆவது பேட்ஸ்மேனாக 19 ஆவது ஓவரில் களமிறங்கினார். தனது டி20 வாழ்க்கையில் முதன்முறையாக ஒன்பதாவது பேட்ஸ்மேனாக களமிறங்கினார். எங்கு இறங்கினாலும் தோனி, இறுதி ஓவர்களில் எப்படியும் 2 சிக்ஸர்களையாவது அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹர்ஷல் படேல் வீசிய முதல் பந்திலேயே தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
அவர் விக்கெட்டைப் பறிகொடுத்ததைத் தாண்டி, ஒன்பதாவது பேட்ஸ்மேனாக களமிறங்கியது தற்போது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான் இதுபற்றி கூறியதாவது:
“எம்.எஸ்.தோனி 9 ஆவது இடத்தில் பேட்டிங் செய்வது சிஎஸ்கேவிற்கு வேலை செய்யாது. அது அந்த அணிக்கு உதாவது. அவருக்கு வயது 42 என்று எனக்குத் தெரியும். அவர் நல்ல பார்மில் இருக்கிறார். அவர் 4 முதல் 5 ஓவர்கள் வரை பேட் செய்ய வேண்டும். ஆனால் அவர் கடைசி அல்லது கடைசி 2 ஓவர்களுக்கு மட்டுமே பேட்டிங் செய்கிறார். அது சென்னை அணிக்கு உதவாது.
பார்மில் இருக்கும் மூத்த வீரர், சற்று முன்னதாகவே பேட் செய்ய வேண்டும். கடந்த சில போட்டிகளில் அவர் ஏற்கனவே செய்ததையே மீண்டும் செய்ய முடியாது. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால் தற்போது, அணிக்கு அவரது ஆட்டம் தேவைப்படும்போது, தோனிக்கு பதிலாக ஷர்துலை அணுப்ப முடியாது. ‘வாருங்கள் நண்பா 4 ஓவர் வரை பேட் செய்யுங்கள்’ என தோனியிடம் யாராவது சொல்லுங்கள்” என தெரிவித்துள்ளார்.
இந்திய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான ஹர்பஜன் சிங்கும் இதேபோன்றதொரு கருத்தை தெரிவித்துள்ளார். “எம்.எஸ்.தோனி 9 ஆவது இடத்தில் களமிறங்க விரும்பினால் அவர் விளையாடவே வேண்டாம். ப்ளேயிங் 11ல் அவரைத் தவிர வேறு ஒரு வேகப்பந்து வீச்சாளரை சேர்ப்பது நல்லது. பேட்டிங் செய்ய வராமல் தனது அணியை ஏமாற்றியுள்ளார்.
தோனிக்கு முன்னால் ஷர்துல் தாக்கூர் வந்தார். தோனியைப் போல அவரால் ஷாட்களை அடிக்க முடியாது. தோனி ஏன் இந்த தவறை செய்தார் என புரியவில்லை. அவர் அனுமதியின்றி எதுவும் நடக்காது. அவரை பின்னால் இறக்க வேறு யாரோ முடிவு செய்தார் என்பதை நான் ஏற்க தயாராக இல்லை.
சென்னை அணிக்கு தேவைப்படுவது வேகமாக ரன்களை சேர்ப்பது. தோனி முந்தைய ஆட்டங்களில் அதை செய்தார். ஆனால் பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான முக்கியமான போட்டியில் அவர் பின்வாங்கியுள்ளார். மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், நான் எது சரியோ அதையே சொல்கிறேன்” என தெரிவித்துள்ளார்.