“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
புள்ளிப் பட்டியலின் கடைசி இடத்திலிருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணியிடம், எகிறி எகிறி அடி வாங்கியது டைட்டன்ஸ் அணி. இன்னொரு பக்கம், ‘சதம் அடிச்சு வெள்ளாமை போட்டது ஜெய்ஸ்வால். நோகாம ஜெயிச்சுட்டுப் போறது மும்பையா?’ என புழுங்கியது ராயல்ஸ் அணி. இரு அணிகளும் அடைந்த தோல்வியில் அளவுக்கு மீறி வெளிப்பட்ட ஆத்திரத்தை, ஜெய்பூரில் ஆற்றலாக இறக்கிவிட முடிவெடுத்தார்கள். டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.
ஜெய்ஸ்வால் - பட்லர் ஜோடி ராயல்ஸின் இன்னிங்ஸை துவங்க, முதல் ஓவரை வீசினார் முகமது ஷமி. வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே. கேப்டன் ஹர்திக்கின் 2வது ஓவரில், தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள் அடித்த பட்லர், 4வது பந்தில் ஷார்ட் தேர்டு திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஷமியின் 3வது ஓவரில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என ஃபார்மைத் தொடர்ந்தார் ஜெய்ஸ்வால். ஹர்திக்கின் 4வது ஓவரை பவுண்டரியுடன் வரவேற்றார் கேப்டன் சாம்சன். அடுத்து பந்து, 95 மீட்டர் சிக்ஸருக்குப் பறந்தது. ஷமியின் 4வது ஓவரையும் பவுண்டரியுடன் தொடங்கினார் சஞ்சு.
5வது ஒவரை வீசவந்தார் ரஷீத் கான். ஓவரின் முதல் பந்தை, பேக்வார்டு பாயின்ட் திசையை நோக்கி ஓங்கி அடித்தார் சாம்சன். அதைப் பாய்ந்து பிடித்தார் ஃபீல்டர் அபினவ் மனோகர். பந்து அவர் கையில் பட்டு, அருகிலிருந்த மோகித் சர்மாவிடம் செல்ல, அதை அவர் எடுத்து பவுலரிடம் எறிந்தார். இந்த கலவரத்தில் ரன் அவுட் ஆனார் ஜெய்ஸ்வால்! பவர்ப்ளேயின் முடிவில் 50/2 என ஓரளவுக்கு நன்றாக தொடங்கியிருந்தது ராயல்ஸ்.
லிட்டிலின் 7வது ஓவரையும் பவுண்டரியுடன் தொடங்கினார் சாம்சன். அதே ஓவரில் படிக்கல்லும் ஒரு பவுண்டரி அடித்தார். கடைசியில், ஓவரின் 5வது பந்தில் சாம்சன் அவுட் ஆனார். ஃப்ளிக் செய்யப்பட்ட டாப் எட்ஜாகி, ஹர்திக்கின் கைகளில் தஞ்சமடைந்தது.
ரஷீத் வீசிய 8வது ஒவரில், அஸ்வின் விக்கெட்டும் காலி. ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக ரியான் பராக்கை இம்பாக்ட் வீரராக களமிறக்கினார் சாம்சன். லிட்டில் வீசிய 9வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே. இம்பாக்ட் வீரர் பராக்கை அடுத்த ஓவரில் பெவிலியனுக்கு வழியனுப்பினார் ரஷீத். லிட்டிலின் 11வது ஓவரில், 4 ரன்கள் கிடைத்தது. இப்போது இடது கை ரஷீத் கான், நூர் அகமது பந்து வீசவந்தார். 3வது பந்து, படிக்கல் காலி. அஸ்வினுக்கு ரஷீத் கான் செய்ததை, கண்ணாடியில் பார்த்தது போலிருந்தது. அடுத்து களமிறங்கிய ஜுரேல், ஒரு பவுண்டரி அடித்தார். லிட்டிலின் 13வது ஒவரில் 5 ரன்கள் மட்டுமே.
14வது ஓவரின் முதல் பந்திலேயே, ஜுரேலின் விக்கெட்டைக் கழட்டினார் நூர் அகமது. அடுத்து களமிறங்கிய போல்ட், ஒரு பவுண்டரி அடித்தார். ரஷீத்தின் 15வது ஓவரில் ஹெட்மயரின் விக்கெட்டும் கழண்டது. ரிசல்ட் தெரிந்துவிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் ரசிகர்கள் உறங்கச் சென்றார்கள். நூர் அகமது வீசிய 16வது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார் போல்ட். ஷமியின் அடுத்த ஓவரில் அவரும் அவுட்.
மோகித் சர்மாவின் 18வது ஓவரில், ஜாம்பா ரன் அவுட் ஆக, 118 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
119 ரன்கள் எனும் எளிய இலக்கை எட்டிப்பிடிக்க களமிறங்கியது சாஹா - கில் ஜோடி. மோகித்துக்கு பதிலாக இம்பாக்ட் வீரராக இறங்கினார் சுப்மன் கில். போல்ட், முதல் ஓவரை வீசவந்தார். இரண்டு பவுண்டரிகள் அடித்தார் சாஹா. சந்தீப்பின் 2வது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே. போல்ட்டின் 3வது ஓவரில், ஒரு பவுண்டரி அடித்தார் கில். சந்தீப்பின் 4வது ஓவரின் சாஹாவுக்கு ஒரு பவுண்டரி. போல்ட்டின் 5வது ஓவரில், கில் ஒரு பவுண்டரி, சாஹா இரு பவுண்டரிகள் என பறக்கவிட்டனர். சந்தீப் வீசிய 6வது ஓவரில், கில் இரண்டு பவுண்டரிகள் அடித்தார். பவர்ப்ளே முடிவில் 49/0 என சிறப்பாக தொடங்கியது டைட்டன்ஸ்.
ஜாம்பாவின் 7வது ஓவரில், கில்லுக்கு இன்னொரு பவுண்டரி. சஹல், 8வது ஓவரில் 4 ரன்கள் மட்டும் கொடுத்தார். ஜாம்பாவின் அடுத்த ஓவரில், கில் மீண்டும் ஒரு பவுண்டரி வெளுத்தார். சஹலின் 10வது ஓவரில், கில்லின் விக்கெட் காலியானது. ஸ்டெம்பிங் செய்தார் சாம்சன்.
'படையப்பா, ரொம்ப டைம் எடுத்துக்காதே' என்பதுபோல் பாண்ட்யாவிடம் சொல்லி அனுப்பினார் நெஹ்ரா.
ஜாம்பாவின் 10வது ஓவரை சிக்ஸருடன் துவங்கினார் ஹர்திக். அடுத்த பந்து, பவுண்டரிக்கு பறந்தது. அடுத்த இரண்டு பந்துகளிலும் மீண்டும் இரண்டு சிக்ஸர்கள்! இன்னும் 54 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே தேவை.
சஹலின் 12வது ஓவரில் பவுண்டரி அடித்த ஹர்திக், அஸ்வினின் 13வது ஓவரில் இன்னொரு பவுண்டரியும் அடித்தார்.
சஹலின் 14வது ஓவரில் மேட்சையே முடித்தது டைட்டன்ஸ். அம்புட்டுதேன்!
9 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது டைட்டன்ஸ் அணி! சிறப்பாக பந்து வீசி, 3 விக்கெட்களை கைப்பற்றிய ரஷீத் கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கபட்டது.