'இதெல்லாம் எங்க உருப்படப்போகுது' என 'சூர்யவம்சம்' சக்திவேல் சின்ராசை ஒதுக்கி வைப்பதைப் போலத்தான் 2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் ஏலம் முடிந்தபோது எல்லாரும் குஜராத் அணியை ஒதுக்கி வைத்தார்கள். அனுபவம் வாய்ந்த அணிகள் எல்லாம் 'ரெண்டு ஓபனர், மூணு மிடில் ஆர்டர்' என கணக்கு வைத்து எடுத்துக்கொண்டிருக்க, 'ஆல்ரவுண்டரா, அப்போ தப்பாம எடுத்துப்போடு' என கை காட்டி டீம் எடுத்துக்கொண்டிருந்தது குஜராத் அணி. 23 பேரில் மொத்தம் 8 ஆல்ரவுண்டர்கள்.
ஓரளவு ஐ.பி.எல் ஆடிய அனுபவம் உடைய ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்களோ நான்கே பேர்தான் இருந்தார்கள். ஹெட் கோச் நெஹ்ரா அப்போதே பலமான விமர்சனங்களுக்கு உள்ளானார். ஆனால் தோனியின் சி.எஸ்.கே 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' என்றால் அவரின் ஆஸ்தான சிஷ்யனான பாண்ட்யா, 'நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பாக்குது' ரகம். 'படம் வேற வேறன்னாலும் ட்யூன் ஒண்ணுதானே' என குருவுக்குத் தப்பாமல் கோப்பை அடித்தார். இப்போதே குருவைப் போலவே கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறை தக்க வைப்பாரா?
பலம் :
சந்தேகமே இல்லாமல் பாண்ட்யா. கடந்த சீசனுக்கு முன்புவரை அவர் பிரேக்கில் இருந்ததால் அவரின் ஃபார்ம் மீது அனைவருக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் அவரோ சகட்டுமேனிக்கு விளாசி நான்கு அரைசதங்கள் உள்பட 487 ரன்கள் எடுக்க ஒரு பேட்ஸ்மேனாய் அவரின் பெஸ்ட் ஐ.பி.எல் சீசன் ஆனது 2022. அந்த ஃபார்மை அப்படியே இந்த ஆண்டு ஐ.பி.எல் வரை அவர் தக்க வைத்திருப்பதுதான் குஜராத் அணிக்கு மிகப்பெரிய பலம். 2022 ஐ.பி.எல்லுக்கு பின் பாண்ட்யா ஆடிய 31 சர்வதேச டி20 இன்னிங்ஸ்களில் 718 ரன்கள் எடுத்திருக்கிறார். சராசரி 31. கூடவே 27 விக்கெட்களும். கேப்டனாகவும் மிகக் கூலாய் டீமை வழிநடத்துவதால் அணிக்கு அவர் கொடுப்பது ஆயிரம் யானைகளின் பலத்தை.
அடுத்த தூண், சுப்மன் கில். கடந்த ஐ.பி.எல்லில் பாண்ட்யாவுக்கு அடுத்ததாய் அதிக ரன்கள் எடுத்தவர். நின்று பொறுமையாய் ஆடுவார் என்பதால் பவர்ப்ளேயில் விக்கெட்கள் போகாது என்பது அணிக்கு மற்றுமொரு ப்ளஸ். ஊர்த் திருவிழாவில் கெடா வெட்டும் அருவாளைப் போலத்தான் இந்த 'கில்லர்' மில்லர். 'போட்டா ஒரே போடு. இல்லன்னா வெளியேறு' ரகம். அவரின் ஃபார்மும் அணிக்கு நிச்சயம் கைகொடுக்கும். டெத் ஓவர்களில் இவரும் பாண்ட்யாவும் ஆடும்பட்சத்தில் புதுப்பந்துகளை அடிக்கடி எடுக்க ஓடிக்கொண்டிருப்பார்கள் அம்பயர்கள். கேன் வில்லியம்சனின் அனுபவம் மிடில் ஆர்டரின் ஸ்திரத்தன்மைக்கு உதவும்.
பவுலிங்கை வழிநடத்தப்போவது ரஷித் கான். மிடில் ஓவர்களை 20.54 ஆவரேஜ் வைத்திருக்கும் அவர் பார்த்துக்கொள்ள, பவர்ப்ளேயை பங்குபிரித்துக்கொள்வார் கடந்த சீசனில் 20 விக்கெட்கள் வீழ்த்திய சமி. இந்த ஆண்டு எக்கச்சக்க விலைகொடுத்து ஏலத்தில் எடுத்த ஷிவம் மவியையும் நிச்சயம் பயன்படுத்துவார்கள்.
இம்சை அரசர்கள் :
பேப்பரில் படுவீக்காக இருந்த இந்த அணிதான் கடந்த முறை சாம்பியன். இந்த முறை பேப்பரிலும் கொஞ்சம் பலம்வாய்ந்த அணியாக இருப்பதால் பெரிய அளவிலான பலவீனங்கள் இல்லை. ஓபனிங் கில், சஹா/பரத், ஒன் டவுன் வில்லியம்சன் ஆடும்பட்சத்தில் பவர்ப்ளேயில் போதிய ரன்கள் வராமல் போகலாம், இவர்கள் அனைவருமே டைம் எடுத்து ஆடக்கூடியவர்கள் என்பதால்!
பவுலிங்கில் கடந்த முறை ரஷித், சமிக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்கள் வீழ்த்திய பெர்குசன் இப்போது அணியில் இல்லை. யஷ் தயால் காயம் காரணமாக ஒரு பெரிய இடைவேளைக்குப் பின் ஆடவருவதால் அவரின் ஃபார்மும் சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது. ஜோஸ் லிட்டில் ஆடுவாரா, அப்படியே ஆடினாலும் எத்தனை ஆட்டங்களில் இருப்பார் என்பதிலும் தெளிவில்லை. சாய் கிஷோரையும் திவேதியாவையும் பாண்ட்யா பேட்டிங்கிற்கு மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்துவதால் ஸ்பின் டிபார்ட்மென்ட்டும் கொஞ்சம் வீக்காகவே காட்சியளிக்கிறது. அனேகமாய், சமி, ரஷித், பாண்ட்யா, ஷிவம் மவி நால்வரும் தங்கள் கோட்டாவை முடித்துக்கொண்டு மீதியை மற்றவர்களுக்கு கொடுக்கவே வாய்ப்புகள் அதிகம்.
கடந்த சீசனில் நிறைய போட்டிகளை கடைசி ஓவர்வரை இழுத்துக்கொண்டுவந்து முடித்தார்கள். திவேதியா, ரஷித் போன்றவர்கள் இந்த முறையும் அதே அதிர்ஷ்டத்தோடு இருப்பார்கள் என உறுதியாய்ச் சொல்வதற்கில்லை.
ஸ்டார் வார் :
அணியில் கவனிக்கவேண்டிய ஸ்டார் பிளேயர்கள் இருவருமே தமிழர்கள் தான். கடந்த சீசனில் மிடில் ஆர்டரில் இறங்கி வெளுவெளுவென வெளுத்த சாய் சுதர்சன் இப்போது சூப்பர் ஃபார்மில் இருக்கிறார். கடைசியாய் அவர் ஆடிய 15 இன்னிங்ஸ்களில் மூன்று அரைசதங்கள் உள்பட 755 ரன்கள். எனவே இந்த முறை அதிக ஆட்டங்களில் ஆட வாய்ப்புகள் அதிகம். இவர் பேட்டிங்கில் என்றால் மற்றொரு வீரரான சாய் கிஷோர் பவுலிங்கில். கடைசியாய் ஆடிய 9 இன்னிங்ஸ்களில் 16 விக்கெட்கள். பவுலிங் ஆல்ரவுண்டராய் ஏழாவது இடத்தில் இறங்க பக்காப் பொருத்தம்.
துருவங்கள் பதினொன்று :
சுப்மன் கில், சஹா/பரத், கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்ட்யா, மில்லர் (முதல் ஆட்டத்தில் இவர் இல்லாததால் மேத்யூ வேட் இறங்கலாம்), திவேதியா, சாய் கிஷோர், ரஷித் கான், ஷிவம் மவி, சமி, அல்ஸாரி ஜோசப்.
இம்பேக்ட் ப்ளேயர் :
இந்த ஆண்டிலிருந்து இம்பேக்ட் ப்ளேயர் எனும் முறை ஐ.பி.எல்லில் அறிமுகமாகிறது. அதன்படி ப்ளேயிங் லெவன் தவிர ஐந்து பிளேயர்களை கேப்டன் மாற்றுவீரர்களாக அறிவிக்கலாம். அவர்களுள் ஒருவர் ஆட்டத்தின் தன்மை பொறுத்து பவுலராகவோ, பேட்ஸ்மேனாகவோ களமிறங்குவார். பவுலராய் களமிறங்குபவர் நான்கு ஓவர்களையும் வீசலாம். பேட்ஸ்மேனாய் களமிறங்குபவரும் அவுட்டாகும்வரை/ஓவர் முடியும்வரை விளையாடலாம். அப்படி பேட்ஸ்மேன் களமிறங்கும்பட்சத்தில் டெயில் எண்டில் இருக்கும் பவுலருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்காது. அதே போல இவர்கள் களமிறங்கும்போது வெளியேறும் வீரர் அதன்பின் ஆட்டத்தின் எந்தக் கட்டத்திலும் திரும்ப பங்குகொள்ளமுடியாது.
இதன்படி குஜராத் டைட்டன்ஸின் இம்பேக்ட் பிளேயர்கள் பட்டியல் பெரும்பாலும் இப்படி இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.
சாய் சுதர்சன் (டெத் ஓவர்களில் அதிரடியாய் ஆட ஆள் தேவைப்படும்போது)
ஒடியன் ஸ்மித் (பவர் ஹிட்டர் ஒருவர் தேவைப்படும்போது, ஆனால் அணியின் தொடக்க ப்ளேயிங் லெவனில் ஏற்கனவே நான்கு வெளிநாட்டு வீரர்கள் இருந்தால் இவரால் விளையாட முடியாது.)
யஷ் தயால் (எதிரணியில் வலதுகை ஆட்டக்காரர்கள் அதிகமிருந்தால் இடதுகை பவுலரான இவரின் தேவை அதிகரிக்கும்)
அபினவ் மனோகர் (எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனுக்கான தேவை எழும்போது)
ஜெயந்த் யாதவ் (சென்னை போன்ற பிட்ச்களில் ஒரு எக்ஸ்ட்ரா ஸ்பின் ஆல்ரவுண்டர் தேவைப்படும்போது)
'Beginner's Luck' என ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. தமிழில் கிட்டத்தட்ட 'குருட்டாம்போக்குல ஜெயிச்சாங்க' என்பதைப் போன்ற அர்த்தம். ஐ.பி.எல்லை பல ஆண்டுகளாக கவனிப்பவர்கள் குஜராத்தை இப்படித்தான் எடைபோட்டு வைத்திருக்கிறார்கள். இந்த சீசனில் அதைப் பொய்யாக்கவேண்டிய கடமையும் அழுத்தமும் பாண்ட்யா அண்ட் கோவிற்கு இருக்கிறது. பார்க்கலாம்!