குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றது, குஜராத் அணிக்கு பெரிய பாதகமாக அமையும் என கூறப்பட்டது. ஆனால் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா வேறு அணிக்கு சென்றது குறித்து பேசிய தலைமைபயிற்சியாளர் நெஹரா, “நான் அவரை போகவேண்டாம் என நிறுத்தவில்லை” என்றும், அணியின் உரிமையாளர் பேசும்போது“மும்பை அணிக்கு செல்லவேண்டும் என்று ஹர்திக் பாண்டியா தான் கேட்டார், ஆனால் நாங்கள் அவரை தடுக்கவில்லை” என்று கூறினார்.
ஹர்திக் பாண்டியாவின் முடிவை மதிப்பதாக தெரிவித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, மும்பை அணியிடம் இருந்து மாற்றுவீரரை கூட வாங்காமல் “நீ போனா போ, எங்களால் வெற்றிபெற முடியும் என்ற தோரணையில் கெத்தாக இருந்தது”. அதனை மெய்யாக்கும் வகையில் சுப்மன் கில் தலைமையிலான டைட்டன்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியை வீழ்த்தியது மட்டுமல்லாமல், தற்போது சன்ரைசர்ஸ் அணியையும் வீழ்த்தி இரண்டு வெற்றிகளை பதிவுசெய்துள்ளது.
அகமதாபாத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியை எதிர்கொண்டு விளையாடியது குஜராத் டைட்டன்ஸ் அணி. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வுசெய்ய, தொடக்க வீரர்களாக களமிறங்கிய SRH பேட்டர்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். மயங்க் அகர்வால் மற்றும் டிராவிஸ் ஹெட் அடுத்தடுத்து 5 பவுண்டரிகளை விரட்டினாலும், கம்பேக் கொடுத்த குஜராத் பவுலர்கள் பவுண்டரியை அடிக்கவிடாமல் கண்ட்ரோல் செய்தனர். ஆனால் 3வது வீரராக களத்திற்கு வந்த அபிஷேக் சர்மா தொடர்ச்சியாக இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு ரன்களை எடுத்துவந்தார்.
6 ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 56 ரன்களுடன் நல்ல தொடக்கத்தையே கொடுத்தது சன்ரைசர்ஸ் அணி. ஆனால் அதற்குபிறகு பந்துவீச வந்த குஜராத் ஸ்பின்னர்கள் நூர் அகமது மற்றும் ரசீத் கான் இருவரும் இழுத்துப்பிடிக்க, ரன்களை எடுத்துவரமுடியாமல் தடுமாறியது சன்ரைசர்ஸ் அணி. டிராவிஸ் ஹெட்டை நூர் அகமது வெளியேற்ற, நல்ல டச்சில் இருந்த அபிஷேக் சர்மாவை மோஹித் சர்மா வெளியேற்ற, சன்ரைசர்ஸ் அணிக்கு அடிக்குமேல் அடிகொடுத்தது குஜராத் அணி.
ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், களத்திற்கு வந்த அதிரடி வீரர் க்ளாசன் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டிவிட ஆட்டத்தில் சூடுபிடித்தது. ஆனால் அடுத்த ஓவரிலேயே க்ளாசனை போல்டாக்கி அனுப்பிவைத்த ரசீத் கான், ஒரு அபாரமான கேட்ச் மூலம் மார்க்ரமையும் பெவிலியன் அனுப்ப, சன்ரைசர்ஸ் அணிக்கு வில்லனாக மாறினார். மீதியிருக்கும் வீரர்களை மோஹித் சர்மா பார்த்துக்கொள்ள, சன்ரைசர்ஸ் அணி வெறும் 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. 4 ஓவர்களில் 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த மோஹித் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கலக்கிப்போட்டார்.
163 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணியில், ரிதிமான் சாஹா மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். 3 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என மிரட்டிய இந்த ஜோடி கலக்கிப்போட்டது. 25 ரன்களில் சாஹாவும், 36 ரன்களில் சுப்மன் கில்லும் வெளியேற, ஹர்திக் பாண்டியா சென்றபிறகு 3வது வீரராக களமிறங்கும் சாய்சுதர்சன் இந்த போட்டியிலும் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
தொடக்கத்தில் பொறுமையாக விளையாடிய சாய்சுதர்சன், தேவையான இடத்தில் பவுண்டரிகளை எடுத்துவந்து ரன்ரேட்டை குறையாமல் பார்த்துக்கொண்டார். 4 பவுண்டரிகள் 1 சிக்சர் என விரட்டிய சாய்சுதர்சன் 45 ரன்களும், 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்ட டேவிட் மில்லர் 44 ரன்களும் அடிக்க 19.1 ஒவரிலேயே இலக்கை எட்டிய குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமான வெற்றியை பதிவுசெய்தது.
பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்று வடிவத்திலும் கலக்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா இல்லாத குறையே இல்லாமல் கலக்கிவருகிறது. ஹர்திக் பாண்டியா இடத்தில் களமிறங்கும் சாய்சுதர்சன், நம்பிக்கை வீரராக மாறிவருகிறார். இன்னும் அவர்களுக்கு மேத்யூ வேட் மற்றும் கேன் வில்லியம்சன் இருவரும் களமிறங்க வெளியில் காத்திருக்கின்றனர். அவர்களும் அணிக்கு வரும் பட்சத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வலுவான அணியாக மாறும்.
இவை அனைத்தையும் தாண்டி டெத் ஓவர்களில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திவரும் மோஹித் சர்மா, குஜராத் டைட்டன்ஸ் அணியின் முதுகெலும்பாக ஜொலித்துவருகிறார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக இதுவரை 20 டெத் ஓவர்களை வீசியிருக்கும் அவர், 41 பந்துகளை டாட்பந்துகளாக வீசி 17 விக்கெட்டுகளை கைப்பற்றி நம்பிக்கை நட்சத்திரமாக அசத்தி வருகிறார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டு வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், ஹர்திக் தலைமையிலான மும்பை அணி இரண்டு போட்டிகளில் தோல்வியுற்று முதல் வெற்றிக்காக போராடிவருகிறது. இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு சென்றுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.