முதல் பெஞ்ச் மாணவர்கள் மார்க்குக்காக சண்டை போட்டுக்கொள்வது போலத்தான் நேற்றைய நாளின் இரண்டாவது போட்டி. குஜராத், ராஜஸ்தான் இரண்டுமே பலம் வாய்ந்த அணிகள். இந்த ஆண்டு சாம்பியனாக அதிக வாய்ப்பிருப்பதாக கணிக்கப்படும் அணிகள். இவர்கள் இருவரில் யார் இந்தப் போட்டியில் ஜெயித்தாலும் அவர்கள் வசதியாய் டேபிள் டாப்பரும் ஆகிவிடலாம். கடந்த சீசனின் பைனலுக்குப் பிறகு மீண்டும் நேருக்கு நேர் மோதிக்கொள்கிறார்கள். இப்படி ஏகப்பட்ட காரணங்கள் இருந்தபடியால் இந்த க்ளாஸ் ஆஃப் தி டைட்டன்ஸை பார்க்க ஆவலாய் கூடினார்கள் ரசிகர்கள்.
ராஜஸ்தான் அணியில் கடந்த போட்டியில் சின்ன காயம் காரணமாக ஆடாத போல்ட் மீண்டும் உள்ளே வந்திருந்தார். கூடவே ரியான் பராக்கும் ஆடம் ஸாம்பாவும். ஜேஸன் ஹோல்டரும் குல்தீப் சென்னும் வெளியே. படிக்கல் இம்பேக்ட் பிளேயராகியிருந்தார். குஜராத்தில் ஜோஷ் லிட்டிலுக்கு பதில் அபினவ் மனோகர். ப்ளேயிங் லெவனில் வெறும் மூன்று வெளிநாட்டு வீரர்களோடு களமிறங்கியது குஜராத். டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் பவுலிங்கைத் தேர்வு செய்தார்.
ஓபனிங் இறங்கினார்கள் சாஹாவும் கில்லும். போல்ட் வீசிய மூன்றாவது பந்தில் சாஹா ஸ்கொயர் லெக் பக்கம் அடிக்க ஆசைப்பட்டு தூக்க அது பேட் எட்ஜில் பட்டு படேல் சிலைக்கும் உயரமாய் பறந்தது. பக்கத்து ஸ்டேட் ராஜஸ்தானிலிருந்து ப்ளைட் பிடித்தே வந்து கிரவுண்டுக்குள் இறங்கி கேட்ச் பிடித்துவிடலாம் என்கிற அளவுக்கு உயரம். ஹெட்ம்யர், சாம்சன், ஜுரேல் என மூன்று பிளேயர்கள் பிட்ச்சுக்கு நடுவே நின்று யார் அதைப் பிடிப்பது என பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே இருந்தார்கள். அதற்குள் பந்து கீழே வந்துவிட மூன்று பேருமே கோட்டைவிட்டார்கள். 'இவங்களை நம்பமுடியாது' என கொஞ்சம் தள்ளி நின்றிருந்த போல்ட் சாம்சன் கையில் பட்டுத்தெறித்த பந்தை கப்பென பிடித்தார். 'இப்படி ஒரு கேட்ச்சை எங்காவது கண்டதுண்டா யுவர் ஹானர்?' என்பதுதான் பார்த்த எல்லாரின் மைண்ட்வாய்ஸாகவும் இருந்தது.
ஐ.பி.எல்லின் அண்டர்ரேட்டர் பவுலரான சந்தீப் சர்மா வீசிய இரண்டாவது ஓவரில் ஐந்தே ரன்கள். போல்ட் வீசிய மூன்றாவது ஓவரில் மூச்சைப் பிடித்து 13 ரன்கள் எடுத்தார்கள். சந்தீப் தன் அடுத்த ஓவரில் மீண்டும் ரன்ரேட்டை கட்டுக்குள் கொண்டுவந்தார். சூட்டோடு சூட்டாக ஸ்பின்னை இறக்கினார் சாம்சன். ஸாம்பா வீசிய பந்தை கில் தட்டிவிட முயல, பாய்ந்து சென்று பிடித்து சாய் சுதர்சனை ரன் அவுட்டாக்கினார் ஸாம்பா. பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் கில் இரண்டு பவுண்டரிகள் அடிக்க ஸ்கோர் 42/2 என உயர்ந்தது. ஸாம்பா வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார் ஹர்திக். அதற்கடுத்த ஓவரில் கில்லும் அதையே செய்ய அந்த இரண்டு ஓவர்களில் மட்டும் முப்பது ரன்கள்.
வேறு வழியில்லாமல் சாஹலை சரணடைந்தார் சாம்சன். அந்த ஓவரில் ஆறே ரன்கள். பிரஷர் ஏற, சாஹலின் இரண்டாவது ஓவரில் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு எட்ஜாகி வெளியேறினார் ஹர்திக். அப்படியே ஸ்பின்னர்களை வைத்து கட்டம் கட்டினார் சாம்சன். சாஹல், அஸ்வின், ஸாம்பா மூவரும் பங்குபிரித்து வீசிய அடுத்த ஐந்து ஓவர்களில் வெறும் 31 ரன்கள்தான். சந்தீப் வீசிய 16வது ஓவரில் ஒருவழியாக நடையைக் கட்டினார் கில். 34 பந்துகளில் 45 ரன்கள். இப்போது களத்தில் மில்லரும் அபினவ் மனோகரும். போல்ட் பந்தை பயமே இல்லாமல் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களுக்குத் தூக்கினார் அபினவ். ஸாம்பாவையும் விட்டுவைக்கவில்லை. அவரின் ஓவரிலும் ஒரு சிக்ஸ். ஸாம்பா அபினவைத் தூக்கியபோது அவர் ஏற்கனவே தன் வேலையை செய்து முடித்திருந்தார். 13 பந்துகளில் 27 ரன்கள். அதிரடியாய் ஆடிக்கொண்டிருந்த மில்லரும் கடைசி ஓவரில் காலியாக ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 177/7. அதென்னமோ ராஜஸ்தானுக்கு எதிராய் ஆடும்போதெல்லாம் மில்லருக்குள் இருக்கும் கில்லர் வெளியே வந்துவிடுகிறார். ஐ.பி.எல்லில் ராஜஸ்தானுக்கு எதிராக அவர் ஆடிய பத்து போட்டிகளில் 382 ரன்கள். சராசரி 76.40
ஷமியின் முதல் பந்தே பிட்ச் ஸ்விங்கிற்கு தயாராய் இருப்பதைக் காட்டியது. அந்த ஓவரில் ஜெய்ஸ்வாலுக்கும் பட்லருக்கும் நன்றாகவே ஆட்டம் காட்டினார் ஷமி. இரண்டே ரன்கள். பவர்ப்ளேயில் ரெகுலராய் பந்துவீசத் தொடங்கிவிட்ட கேப்டன் ஹர்திக்கின் ஓவர்தான் அடுத்து. வைட் லென்த் பந்தை தேவையே இல்லாமல் ஜெய்ஸ்வால் தொட்டுவைக்க அது ஸ்லிப்பில் நின்ற கில் கையில் சென்று மாட்டியது. அந்த ஓவரில் ஒரே ஒரு ரன் மட்டுமே. பிரஷர் அதிகமாக பட்லர் அதற்கு பலியானார். ஷமி வீசிய பந்தை ஸ்கூப் அடிக்க ஆசைப்பட்டு ஆஃப் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். இந்த ஏழாண்டுகால ஐ.பி.எல் கரியரில் பட்லரின் முதல் டக் அவுட் இது. விக்கெட் மெய்டன். மூன்று ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 4/2.
ஹர்திக்கின் அடுத்த ஓவரில் சாம்சனும் படிக்கல்லும் ஆளுக்கொரு பவுண்டரி அடிக்கவே ஸ்கோர் பத்தைத் தாண்டியது. ஆனால் ரன்ரேட்டோ பவர்ப்ளே முடியும்வரையிலும் நாலரையைத் தாண்டவில்லை. ஆறு ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு வெறும் 26 ரன்கள். ஏழாவது ஓவரிலிருந்துதான் அடிக்கவே தொடங்கினார்கள். அதில் மட்டும் 12 ரன்கள். அதற்கடுத்த ஓவரில் எட்டு ரன்கள். ரன்ரேட் ஏறவும் விவரமாய் ரஷித்தை இறக்கி பார்ட்னர்ஷிப்பை முறித்தார் பாண்ட்யா. பந்துக்கு ஒரு ரன் என்கிற கணக்கில் ஆடிக்கொண்டிருந்த படிக்கல் வெளியேறினார். இது குஜராத்துக்கு நல்லதா இல்லை ராஜஸ்தானுக்கு நல்லதா என்பது விடையே சொல்லமுடியாத மில்லியன் டாலர் கேள்வி.
சென்னை கண்டுடெடுத்த முத்து, பாண்ட்யா மீட்டெடுத்த சொத்து மொகித் சர்மா வீசிய பத்தாவது ஓவரில் வெறும் மூன்றே ரன்கள். ஸ்கோர் 53/3. உள்ளூர்ப் போட்டிகளில் எல்லாம் விரட்டி விரட்டி விளாசிவிட்டு ஐ.பி.எல்லில் கோட்டைவிடும் ரியான் பராக் இந்தமுறையும் அதைச் செய்யத் தவறவில்லை. ரஷித்தின் பந்தில் நடையைக் கட்டினார். மொகித் வீசிய அடுத்த ஓவரிலும் நான்கே ரன்கள். 12 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 66/4. ரன்ரேட் 5.5. தேவைப்பட்ட ரன்ரேட்டோ பதினான்கைத் தாண்டி போய்க்கொண்டிருந்தது.
கேப்டன் இன்னிங்ஸ் ஆடத்தயாரானார் சாம்சன். ரஷித் வீசிய 13வது ஓவரின் இரண்டாவது பந்தில் லாங் ஆஃப்பில் ஒரு சிக்ஸ். அடுத்த பந்தைத் தூக்கி டீப் மிட்விக்கெட் பக்கம் ஒரு சிக்ஸ். அதற்கடுத்த பந்தை ரஷித் ஷார்ட்டாய் போட அதை அலேக்காய் மீண்டும் மிட்விக்கெட் பக்கம் ஒரு சிக்ஸ். ரஷித்தை ஒருவர் ஹாட்ரிக் சிக்ஸர்கள் வெளுப்பதெல்லாம் அநேகமாய் இதுவே முதல் முறை. 'இன்டென்ட்' என தோனி சொல்லிக்கொண்டே இருப்பாரே அதை செய்துகாட்டினார் சாம்சன். கேப்டன் போட்ட ரோட்டில் 'சொய்ய்ங்' என அதன்பின் வண்டி ஓட்டினார் ஹெட்ம்யர். ஜோசப் வீசிய அடுத்த ஓவரில் 15 ரன்கள்.
சட்டென இம்பேக்ட் பிளேயராய் ஆப்கனிஸ்தானின் நூர் அகமதை அழைத்துவந்தார் பாண்ட்யா. 'நானெல்லாம் என்ன, அவன் என்னைவிட சூப்பரா போடுவான்' என ரஷித்தே வாய்திறந்து பாராட்டிய இளம் பவுலர். 'பரவாயில்ல இருந்துட்டுப் போ' என அந்த இளம் குருத்தையும் வந்ததும் வராததுமுமாய் வெளுத்தார் சாம்சன். ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி. அந்த ஓவரின் கடைசி பந்தில் சாம்சன் அடித்தற்கு பழிதீர்த்தார் நூர். லாங் ஆஃப்பில் மில்லரிடம் கேட்ச். ஸ்கோர் 15 ஓவர்கள் முடிவில் 114/5. கடந்த மூன்று ஓவர்களில் மட்டும் 48 ரன்கள்.
'அவனாவது பாவம் பார்த்து அடிப்பான். நானெல்லாம் பாய்ஞ்சு பாய்ஞ்சு அடிப்பேன்' மோடில்தான் இருந்தார் ஹெட்ம்யர். அல்ஸாரி ஜோசப் வீசிய 16வது ஓவரில் இரண்டு சிக்ஸ்கள் அடிக்க 20 ரன்கள் மொத்தமாய். நூர் முகமதுவின் அடுத்த ஓவரில் எட்டு ரன்கள். மீண்டும் களத்திற்கு வந்த ரஷித் கானை 13 ரன்கள் அடித்து திருப்பியனுப்பினார் ஹெட்ம்யர். ஒருகட்டத்தில் 'அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான்டா' என்கிற சென்னை 28 காமெடிதான் களத்தில் நடந்துகொண்டிருந்தது. 19வது ஓவரின் முதல் பந்தை ஷமி என்றும் பாராமல் தலைக்கு மேல் தூக்கி சிக்ஸ் அடித்தார் ஜுரெல். அதற்கடுத்த பந்தில் டாப் எட்ஜில் கேட்ச்சானார். அவருக்கு பின் வந்த அஸ்வினுக்கு ஷமி ஷார்ட்டாக போட்டுப் போட்டுக் கொடுக்க அவரும் மூன்று பந்துகளில் பத்து ரன்கள் எடுத்துக்கொடுத்துவிட்டு வெளியேறினார். இப்போது வெற்றிக்குத் தேவை ஏழே ரன்கள் ஆறு பந்துகளில். ஹெட்ம்யரே சிக்ஸ் அடித்து அந்த சம்பிரதாயத்தையும் முடித்து வைத்தார். 26 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த அவரே ஆட்டநாயகனும்!
சாம்பியனை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி மற்றுமொரு கோட்டையைத் தகர்த்திருக்கிறது ராஜஸ்தான். பட்லரை மட்டுமே நம்பி அணியில்லை என்பதையும் இந்த வெற்றி மூலம் நிறுவியிருக்கிறது. மறுபக்கம் கடந்த ஆண்டைப் போல இல்லாமல் ஏற்ற இறக்கமாகவே இருக்கிறது குஜராத்தின் க்ராஃப். திவேதியாவை பவுலிங்கிற்கு பயன்படுத்தாமல் சும்மா வைத்திருப்பது, கடைசி ஓவரில் மொகித் சர்மாவிற்கு பதில் நூர் முகமதுவை போட வைத்தது என பாண்ட்யா எடுக்கும் முடிவுகள் புருவங்கள் உயர்த்தவும் செய்கின்றன. 'இது பெரிய தொடர். ஒரு மேட்ச் எதையும் தீர்மானித்துவிடாது' என இந்த ஆட்டத்திற்குப் பின் சொன்னார் பாண்ட்யா. அது அவரின் கேப்டன்ஷிப்பிற்கும் பொருந்தும்தான். கொசுறாய் இன்னொரு சர்ச்சை - ரன்ரேட் பற்றி ஹர்ஷா போக்லே பற்றவைத்தது இப்போது குபுகுபுவென எரிவதைப் போல இடுப்புக்கு மேலே வீசப்படும் நோ பாலுக்கும் சீக்கிரமே சண்டை வந்து கிரிக்கெட் உலகம் இரண்டுபடும் என எதிர்பார்க்கலாம்.