பேட்டைக்காரன் ரோகித்தும் கே.பி.கருப்பு பாண்டியாவும் ஈராஸ் மோதிக்கொள்கிறார்கள். கடந்த சீசனில், பேட்டைக்காரன் பார்ட்டி சாம்ஸின் தரமான ஆட்டத்தால், குஜராத் அணி ஜாமீன் வாங்கியது. அதற்கு செய்முறையாக இம்முறை நடக்கும் போட்டியில் பாண்டியா என்ன செய்யப்போகிறார் என பீதியில் காத்திருந்தார்கள் மும்பை ரசிகர்கள். டாஸ் வென்ற மும்பை அணி, பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது. சாஹாவும் கில்லும் குஜராத்தின் இன்னிங்ஸைத் துவக்க, முதல் ஓவரை வீசவந்தார் சின்னவர். முதல் ஓவரில் 4 ரன்கள் மட்டுமே. ஓபனிங்க்லாம் நல்லாத்தான் இருக்கு. ஃபினிஷிங் சரியில்லையேப்பா என சங்கடப்பட்டார்கள் மும்பை ரசிகர்கள். பெஹ்ரன்டார்ஃபின் 2வது ஓவரில், ஒரு பவுண்டரியை விரட்டினார் கில். 3வது ஓவரின் முதல் பந்திலேயே சாஹாவின் விக்கெட் காலி! லெக் சைடில் சென்ற பந்து லேசாக க்ள்வைல் உரசியிருந்தது. மேல் முறையிட்டுக் சென்ற சாஹா, ஒரு ரிவ்யூவையும் வீணாக்கிவிட்டு நடையைக் கட்டினார். இந்த ஓவரில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார் சின்ன டெண்டுல்கர்.
பெஹ்ரன்டார்ஃபின் 4வது ஓவரில், கேப்டன் ஹர்திக் ஒரு பவுண்டரி அடித்தார். நன்றாக வீசிக்கொண்டிருந்த அர்ஜூனை அனுப்பிவிட்டு, மெரிடித்தை அழைத்துவந்தார் ரோகித். மெர்டித் வீசிய 5வது ஓவரில், ஒரு பவுண்டரி விளாசினார் கில். 6வது ஓவரை வீசவந்தார் க்ரீன். 2வது பந்து மிட்விக்கெட்டில் பவுண்டரி, 3வது பந்து கவர் பாயின்ட்டில் பவுண்டரி, 4வது பந்து, மிட் ஆனில் ஒரு சிக்ஸர். ஒரே ஓவரில் 17 ரன்களை மட்டுமல்ல, 50/1 என பவர்ப்ளேயை முடித்தது குஜராத் டைட்டன்ஸ்.
7வது ஓவரை வீசவந்தார் சாவ்லா. முதல் பந்திலேயே லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து அதிர்ச்சி கொடுத்தார் கேப்டன் பாண்டியா. அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே. குமார் கார்த்திகேயா வீசிய 8வது ஓவரிலும் 5 ரன்களே. மீண்டும் வந்த சாவ்லாவை, பவுண்டரியோடு வரவேற்றார் கில். ஆட்டத்தின் கியரை மாற்றும் நேரம் வந்தது. கார்த்திகேயாவின் 10வது ஓவரில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என துவங்கினார் சங்கர். அதே ஒவரில் பவுண்டரி அடித்த கில், 30 பந்துகளில் தனது அரைசதத்தையும் நிறைவு செய்தார். 10 ஓவர் முடிவில் 84/2 என `திட்டமிட்ட இலக்கு. திகட்டாத இன்பம்' என ஆடிக்கொண்டிருந்தது குஜராத்.
மெரிடித்தின் 11வது ஓவரில், ஒரு பவுண்டரி அடித்தார் கில். குமார் கார்த்திகேயா வீசிய 12வது ஓவரின் முதல் பந்தில் சுப்மன் கில் காலி. லாங் ஆனில் கேட்ச் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார். நல்ல இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அதே ஓவரில், மில்லர் ஒரு பவுண்டரியும் அடித்தார். 13வது ஓவரை வீசிய சாவ்லா, விஜய் சங்கரின் விக்கெட்டைத் தூக்கினார். லாங் ஆனில் கேட்ச் கொடுத்துவிட்டு அமைதியாக கிளம்பினார் சங்கர். இந்த ஓவரில், 4 ரன்கள் மட்டுமே. கார்த்திகேயாவின் 14வது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார் மில்லர். தனது கடைசி ஓவரை வீசவந்த சாவ்லாவை குறி வைத்து அடித்தது குஜராத் அணி. ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு துரத்தினார் அபினவ் மனோகர். ஓவரில், 5வது பந்தில் இன்னும் வெறியாகி தூக்கி அடித்தார். பந்து சிக்ஸருக்கு பறந்தது! 15 ஓவர் முடிவில் 130/4 என கியரை மீண்டும் மாற்றியது குஜராத்.
பெஹ்ரன்டார்ஃபின் 16வது ஒவரில் பவுண்டரிகள் ஏதுமின்றி 7 ரன்கள் மட்டுமே. மெரிடித்தின் 17வது ஓவரில், அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள். க்ரீன் வீசிய 18வது ஓவரில், தொடர்ந்து இரு மாபெரும் சிக்ஸ்களை அடித்தார் மனோகர். மில்லரும் தன் பங்குக்கு ஒரு சிக்ஸரை சாத்தினார். ஒரே ஓவரில் 22 ரன்கள்! 19வது ஓவரின் முதல் பந்திலேயே அபினவ் மனோகர் அவுட். 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய திவாட்டியா, சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸரை பறக்கவிட்டார். அந்த ஓவரை இரண்டு சிக்ஸர்கள் அடித்து முடித்தார் மில்லர். மொத்தம் 19 ரன்கள். 20வது ஓவர் வீசிய பெஹ்ரன்டார்ஃபை முதல் இரண்டு பந்துகளில், இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டார் திவாட்டியா! அடுத்து அதே ஓவரில் மில்லர் அவுட்டாக, 207/6 எனும் எதிர்பாராத ஸ்கோருடன் இன்னிங்ஸை முடித்தது குஜராத் டைட்டன்ஸ். கடைசி 30 பந்துகளில் 77 ரன்கள் விளாசினர்.
சுப்மன் கில்லுக்கு பதிலாக ஜோஸ் லிட்டிலை இம்பாக்ட் வீரராக இறக்கினார் பாண்டியா. ரோகித்தும் கிஷனும் மும்பையின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசினார் முகமது ஷமி. 2 ரன்கள் மட்டுமே. கேப்டன் ஹர்திக் வீசிய 2வது ஓவரின் கடைசிப்பந்தில், கேப்டன் ரோகித் அவுட் ஆனார். பந்து லீடிங் எட்ஜாகி உயரமாக பறந்து பவுலரின் கையிலேயே தஞ்சம் அடைந்தது. 8 பந்துகளில் 2 ரன்கள் என பரிதாபமாக பெவிலியனுக்கு திரும்பினார் ரோகித்.
ஷமியின் 3வது ஓவரில், 2 ரன்கள் மட்டுமே. 3 ஓவர்கள் ஆடி, 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது மும்பை. ஹர்திக்கின் 4வது ஓவரில் க்ரீன் ஒரு சிக்ஸர் அடித்தார். அதேபோல், பைஸில் ஒரு பவுண்டரியும் கிடைத்தது. மும்பை ரசிகர்கள் அப்போதுதான் இயல்பு நிலைக்கு திரும்பி ஆசுவாசம் அடைந்தார்கள். ஷமியின் 5வது ஓவரில், கிஷன் ஒருவழியாக ஒரு பவுண்டரி அடித்தார். 6வது ஓவரை வீசிய ரஷீத்கான் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். பவர்ப்ளேயின் முடிவில் 29/1 என வேண்டா வெறுப்பாக காண்டாமிருகம் போல் ஆடிக்கொண்டிருந்தது மும்பை அணி. 17 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து, கே.எல்.ராகுலுக்கு சவால் விட்டுக்கொண்டிருந்தார் கிஷன்.
7வது ஓவரில் நூர் அகமதை இறக்கிவிட்டார் பாண்டியா. க்ரீன் ஒரு சிக்ஸர் அடித்தார். 8வது ஓவரில் கிஷன் விக்கெட்டைத் தூக்கினார் ரஷீத் கான். எதிர்பாராமல் நடந்துவிட்டது என ஹர்திக்கிடம் வருந்தினார் ரஷீத். மும்பை ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். அதே ஓவரில், இளம் புயல், நம்பிக்கை நட்சத்திரம், லிட்டில் சூப்பர் ஸ்டார் திலக் வர்மாவும் அவுட். மேல் முறையீட்டுக்குச் சென்று தீர்ப்பை சாதமாக வாங்கினார் பாண்டியா. மும்பை தடம் புரண்டது.
நூர் அகமதின் 9வது ஓவரில், க்ரீன் ஒரு சிக்ஸர் அடித்தார். ரஷீத்தின் 10வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கிடைக்க, 58/3 என மோசமான நிலையில் இருந்தது மும்பை. நூர் அகமது வீசிய 11வது ஓவரின் 2வது பந்தில், க்ரீன் க்ளீன் போல்டானார். 4வது பந்தில், டேவிட்டும் முட்டையுடன் கிளம்பினார். இத்தனை ரணகளங்களுக்கு மத்தியிலும், அர்ஜூன் டெண்டுல்கரின் பேட்டிங் எனும் பூ பூக்கத்தானே போகிறது என மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்கள் பல்தான்கள்.
ரஷீத்தின் 12வது ஓவரில், ஒரு பவுண்டரி அடித்து ஆரம்பித்த ஸ்கை, ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் முடித்தார். நூர் அகமதின் 13வது ஓவரை, ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் துவங்கினார் வதேரா. ஸ்கையும் அதே ஓவரில் அடித்து ஆட முயன்று, நூர் அகமதிடமே கேட்ச் கொடுத்து டக்-அவுட்டிற்கு திரும்பினார். 14வது ஓவரை வீசவந்தார் மோகித் சர்மா. பியூஷ் சாவ்லா ஒரு பவுண்டரி அடித்தார். லிட்டிலின் 15வது ஓவரில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார் வதேரா. 15 ஓவர் முடிவில் 112/6 என சோகமாக சிரித்துக்கொண்டிருந்தது மும்பை அணி.
மோகித்தின் 16வது ஓவரில், வதேரா ஒரு சிக்ஸர் அடித்து சிங்கிள் தட்ட, சாவ்லா ஒரு சிக்ஸர் அடித்தார். ஷமியின் 17வது ஓவரில், வதேராவின் கேட்சை ஹர்திக் தவறவிட்டதும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் வெறுப்பானார்கள். அர்ஜூன் டெண்டுல்கர் எப்போதான் வருவார் என நகத்தை கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்கள். 18வது ஓவரின் முதல் பந்து, ரன் அவுட் ஆனார் பியூஷ் சாவ்லா. மும்பையே ஆரவாரமாகக் கொண்டாடியது. அர்ஜூன் டெண்டுல்கர் களமிறங்கினார். சந்தித்த முதல் பந்தில் சிங்கிள் தட்டினார். ஓவரின் 4வது பந்தில், வதேராவின் விக்கெட்டைத் தூக்கினார் மோகித். லிட்டிலின் 19வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே. கடைசி ஓவரை வீசவந்த மோகித்தை, டீப் ஸ்கொயர் லெக்கில் ஒரு சிக்ஸர் அடித்தார் அர்ஜூன் டெண்டுல்கர். `வாரே வாவ், வாங்கித்தாரேன் வடா பாவ்' என மும்பையே அலறியது. ஓவரின் 4வது பந்தில், கேட்ச் கொடுத்து 13 ரன்களில் வெளியேறினார். 55 ரன்கள் வித்தியாசத்தின் சிறப்பான வெற்றியை அடைந்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. 21 பந்துகளில் 42 ரன்கள் விளாசிய அபினவ் மனோகருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. `அர்ஜூன் டெண்டுல்கருக்குதான் குடுத்துருக்கணும்' என உச் கொட்டினார்கள் மும்பை ரசிகர்கள்.