LSGvsGT | ‘கே.எல்.ராகுல் கேப்டன்ஸினா அப்படித்தான் இருக்கும்...’ இளந்தாரி அணிகளின் விறுவிறு ஆட்டம்!

7 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது டைட்டன்ஸ். டைட்டன்ஸ் வீரர்கள் எல்லாம் வென்ற மகிழ்ச்சியில் அலறிக்கொண்டிருக்க, பெவிலியனில் அமர்ந்து ஏப்பம் விட்ட ராகுலை, சட்டென திரும்பிப் பார்த்தார் `கடுகடு' காம்பீர்.
LSGvsGT
LSGvsGTAtul Yadav
Published on

கடந்த சீசனில் புதிதாய் உருவான இளந்தாரி அணிகள் லக்னோ சூப்பர் ஜெயன்ட் மற்றும் குஜராத் டைட்டன்ஸ். கடந்த முறை போலவே இம்முறையும், விடிஞ்சு எழுந்திருச்சு நல்லா எண்ணெய் தேய்ச்சு குளிச்சுட்டு, வெடக்கோழி அடிச்சு, மிதக்க மிதக்க நல்லெண்ணயை ஊத்தி, சுடச்சுட குழம்ப குடிச்சுட்டு, தூக்கம் போட்டு எழுந்திருச்சு எவனடா தூக்கிப்போட்டு மிதிக்கலாம் என்றுதான் இரு அணிகளும் சுற்றி கொண்டிருக்கின்றன.

இப்படி இருக்கையில், இந்த இரு அணிகளுமே மோதினால் என்னாகும்?
GT
GTAtul Yadav

சாஹாவும், கில்லும் குஜராத் டைட்டன்ஸின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீச வந்தார் நவீன் உல் ஹக். முதல் ஓவரின் வெறும் 4 ரன்கள் மட்டுமே. 2வது ஓவரை க்ருணாலிடம் கொடுத்தார் ராகுல். 2வது பந்திலேயே கில்லின் விக்கெட்டை நல்லி எலும்பைப் போல் கடித்தார் க்ருணால். வாத்து முட்டை பொரியலுடன் நடையைக் கட்டினார் கில். இந்த ஓவரில், 1 ரன் மட்டுமே.

நவீன் வீசிய 3வது ஓவரின் 3வது பந்தை, பவுண்டரிக்கு பறக்கவிட்டார் சாஹா. க்ருணால் வீசிய அடுத்த ஓவரில், சாஹா ஒரு பவுண்டரியை பொட்டலம் கட்டினார். 5வது ஒவரை வீச வந்தார் ஆவேஷ் கான். மீண்டும் ஒரு பவுண்டரி அடித்தார் சாஹா. ஓவருக்கு ஒரு பவுண்டரி என தட்டிக்கொண்டிருந்த சாஹா, பிஷ்னோயின் 6வது ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை வெளுத்துவிட்டார். பவர்ப்ளேயின் முடிவில் 40/1 என ஸ்டார்ட்டரிலேயே சொதப்பியிருந்து டைட்டன்ஸ் அணி.

க்ருணால் வீசிய 7வது ஓவரில், 4 ரன்கள் மட்டுமே. ஸ்டாய்னிஸ் வீசிய 8வது ஓவரின் கடைசிப்பந்தில், சாஹா ஒரு பவுண்டரி தட்டினார். பிஷ்னோயின் 9வது ஓவரில், ஒரு வழியாக ஒரு பவுண்டரியை அடித்தார் ஹர்திக். அதே ஓவரில், ஐஸ்க்ரீம் மேல் வைத்த குளோப் ஜாமுனைப் போல் ஒரு சிக்ஸரையும் சேர்த்து வெளுத்துவிட்டார். லாலேட்டன் வீசிய 10வது ஓவரில், யாரும் வாலாட்ட முடியவில்லை. 6 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 10 ஓவர் முடிவில், 71/1 என மெயின் கோர்ஸையும் சுமாராகவே தொடங்கியது டைட்டன்ஸ். 11வது ஓவரில், சாஹாவின் விக்கெட்டைக் கழட்டினார் க்ருணால். இறங்கி வந்து லாங் ஆனில் இருந்த ஹூடாவிடம் கேட்ச் கொடுத்தார். 4-0-16-2 என அற்புதமாக தனது ஓவரை முடித்தார் அண்ணன் பாண்டியா.

GT
GTAtul Yadav

அடுத்த ஓவரிலேயே, மனோகரின் விக்கெட்டைக் கழட்டினார் லாலேட்டன் மிஸ்ரா. நங்கென இழுத்து அடிக்க, அது அழகாக டீப் கவரில் கேட்சானது. ஆவேஷ் கான் வீசிய 13வது ஓவரில், விஜய் சங்கர் ஒரு பவுண்டரி அடித்தார். ஸ்டாய்னிஸ் வீசிய 14வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே. 15வது ஓவர் வீசிய நவீன், சங்கரின் விக்கெட்டைத் தூக்கினார். சங்கர் ஒரு சிக்ஸர் அடிக்க முயன்று பேட்டை சுழற்ற, பந்து ஸ்டெம்ப்பை அடித்தது. 15 ஓவர் முடிவில், 92/4 என சுமாராக தொடங்கிய மெயின் கோர்ஸை மிகவும் சுமாராக முடித்தது.

ஹர்திக்கும், மில்லரும் களத்தில் இருக்க, 16வது ஓவரில் வெரும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார் பிஷ்னோய். அடுத்த ஓவரை வீசிய ஆவேஷ் கானும், 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஆக, டைட்டன்ஸ் படைத்த டெஸர்ட்டும் இனிக்கவில்லை என ரசிகர்கள் வருத்தமானபோது, ஒரு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் என பிஷ்னோயின் ஓவரை பிய்த்து உதறினார் பாண்டியா. ஆனால், அடுத்த ஒவரில் மீண்டும் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது. நவீன் உல் ஹக் அற்புதமாக பந்து வீசினார். ஸ்டோய்னிஸ் வீசிய 20வது ஓவரின் முதல் பந்தை சிக்ஸர் அடித்த பாண்டிய, அடுத்த பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஓவரின் கடைசிப்பந்தில், மில்லரும் அவுட்! இந்த ஓவரிலும் 9 ரன்கள் மட்டுமே கிடைக்க, 135/6 என சுமாரான விருந்து படைத்தது டைட்டன்ஸ் அணி.

GT
GTAtul Yadav

மெதுவான பிட்ச், பேட்டிங்கிற்கு அவ்வளவு சாதகமாக இல்லையெனினும் 136 ரன்கள் என்பது அவ்வளவு கடினமான இலக்கு அல்ல.

`லக்னோ ஜெயிக்குது' என முதல் இன்னிங்ஸிலேயே முடிவு செய்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க கிளம்பிவிட்டார்கள் லக்னோ ரசிகர்கள். `எல்லாம் முடிஞ்சுப்போச்சு', என டி.வி-யை அணைத்தார்கள் குஜராத் ரசிகர்கள்.

ராகுலும் மேயர்ஸும் லக்னோ அணிக்காக ஓபனிங் இறங்க, முதல் ஓவரை வீசினார் முகமது ஷமி. முதல் ஓவரே மெய்டன். ரசிகர்களுக்கு விருந்து வைக்காமல், ராகுலே சாப்பிட துவங்கினார். நல்ல ஸ்டார்ட்டர்! 2வது ஓவரை வீசிய ஜெயந்த் யாதவ், மேயர்ஸுக்கு ஒரு பவுண்டரி கொடுத்தார். ஷமி வீசிய 3வது ஓவரில், ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்தார் ராகுல். லக்னோ ரசிகர்கள் எந்த ஆரவாரமும் செய்யவில்லை. ஜெயந்த் யாதவின் 4வது ஓவரில், மீண்டும் ஒரு பவுண்டரி அடித்தார் மேயர்ஸ். 5வது ஓவரை வீசவந்தார் ரஷீத் கான். தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை பறக்கவிட்டார் ராகுல். அதே ஓவரில், மேயர்ஸ் ஒரு சிக்ஸர். ரஷீத் கானை அடித்த அடியில், மேட்ச் முடிந்தது என டைட்டன்ஸ் ரசிகர்கள் முடிவே செய்துவிட்டார்கள்.

LSGvsGT
LSGvsGTAtul Yadav

அடுத்த ஓவரை வீசிய மோகித் சர்மா, 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார். பவர்ப்ளேயின் முடிவில், 53/0 என சிறப்பாக தொடங்கியிருந்தது லக்னோ அணி. `முதல் ஓவரில் பந்தைத் திண்றது, டேஸ்ட் பார்ப்பதற்காக' என சமாளித்தார் ராகுல். ரசிகர்களும் அப்பாவியாக தலையாட்டினார்கள். 84 பந்துகளில் 83 ரன்கள் தேவை. 7வது ஓவரில், மேயர்ஸின் விக்கெட்டைக் கழட்டினார் ரஷீத் கான். ஸ்டெம்ப் காலி! அடுத்து, க்ருணால் களமிறங்கினார். நூர் அகமது வீசிய 8வது ஓவரில், ஒரு பவுண்டரி அடித்தார் கே.எல்.ராகுல். ரஷீத்தின் 9வது ஓவரில், க்ருணால் ஒரு பவுண்டரி விளாசினார். தம்பி வீசிய 10வது ஓவரின் கடைசிப்பந்தை, பவுண்டரிக்கு விரட்டினார் அண்ணன். 10 ஓவர் முடிவில், 80/1 என மெயின் கோர்ஸையும் அற்புதமாக தொடங்கியது லக்னோ அணி. 60 பந்துகளில் 56 ரன்கள் மட்டுமே தேவை.

ரஷீத் வீசிய 11வது ஓவரில், ராகுல் ஒரு பவுண்டரி அடித்தார். 12வது ஓவரை வீசிய நூர் அகமத், 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். தெவாட்டியாவின் 13வது ஓவரில், தனது அரைசதத்தை நிறைவு செய்த கே.எல்.ராகுல், ஒரு சிக்ஸரையும் பறக்கவிட்டார். ஜெயந்த் யாதவின் 14வது ஒவரில் ராகுல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை மிஸ் செய்தார் விஜய் சங்கர். டைட்டன்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். நூர் வீசிய 15வது ஓவரில், க்ருணாலை ஸ்டெம்பிங் செய்தார் சாஹா.

15 ஓவர் முடிவில், 106/2 என மெயின் கோர்ஸ் முடிந்தபோது லக்னோ ரசிகர்களுக்கு லேசாக தொண்டைக் கவ்வியது. `கே.எல்.ராகுல் கேப்டன்ஸினா அப்படித்தான் இருக்கும்' என்றது லக்னோ அணி. 14-15 ஓவரில் முடித்திருக்க வேண்டிய மேட்ச், இன்னும் 30 பந்துகளில் 30 ரன்கள் தேவை.
LSGvsGT
LSGvsGT

16 ஓவரை வீசிய ஜெயந்த் யாதவ், 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 17வது ஓவரில், பூரனின் விக்கெட்டைக் கழட்டினார் நூர். 18 பந்துகளில் 23 ரன்கள் தேவை. மோகித் சர்மா வீசிய 18வது ஓவரில், 6 ரன்கள் மட்டுமே. 12 பந்துகளில் 17 ரன்கள் தேவை. 19வது ஓவரை வீசவந்த ஷமி, வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்தார். 6 பந்துகளில் 12 ரன்கள் தேவை. கே.எல்.ராகுலின் கண்களுக்கு பந்து தெரியவே இல்லை. தடவினார்! முதல் பந்து, டபுள்ஸ் எடுத்தார் ராகுல்.

2வது பந்தில், ஜெயந்த் யாதவிடம் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார் ராகுல். எளிதாக ஜெயிக்க வேண்டிய மேட்ச், ஆரஞ்சு கேப்பிற்கு ஆசைப்பட்டு அணியை அதல பாதாளத்திற்கு தள்ளினார் கேப்டன் ராகுல். 13வது ஓவரில் இருந்து ஒரு பவுண்டரியை அடிக்க முக்கிக் கொண்டிருக்கிறது லக்னோ அணி. அடுத்து களமிறங்கிய ஸ்டாய்னிஸும், முதல் பந்திலேயே தூக்கி அடித்து மில்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

LSGvsGT
LSGvsGTAtul Yadav

4வது பந்தை ஹூடா தட்டிவிட்டு ஓட, இரண்டாவது ரன் எடுக்கும் முயற்சியில் பதோனி காலி. 5வது பந்தில், ஹூடா மீண்டும் அதையே செய்ய, இம்முறை பந்தை எடுத்து கீப்பரிடம் எறிந்தார்கள். ஹூடா ரன் அவுட்! கடைசிப்பந்தை பிஷ்னோய் ஒரு சுழற்று சுழற்றினார். டாட். 7 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது டைட்டன்ஸ். டைட்டன்ஸ் வீரர்கள் எல்லாம் வென்ற மகிழ்ச்சியில் அலறிக்கொண்டிருக்க, பெவிலியனில் அமர்ந்து ஏப்பம் விட்ட ராகுலை, சட்டென திரும்பிப் பார்த்தார் `கடுகடு' காம்பீர். சிறப்பாக பந்து வீசிய மோகித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com