இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்துவரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் எதிர்வரும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. ராகுல் டிராவிட் தொடர்ந்து செயல்பட விருப்பம் தெரிவிக்காத நிலையில், அவருடைய பதவிக்கு உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விண்ணப்பம் அனுப்புவதற்கான கடைசித் தேதி மே 27. அதேநேரத்தில் இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் தலைமைப் பயிற்சியாளர் ஜூலை 2024 முதல் டிசம்பர் 2027 வரை பணியாற்றலாம் எனவும், டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு பொறுப்பை ஏற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்தப் பதவிக்கு நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெம்மிங், ஆஸ்திரேலிய வீரர் ஜஸ்டின் லாங்கர், இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோரின் பெயர்கள் பேசப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அந்தப் பட்டியலில் கொல்கத்தா அணியின் ஆலோசகரான கெளதம் காம்பீர் பெயரும் அடிபடுகிறது. இதுகுறித்து, பிசிசிஐயும் அவரிடம் அணுகியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஐபிஎல் 2024 தொடர் நிறைவடைந்தபிறகே அதுகுறித்த செய்திகள் மேலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கெளதம் காம்பீர் இதுவரை, எந்த அணிக்கும் முழுநேர பயிற்சியாளராக இருந்ததில்லை. ஆனால், தற்போது கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் லக்னோ அணியின் வழிகாட்டியாக இருந்தார். அப்போது, அந்த அணி இரண்டு முறை பிளேஆஃப்களை எட்டியது குறிப்பிடத்தக்கது. தவிர, தற்போது கொல்கத்தா அணியும் பிளேஆப்-க்குள் நுழைந்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம், கெளதம் காம்பீரின் யுக்தியே எனக் கூறப்படுகிறது.
இது ஒருபுறமிருந்தாலும், கெளதம் காம்பீர் 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிகளிலும் ஓர் அங்கமாக இருந்துள்ளார். அதன் இறுதிப் போட்டிகளிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். மேலும், அவர் ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்த காலகட்டத்தில், இரண்டு முறை கோப்பைகளையும் வாங்கி ஆச்சர்யப்படுத்தினார். இதனாலேயே அவரது பெயரும் அடிபடுகிறது.