நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது. இதனால், திரும்பும் திசையெல்லாம் அவ்வணி பற்றிய பேச்சே வைரலாகி வருகிறது. அதிலும் அந்த அணி சாம்பியன் ஆனதற்கு முழுக்கக் முழுக்க கவுதம் காம்பீர்தான் எனப் பேசப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு, கொல்கத்தா அணி, ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு மேற்கிந்திய வீரர் சுனில் நரைனும் காரணமான ஒருவர்.
அவருடைய பேட்டிங் மற்றும் பவுலிங் நடப்பு ஆண்டு சிறப்பாக இருந்தது. இந்த நிலையில் அவருடைய நம்பிக்கை குறித்தும், நட்பு குறித்தும கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் காம்பீர் பேட்டில் ஒன்றில் தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது.
அதில், “ஐபிஎல் தொடரின் Most Valuable Player Award பெறவில்லை என்றாலும் கேகேஆர் அணியின் எம்விபி வீரர் சுனில் நரைன்தான். அவரின் திறமையை இன்னும் சில ஆண்டுகள் நிச்சயமாகப் பார்க்க முடியும். தாம் ஆல்ரவுண்டர் என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துள்ளார். இன்னும் அவர், அணிக்காக ஏகப்பட்ட திறமைகளை வழங்குவார். கடந்த 2012ஆம் ஆண்டு முதல்முறையாக சுனில் நரைன் கேகேஆர் அணியால் தேர்வு செய்யப்பட்டார். அப்போது, ஜெய்ப்பூரில் நாங்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தோம்.
அங்குள்ள ஒரு காபி ஷாப்பில் மதிய உணவை சாப்பிட முடிவு செய்தேன். அப்போது சுனில் நரைனையும் அங்கு வருமாறு அழைத்திருந்தேன். அங்கு வந்த அவர் என்னிடம் ஒரு வார்த்தைகூட பேசாது மிகவும் வெட்கப்பட்டார். எனினும், அதற்குப் பிறகு அவர் என்னிடம் முதல் வார்த்தையாக, ’ஐபிஎல் தொடரை பார்க்க எனது காதலியை அழைத்து வரலாமா’ எனக் கேட்டார். அன்று ஆரம்பித்த நட்பு, இன்றுவரை தொடர்கிறது. இருவரும் சகோதரர்கள்போல இருக்கிறோம். இருவரும் எந்த நேரத்திலும் போனில் பேசிக்கொள்ளும் அளவுக்குத் துணையாக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.