பான்டிங்கை நீக்கிய கங்குலி... எப்படியிருந்த கங்குலி..?

பான்டிங் தலைமையில் முன்னேற்றமில்லையா? கங்குலியின் கருத்து பெரும் சர்ச்சை
கங்குலி பான்டிங்
கங்குலி பான்டிங்IPL
Published on

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் ரிக்கி பான்டிங். 2025 ஐபிஎல் தொடரின்போது சௌரவ் கங்குலி அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றவுள்ளார். இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளாக பான்டிங் தலைமையில் கேபிடல்ஸ் அணி முன்னேற்றம் காணவில்லை என்று கங்குலி கூறியிருப்பது பெரும் விமர்சனங்களையும், விவாதங்களையும் கிளப்பியிருக்கிறது. கங்குலி பேசியிருப்பதற்கு ரசிகர்களும் சமூக வலைதளங்களிலும் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். இவர் பயிற்சியாளராக இருந்த இந்தக் காலகட்டத்தில் அந்த அணி ஒரு முறை இறுதிப் போட்டிக்கும், இரு முறை பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியது. மற்ற 4 சீசன்களிலும் குரூப் சுற்றோடு வெளியேறியது டெல்லி கேபிடல்ஸ். 17 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தங்களின் முதல் ஐபிஎல் கோப்பையை தேடிக்கொண்டிருக்கும் அந்த அணிக்கு இந்த செயல்பாடுகள் திருப்தியளிப்பதாக இல்லை. அதனால் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார்கள்.

இந்தக் காலகட்டத்தில் பான்டிங்கின் அணுகுமுறை பெருமளவு விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இந்திய இளம் வீரர்களுக்கு அவர் தொடர்ந்து போதுமான வாய்ப்புகள் கொடுத்ததில்லை. அதுபோக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்களை அவர் அதிகம் அணியில் இணைத்திருக்கிறார். அதுவும் அந்த அணியின் காம்பினேஷன்களுக்கு உதவியதில்லை. அதுவே அந்த அணியின் செயல்பாட்டில் பிரதிபலித்துக்கொண்டிருந்தது. கடந்த சீசன்களின் சொதப்பல்களுக்குப் பிறகு எப்படியும் பயிற்சியாளர் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது நடந்திருக்கிறது.

இந்த முடிவில் பெரிய ஆச்சர்யம் இல்லை என்றாலும், அதுபற்றி கங்குலி தெரிவித்திருக்கும் கருத்து தான் இப்போது பேசுபொருளாகியிருக்கிறது. "இந்த 7 ஆண்டுகளில் பான்டிங்கின் தலைமையில் அணி பெரிய முன்னேற்றம் காணவில்லை. அதனால் அவர் அந்தப் பொறுப்பில் தொடரப்போவதில்லை. இந்த ஆண்டு நான் டெல்லி கேபிடல்ஸின் பயிற்சியாளராக செயல்படவுள்ளேன். அடுத்த சீசனுக்கான ஏலத்துக்கு இப்போதே தயாராகவேண்டும். அடுத்த ஆண்டு என்னுடைய செயல்பாடு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்" என்று கூறினார் கங்குலி. இதுதான் இப்போது விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது.

கங்குலியின் வார்த்தைகள் முழுக்கவும் பான்டிங்கை குறை சொல்வது போல் இருக்கின்றன. பான்டிங் பயிற்சியாளராக இருந்த இந்த 7 ஆண்டுகளில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் அதையெல்லாம் எதுவும் கருத்தில் கொள்ளாமல், அந்த அணியில் எந்த முன்னேற்றமும் காணவில்லை என்று கூறியிருப்பது சரியாக இல்லை. இத்தனைக்கும் கடந்த 2 சீசன்களாக கேப்டன் ரிஷப் பண்ட்டின் காயம் மற்றும் ஃபிட்னஸ் பிரச்சனைகளால் அந்த அணி அவதிப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், ஐபிஎல் ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி எப்படி செயல்படும் என்று ஊருக்கே தெரியும். எத்தனை கோடிகளோடு ஏலத்துக்குள் நுழைந்தாலும், பேலன்ஸே இல்லாத ஸ்குவாடோடு தான் அவர்கள் ஏலத்தை முடித்திருக்கிறார்கள். இது அனைத்தையும் விட பிராதானமாக, அவர்களின் உரிமையாளர்கள்! அந்த அணிக்கு இருக்கும் இரு உரிமையாளர்களில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொருவரின் அணியின் நிர்வாகத்தை கவனித்துக்கொள்வார்கள். அதில் இரு தரப்புக்கும் இடையே ஆயிரம் கருத்துவேறுபாடுகள் வேறு. இப்படி டாப் டூ பாட்டம் பிரச்சனைகளை வைத்துக்கொண்டு வெளிநாட்டு பயிற்சியாளர் மீது அனைத்தையும் இறக்கிவைத்திருக்கிறார்கள்.

கங்குலியின் கருத்துகளும் அவரது செயல்பாடுகளும் சர்ச்சையாவது சமீபமாக வாடிக்கையாகிவருகிறது. அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தபோது விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து ஒதுக்கப்பட்டார். விராட் அப்பதவியிலிருந்து விலக்கப்பட்ட விதம் பெருவலாகப் பேசப்பட்டது. கோலியிடம் எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லாமல் அவர்கள் முடிவு எடுத்துவிட்டு, பின்னர் எல்லாம் சரியாக சொல்லப்பட்டது என்று கங்குலி சொன்னது அப்போதே கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதற்குப் பிறகு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றபிறகு, ரோஹித் ஷர்மாவை கேப்டனாக்கியது தான் தான் என்று அதற்கு பெருமை தேடிக்கொள்ளும் விதத்தில் அவர் ட்வீட் செய்ததும் விமர்சனத்துக்குள்ளானது. இப்படி தொடர்ந்து கேள்விக்குட்படுத்தும் விதத்திலேயே கருத்துகள் தெரிவித்து வந்திருக்கிறார் கங்குலி.


ஒருகாலத்தில் இந்திய கிரிக்கெட்டே கொண்டாடிக்கொண்டிருந்த கங்குலி, காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மரியாதையை இழந்துகொண்டிருக்கிறார். விளையாடிய காலத்தில் கிரெக் சேப்பலோடு ஏற்பட்ட பிரச்சனை பெருமளவு பேசப்பட்டது. அப்போதும் கூட எல்லோரும் கங்குலியின் பக்கம் நியாயம் இருப்பதாகவே கருதினார்கள். ஆனால் அவர் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக மாறிய பிறகு நடந்த விஷயங்கள் அனைத்தும் அவருக்குப் பாதகமாகவே அமைந்திருக்கின்றன. கோலி கேப்டன்சி விஷயம் மட்டுமல்ல, ரஞ்சி கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதியம் முதல் பல்வேறு விஷயங்களில் கங்குலி தான் கூறியதை செய்யத் தவறினார். அதனால் தான் இப்போது ரசிகர்கள் பெரிதாக கொதித்தெழுந்திருக்கிறார்கள். "முழுக்க முழுக்க தன்னை மட்டுமே பிரதானப்படுத்தும் ஒரு சுயநலவாதி" என்று கூட கங்குலியைப் பற்றி சமூக வலைதளங்களில் எழுதியிருக்கிறார்கள்.

பான்டிங்குக்கு நன்றி தெரிவித்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் அறிக்கையோடு முடிந்திருக்கவேண்டிய இந்த விஷயம் கங்குலி அறிவித்த விதத்தால் இப்போது அவருக்குப் பெரும் அவப்பெயரை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com