Video: “வெயிட்.. ஜான்டி ரோட்ஸா அது?”- பறவையை போல் பறந்த ஃபீல்டர்! வியந்த பென் ஸ்டோக்ஸ் - DK!

டி20 வைட்டலிட்டி பிளாஸ்ட் லீக் போட்டி ஒன்றில் நம்பவே முடியாத கேட்ச்சை பிடித்த பிராட் க்யூரி கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார் ஒரு ஃபீல்டர்.
Brad Currie-One Handed Catch
Brad Currie-One Handed CatchTwitter
Published on

கிரிக்கெட் உலகமானது சிறந்த ஃபீல்டிங்கிற்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளது. ஒரு சிறந்த ஃபீல்டரால் என்ன செய்யமுடியும் என்று கேட்டால் எந்த போட்டியையும் தலைகீழாக மாற்ற முடியும். அதனால் தான் எந்த ஒரு அணியிலும் சிறந்த ஃபீல்டர்களுக்கென்று தனி இடம் எப்போதும் உண்டு.

பல முக்கியமான போட்டிகளில் எதிரணியினரின் கையிலிருந்து வெற்றிகளை தட்டிப்பறித்தவர்களாக ஃபீல்டர்கள் உள்ளனர். இந்திய ரசிகர்கள் மத்தியில், அப்படியான ஃபீல்டர்களின் பட்டியலில் மார்டின் கப்திலுக்கு முக்கிய இடமுண்டு.

மார்டின் கப்தில் நியூசிலாந்துக்கு எப்படியோ, அப்படி தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரரான ஜான்டி ரோட்ஸ், உலக கிரிக்கெட்டில் ஃபீல்டிங்கிற்கென்று தனி மைல்ஸ்டோனை ஏற்படுத்தியவர்.

உலகின் எந்த ஒரு ஃபீல்டரையும் ஒப்பிட வேண்டுமென்றால் “ஆமாம் இவரு பெரிய ஜான்டி ரோட்ஸ்” என்று தான் ஒப்பிடுவார்கள். ஆனால் பிராட் க்யூரி என்ற இந்த ஃபீல்டர் பிடித்த கேட்ச்சை பார்த்தால் ஜான்டி ரோட்ஸ், மார்டின் கப்தில் கூட இது எப்போதைக்குமான சிறந்த கேட்ச் என்று கூறுவர்.

காற்றில் பறந்து நம்பமுடியாத ஒரு கேட்ச்சை பிடித்த பிராட் க்யூரி!

டி20 வைட்டாலிட்டி பிளாஸ்ட் தொடரின் 78ஆவது போட்டியில் ஹாம்ப்ஷயர் ஹாக்ஸ் மற்றும் சசெக்ஸ் இரண்டு அணிகள் மோதின. முதலில் விளையாடிய சசெக்ஸ் அணி 183 ரன்களை குவித்திருந்தது. இரண்டாவது பேட்டிங் செய்த ஹாம்ப்ஷயர் அணி 184 ரன்கள் இலக்கை விரட்டியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி 11 பந்துகளில் 23 ரன்கள் தேவையென்ற இடத்தில் தான், சசெக்ஸ் அணியின் இளம் வீரரான பிராட் க்யூரி ஒரு அதிசயத்தை நிகழ்த்தி காட்டினார்.

13 பந்துகளில் 25 ரன்களை அடித்து களத்தில் இருந்த பென்னி ஹோவல், ஹாம்ப்ஷயர் அணியின் வெற்றிக்காக மிரட்டிக்கொண்டிருந்தார். 19ஆவது ஓவரை வீசிய மில்ஸ் இரண்டாவது பந்தை லெந்த் பாலாக வீச, அதை ஸ்கொயர் லெக் திசையில் அற்புதமான கனக்ஷன் மூலம் காற்றில் அடித்தார் ஹோவல். பந்தானது நிச்சயம் சிக்சருக்கு தான் செல்லும் என்று நினைத்தனர். பந்து பறந்த இடத்திலிருந்து சில மீட்டர் இடைவெளியில் இருந்த பிராட் க்யூரி அதை தடுத்துவிடுவார் என்று சொன்னால் யாரும் நம்பிகூட இருந்திருக்க மாட்டார்கள். அப்படியான நம்பமுடியாத செயலைதான் அவர் செய்து காட்டினார்.

பெரிய இடைவெளியை கவர் செய்த க்யூரி, காற்றில் பறந்த படியே அந்த பந்தை கேட்ச்சாக மாற்றினார். கமெண்டரியில் இருந்த வர்ணனையாளர்கள் ‘ஒரு நிமிஷம் இருங்க... அதை பார்த்திங்களா’ என்று வாயடைத்து போனார்கள். இதை யாராவது இதற்கு முன் பார்த்திருக்கிறீர்களா என்று கமெண்டேட்டர்ஸ் மிரண்டு போய் அதிசயித்தே போனார்கள். காற்றில் பறந்து வந்த க்யூரி அந்தரத்திலேயே அந்த பந்தை பிடித்து கேட்ச்சாக மாற்றினார்.

அவர் எவ்வளவு இடைவெளியை கவர் செய்தார் பாருங்கள்! - வாயடைத்து போன தினேஷ் கார்த்திக்

பிராட் க்யூரி ஒரு ஸ்காட்டிஷ் சர்வதேச வீரர். இந்த போட்டி தான் டி20 வைட்டலிட்டி பிளாஸ்ட் தொடரில் அவருக்கு அறிமுக போட்டியாகும். 24 வயது இளைஞரான க்யூரின் அற்புதமான கேட்ச், இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் மற்றும் இந்தியாவின் சிறந்த ஃபீல்டர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக் போன்றவர்களிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றது. மேலும் அவரது பந்துவீச்சாளரான மில்ஸிடமிருந்தும் ஒரு ட்வீட்டைப் பெற்றார் க்யூரி. பிராட் க்யூரியின் நம்பமுடியாத கேட்ச்சானது இணையத்தில் எண்ணற்ற பாராட்டுகளை பெற்றுவருகிறது.

கேட்ச் குறித்து ட்வீட் செய்திருக்கும் தினேஷ் கார்த்திக், “இதுவரை பிடிக்கப்பட்ட தலைசிறந்த கேட்ச்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். அவர் டைவ் செய்வதற்கு முன் எவ்வளவு தூரத்தை கடக்கிறார் என்று பாருங்கள்” என ட்வீட் செய்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸ், “பில்த்” என்று ஆச்சரியத்துடன் ட்வீட் செய்துள்ளார். மில்ஸ், “தனித்துவமான ஒன்று, எனது ஃப்ளோவை காப்பாற்றிவிட்டார். சிறப்பான இரவு” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com