என்னதான் ஐபிஎல் தொடரை வர்த்தகம் சார்ந்த, பணம் சார்ந்த ஒரு டோர்னமண்டாகவும், ஐபிஎல்லால் தான் இந்தியா சர்வதேச போட்டிகளில் சரியாக செயல்படாமல் போகிறது முதலான பல குற்றச்சாட்டுகளை வைத்தாலும், தொடர்ந்து வாழ்வாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கும் பல திறமையான வீரர்களை, நாட்டின் பல மூலைகளில் இருந்து கண்டறிந்து, அவர்களுக்கான புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தி தருவதற்கு நிச்சயம் IPL-ஐ பாராட்டியே ஆகவேண்டும்.
இதற்கு முன்னர் ஏழ்மையின் பிடியில் இருந்த பல கிரிக்கெட் வீரர்களை கண்டறிந்துள்ளது ஐபிஎல் தொடர். அந்தவகையில் கடந்த ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் உம்ரான் மாலிக், ரிங்கு சிங், திலக் வர்மா, ரோவ்மன் பவல், குல்தீப் சென் போன்ற வீரர்கள் மிகவும் பின்தங்கிய பொருளாதார நிலையில் இருந்து வந்து IPL ஆடினார்கள். அவர்களை தொடர்ந்து தற்போது சுயாஸ் ஷர்மா என்ற 19 வயது இளைஞருக்கு, அவருடைய வாழ்க்கைக்கான கதவை திறந்து விட்டிருக்கிறது 2023 ஐபிஎல் தொடர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக குறைந்தபட்ச விலைக்கு வாங்கப்பட்டார், டெல்லியை சேர்ந்த சுயாஸ் ஷர்மா. நேற்று நடைபெற்ற RCB-க்கு எதிரான போட்டியில் முதல் முறையாக இம்பேக்ட் வீரராக களமிறங்கிய சுயாஸ், தன்னுடைய அற்புதமான கூக்ளியால் எதிரணி பேட்டர்களை கலங்கடித்தார்.
தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவட், கர்ண் சர்மா என மூன்றுபேரின் விக்கெட்டையும் கைப்பற்றி அசத்திய அவர், கொல்கத்தா வெற்றிபெறுவதற்கான பங்களிப்பை சிறப்பாகவே செய்திருந்தார். இந்நிலையில், சுயாஸ்-ன் குடும்ப சூழ்நிலை குறித்தும், அவருடைய கிரிக்கெட் பயணம் குறித்தும் பேசியுள்ளார், டெல்லி அணியின் பயிற்சியாளர் ரந்தீர் சிங்.
சுயாஸ் குறித்து பேசியிருக்கும் ரந்தீர் சிங், “சுயாஷுக்கு இது எளிதான பயணமாக இருக்கவில்லை. அவர் மிகவும் பின்தங்கிய பொருளாதார குடும்பத்தில் இருந்து தான் கிரிக்கெட் விளையாடி வருகிறார். முன்னாள் டெல்லி சுழற்பந்து வீச்சாளரான சுரேஷ் பத்ரா தான் அவருக்கான திறமையை கண்டறிந்து, அவருடைய கிளப்பிற்காக சுயாஸை விளையாட வைத்தார். ஆனால் சுயாஸுக்கு ஒரு மிகப்பெரிய கடினமான காலகட்டம் அதற்கு பிறகு தான் ஏற்பட்டது. கோவிட்-19 தொற்றுக்கு அவருடைய குருவான சுரேஷ் பத்ராவை அவர் இழந்தார்.
அதன் பிறகு என்ன செய்வதென்று தெரியாமல், மேட்ச் பயிற்சிக்காக என்னிடம் வந்தார். அவருடைய திறமை என்னவென்று எனக்கு முன்கூட்டியே தெரியும், அதனால் அவரை டிடிசிஏ லீக்கில் எங்களுடைய மெட்ராஸ் கிளப்பிற்காகவும், ஓபன் போட்டிகளில் ரன்-ஸ்டார் கிளப்பிற்காகவும் விளையாடுவதற்கு அவருக்கு வாய்ப்பு கொடுத்தோம்" என்று கூறியுள்ளார்.
மேலும் கிரிக்கெட் கனவுகளுக்காக போராடிய ஒரு சிறுவன் எப்படி தன் தந்தையின் உடல்நிலையை சரிசெய்வதற்காகவும் போராடினான் என்று கூறிய அவர், “ தனது குருவை இழந்த சுயாஸ் இன்னொரு பெரிய சவாலையும் அவருடைய சிறிய வயதிலேயே காண வேண்டியிருந்தது. அவரின் தந்தை புற்றுநோயால் கண்டறியப்பட்டார்.
அவருடைய சிகிச்சைக்கு என்ன செய்யலாம் என நினைத்து கொண்டிருந்த போது, தற்போதைய மும்பை இந்தியன்ஸ் மேலாளராக இருக்கும், முன்னாள் டெல்லி சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சங்வி தான், சுயாஸிற்காக முன்வந்து உதவினார். அவருக்கு சுயாஸ் என்றும் கடமைபட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.
கொல்கத்தா, சென்னை, மும்பை கிரிக்கெட் கிளப்களை போல, டெல்லி கிளப் லாபகரமானது இல்லை. ஏனெனில் இங்கு எந்த கிளப்களும் பணம் செலுத்துவதில்லை, முறையான ஒப்பந்தங்கள் எதுவும் போடுவதில்லை. அதனால் சுயாஸுக்கு கிளப்பிலிருந்து எந்த வருமானமும், செலவுக்கான தொகையும் கூட வழங்கப்படவில்லை. நீங்கள் இங்கு தொழில் ரீதியாக வெற்றிபெற வேண்டும் என்றால், நாட்டிற்கான அணியில் விளையாடினால் மட்டும் தான் பெற முடியும்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு டிடிசிஏ சேலஞ்சர் டிராபி போட்டியில் சிறப்பாக விளையாடி ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றிய சுயாஸ், டெல்லி யு-25 அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் என்ன வேடிக்கை தெரியுமா? அவர் வெள்ளை பந்துக்கான போட்டிகளுக்கு மட்டும் தான் எடுக்கப்பட்டார். சிவப்பு பந்து விளையாட்டுகளில் கைவிடப்பட்டார். ஒரு வீரர் எப்படி செயல்படுகிறார் என்று உங்களுக்கு தெரிய நீங்கள் வாய்ப்பு வழங்க வேண்டும் அல்லவா என” ஆதங்கமாக பேசினார் ரந்தீர் சிங்.
கடினமான குடும்ப சூழலில், தன் தந்தையின் உடல்நிலைக்காகவும் சேர்த்து போராடி வரும் 19 வயது இளைஞரான சுயாஸ் ஷர்மா, இந்த ஐபிஎல் தொடரில் மேலும் சிறப்பாக விளையாடி தன் திறமைக்கான இடத்தை அடைய வேண்டும் என வாழ்த்துவோம்.